மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் ...
பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினியர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தன்னைக் காதலிப்பதாக நடித்து நெருக்கமாக இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகக் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கில் 2020 ஏப்ரல் 24-ம் தேதி காசி கைது செய்யப்பட்டார். காசியின் மொபைல் போனை போலீஸார் பரிசோதித்து பார்த்தபோது, பல பெண்களை வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சிக்கின. காசியை போலீஸார் விசாரித்தபோது தமிழகம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.
சிறுமி உள்பட 7 பெண்கள் காசி மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரு கந்து வட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து காசி வழக்கு கடந்த 2020 மே 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது ஜிம் பாடியைக் காட்டியும், தன்னை பணக்காரனாகக் காட்டியும் பெண்களிடம் காசி நெருங்கியிருக்கிறான். லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இருந்த வீடியோவில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட பெண்களின் 1900 வீடியோக்கள் இருந்துள்ளன.

காசி வலையில் வீழும் பெண்களின் மொபைல் எண்களைத் தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் உள்ளிட்டோ கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாகர்கோவில் காசி மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2 போக்ஸோ வழக்குகள், ஒரு கந்துவட்டி வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதியப்பட்டன. காசி மீதான 6 வழக்குகள் நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டிலும், ஒரு வழக்கு போக்ஸோ கோர்ட்டிலும், மற்றொரு வழக்கு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் விசாரிக்கப்பட்டன.

இதில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 22 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் மகிளா கோர்ட் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம், இளம்பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நாகர்கோவில் மகிளா கோர்ட் அளித்த தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு, இந்தத் தீர்ப்பு முக்கிய பாடமாக அமைய வேண்டும் எனக்கூறி இந்தத் தீர்ப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
















