6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத...
மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவும் மும்பை, நாசிக் மாநகராட்சிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. அதேசமயம் மும்பையில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தனது கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியை சேர்க்க முயன்று வருகிறது. இது தவிர சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், காங்கிரஸ் கட்சியும் தங்களது அணிக்கு இழுக்க முயன்று வருகின்றன.
ஆனால் சரத்பவார் கட்சி எந்த கூட்டணியில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆரம்பத்தில் ராஜ் தாக்கரே கூட்டணியில் இருப்பதால் அவர் மூலம் வடமாநிலத்தவர்கள் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்று கூறி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி சேர முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துவிட்டது. ஆனால் அதனைப்பற்றி கவலைப்படாமல் தாக்கரே சகோதரர்கள் இருவரும் கூட்டணி அமைத்துவிட்டனர்.

இப்போது மும்பையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று கூறி உத்தவ் தாக்கரேயிடம் காங்கிரஸ் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. இது குறித்து உத்தவ் தாக்கரே கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில்,'' நாங்கள் மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவார் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட தயாராக இருக்கிறோம். ஆனால் நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட நாங்கள் தயாராக இல்லை. தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் கூட்டணி குறித்து எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே எங்களால் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடியாது''என்று தெரிவித்தார்.
கைவிட்ட சரத்பவார்
மும்பையில் இப்படி என்றால் புனேயில் வேறு மாதிரியான நிலை இருக்கிறது. புனேயில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தது. ஆனால் அங்கு சரத்பவார் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராகி வருகிறார். புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு பவார்களும் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் புனேயில் பா.ஜ.கவை கழற்றிவிட்டுவிட்டார். அங்கு பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. சொந்தங்கள் பிரிந்தபோதும் திடீரென தேர்தலில் பவார்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை கைவிட்டுவிட்டனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் கூறுகையில்,''புனேயில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத்பவாருடன் பேசியிருக்கிறோம். ஆனால் அஜித்பவாரும், சரத்பவாரும் கூட்டணி சேரப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது போன்று நடந்தால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்'' என்று தெரிவித்தார். அதேசமயம் அஜித்பவார் கட்சியுடன் கூட்டணி வைக்க சரத்பவார் கட்சியின் புனே தலைவர் பிரசாந்த் ஜக்தாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு அவர் கட்சியில் தனது பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தாக்கரே சகோதரர்கள், பவார்கள் கைவிட்டுவிட்ட நிலையில் பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பிரகாஷ் அம்பேத்கர் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைக்கு ஒத்துவராத கோரிக்கையை முன்வைக்கிறார் என்கிறார்கள். இதனால் அவருடனும் கூட்டணி வைக்க முடியாத நிலையில் காங்கிரஸ் தனிமரமாக நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.















