செய்திகள் :

`பெண்களால் ஆழமான கருத்துகளை முன்வைக்க முடியும்.!” - எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் | Chennai Book Fair

post image

ஒரு ஆணின் பார்வையில், ஆண் எழுதும் எழுத்துக்களே பெரிதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெண்ணின் பார்வையும், கருத்தும், எழுத்தும் பதிவு செய்யப்படுவது அவசியமாகிறது.

அதற்கான ஒரு வெளியை உருவாக்க, பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பதிப்பகம் தான் "Her stories". பெண்ணெழுத்தின் ஆழத்தை அறிய, சென்னையில் நடந்துவரும் 49-வது புத்தக திருவிழாவில் "Her stories" அரங்கை பார்வையிட்டு, அங்கு மும்முரமாக வாசகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த எழுத்தாளர் நிவேதிதா லூயிஸை சந்தித்து பேசினோம்.

``ஆண், பெண், திருநர் என அனைத்து பாலினரும் தொடர்ந்து எழுதி வந்தாலும், பொது வெளியில் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. ஒரு அழைப்பிதழில் கூட பெரும்பாலும் ஆண்களின் பெயர்களே இடம்பெறும். அப்படியான சூழலில், பெண்களுக்கென ஒரு வெளி தேவைப்படுகிறது.

எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

Her Stories

நம் சமூகம் பாகுபாடு நிறைந்த சமூகமே. அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழலும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கும் திருநர் சமூகத்தினருக்கும் சமமாக கிடைப்பதில்லை. அதனால் புதிதாக எழுதத் தொடங்கும் பெண்களையும் திருநர்களையும் ஒரு கை பிடித்து வழிநடத்தும் பணியையே Her Stories செய்கிறது.

பெண் எழுதினாலே புலம்பல்கள், கவிதைகள், கதைகள், நாவல்கள் மட்டுமே எழுதுவார்கள்; அவர்களால் ஆய்வுகள் அல்லது ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட படைப்புகளை எழுத முடியாது என்ற எண்ணமும் பரவலாக உள்ளது. அது உண்மை இல்லை. பெண்களால் பல்வேறு துறைகளைச் சார்ந்து எழுத முடியும்; ஆழமான கருத்துகளையும் முன்வைக்க முடியும்.

புதிதாக புத்தகம் எழுதும் பெண்களுக்கு சிறிய வாய்ப்பளித்தாலே, அவர்கள் தொடர்ந்து எழுத்துலகில் சாதிப்பார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்தப் பதிப்பகத்தை தொடங்கினோம். இங்கு 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பெண்கள் எழுதிய நூல்கள் வெளிவந்துள்ளன.

இங்கு இடம்பெறும் நூல்களில் மருதன், ஞானி ஆகிய இருவரின் படைப்புகள் மட்டுமே ஆண்கள் எழுதியவை; அவர்களும் பெண்ணியலாளர்கள் தான். இதில் 80 சதவீதம் அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகள். எழுத ஆர்வமுள்ள பெண்களுக்கு எங்களது வலைத்தளத்தில் தொடர் எழுத வாய்ப்பளிக்கிறோம். அது நன்றாக இருக்கும் பட்சத்தில், அதையே புத்தகமாக வெளியிடுகிறோம்.

அவ்வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த முக்கிய நூலாக மானுடவியலாளர் தீபிகா தீனதயாளன் எழுதிய “மனிதரைப் படிப்போம்” குறிப்பிடத்தக்கது. இந்த நூல் பெண்ணிய நோக்கில் மானுடவியலை அணுகுகிறது.

எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு புதிய வரவாக தனசீலி திவ்யநாதன் எழுதிய “ஏவாளும் சாராளும்” நூல் வெளியாகியுள்ளது. இது பைபிளில் இடம்பெறும் பெண்களையும் அதன் பெண்ணிய கூறுகளையும் ஆராய்கிறது.

இதுதவிர இரண்டு ஆங்கில நூல்களும் வெளிவந்துள்ளன. Half Moon and the Other Stories மற்றும் Postcards from the Parallel Universe. இந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்களும் இருபது வயதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய தலைமுறை பெண்கள், குறிப்பாக Gen Z இளைஞர்கள், ஆங்கிலத்தில் எழுதுவதையே அதிகம் விரும்புவதை கவனித்தோம். அதனால் ஆங்கில நூல்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளோம். மேலும், சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிடுகிறோம். என்னுடைய “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற நூல், From Aadhichanallur to Keezhadi என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

இந்த ஆண்டு “பெண்ணெழுத்து” என்ற தலைப்பில் போட்டி ஒன்றை நடத்தி, அதில் சிறப்பாகத் தேர்வான நூல்களை கட்டுரை, சூழல் இலக்கியம், சிறுகதை என எட்டு பிரிவுகளாக பிரித்து, முதல் பரிசு பெற்ற எட்டு நூல்களையும் அச்சுக்கு கொண்டு வந்துள்ளோம். மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல் பெண்களை மையப்படுத்திய பெண்ணெழுத்து இதழை மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறோம். அந்த இதழும் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

விகடன் பிரசுரம்
விகடன் பிரசுரம்

`எங்கள் கதையை எங்களால்தான் எழுத முடியும் என்பதன் விளைவுதான் திருநங்கை ப்ரஸ்!' - நிறுவனர் கிரேஸ் பானு

தமிழ் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுப் பெருவிழாவாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம... மேலும் பார்க்க

MAHER: 19-வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்திய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் நிகர்நிலைப்பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MAHER), அதன் ஒரு அங்கமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவ... மேலும் பார்க்க

ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா!

சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை-லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா - 2025 அதன் பல்கலைக்கழக வ... மேலும் பார்க்க