தவெக: ``ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து..." - முதல்வர் விஜய்யைச் சாடும் டிடிவி தின...
பாஜக-வை துறக்கும் அண்ணாமலை? `மக்கள் இயக்கம்' மூலம் தடம் பதிக்கத் திட்டம்! - டெல்லியில் நடப்பது என்ன?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக, டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை இன்று காலை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அண்ணாமலை - பாஜக உறவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது.
டெல்லி வட்டாரங்கள் ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களின்படி, இந்த சந்திப்பின்போது, இனி தனது சொந்தப் பாதையில் பயணிக்க விரும்புவதாகவும், சுமூகமான முறையில் கட்சியில் இருந்து பிரிய விரும்புவதாகவும் அண்ணாமலை கட்சி மேலிடத்திடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையை கட்சியில் தக்கவைக்க தலைமை இன்னும் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் பாஜக தேசிய தலைவரிடம் விலகல் கடிதத்தை அளித்துவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அண்ணாமலை, பாஜகவில் தனக்கு எதிர்காலம் இருப்பதாகக் கருதவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, உடனடியாக ஒரு கட்சியைத் தொடங்குவதற்குப் பதிலாக, முதலில் ஒரு மக்கள் இயக்கத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைத்து, பல்வேறு தொழில் மற்றும் சமூகப் பின்னணியில் இருந்து வலுவான தொண்டர்கள் நெட்வொர்க்கை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அவர் நடத்தி வரும் "We The Leaders" என்ற லாப நோக்கற்ற தலைமைத்துவ அமைப்பு, அவரது இந்தப் புதிய அரசியல் திட்டத்திற்கு அடித்தளமாக அமையக்கூடும் என்கிறார்கள் சிலர்.
இந்த இயக்கத்தைத் தொடர்ந்து அவர் தொடங்கும் புதிய அரசியல் கட்சி, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது அவரது தனிப்பட்ட செல்வாக்கையும், அமைப்பு ரீதியான வலிமையையும் சோதிக்கும் ஒரு களமாக அமையும். இதனிடையே, அண்ணாமலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha) பதவி வழங்க பாஜக தலைமை முன்வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் சில தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக 234 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நிகழ்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை கணிசமாக உயர்த்தினார் எனும் கருத்து அரசியல் பார்வையாளர்கல் மத்தியில் உள்ளது. அப்போதைய ஆளும் திமுக அரசுக்கு எதிரான அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகள் அவருக்கு கணிசமான தனிப்பட்ட ஆதரவையும் உருவாக்கியது.
சமீப ஆண்டுகளில் கட்சி பெற்ற உத்வேகத்தை நம்பி, பாஜக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என அண்ணாமலை விரும்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஆளும் திமுகவுக்கு எதிரான எதிர்க்கட்சி வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், பாஜக தலைமை அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜகவில் தலைமை மாற்றங்களை வலியுறுத்தியதன் பேரிலேயே இந்த கூட்டணி மீண்டும் அமைந்ததாகவும், அதன் விளைவாகவே அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடாததும், கட்சியின் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்காததும், அவர் கொஞ்சம் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பதை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
நேற்று டெல்லி புறப்பட்டபோது கூட, செய்தியாளர்கள் விலகல் குறித்து கேள்வி எழுப்பிய போதும் அதனை மறுக்காமல், `இரண்டு நாளில் எல்லாம் சொல்கிறேன்' என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.















