மகுடம்: ``ஒரு வாரம் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை" - நடிகை அஞ்சலி
மகுடம்: ``ஒரு வாரம் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை" - நடிகை அஞ்சலி
நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி,``‘மகுடம்’ திரைப்படம் எங்கள் குழுவிற்குப் பல காரணங்களால் மிக நெருக்கமான படம். அதில் முக்கியக் காரணம், விஷால் முதன்முறையாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஒருவரது முதல் இயக்கம், முதல் தயாரிப்பு அல்லது முதல் திரைப்படம் என்பவை எப்போதுமே முதல் குழந்தையைப் போலச் சிறப்புக் கவனத்தைப் பெறும்.

அந்த வகையில், இந்தத் திரைப்படத்திற்காகவும் இதன் டிரெய்லர் உருவாக்கத்திற்காகவும் படக்குழுவினர் போட்ட உழைப்பை நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அதனால், இந்த டிரெய்லருக்கும் சரி, திரைப்படத்திற்கும் சரி, கிடைக்கவிருக்கும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் விஷால் முற்றிலும் தகுதியானவர்.
நான் இந்தப் படத்திற்கான டப்பிங் பேசி முடித்த பிறகு, சுமார் ஒரு வாரத்திற்கு அந்த அனுபவத்திலிருந்து என்னால் வெளியே வர இயலவில்லை. சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம்மிடம் இருந்து அதிக ஆற்றலையும் கவனத்தையும் ஈர்க்கும். இந்தத் திரைப்படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் ‘அன்னபூரணி’ என்னும் கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். இயக்குநர் என் கதாபாத்திரத்தை மிக அழகாக எழுதியிருக்கிறார். என் திரைப் பயணத்தில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் பட்டியலில் இந்த அன்னபூரணி கதாபாத்திரத்திற்கு நிச்சயமாக ஒரு முக்கிய இடம் உண்டு. மேலும், தமிழில் முதன்முறையாக இதில் நான் சண்டைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.

ஏற்கெனவே விஷால் மற்றும் எனது கூட்டணியில் வெளியான 'நாச்சிந்தி மச்சான்' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்தப் படத்திலும் அமைந்திருக்கும் அனைத்துமே மிகவும் நேர்மறையாக அமைந்திருக்கின்றன. ஜி.வி. பிரகாஷின் இசையில் ஏற்கெனவே வெளியான பாடல்களும், 'லிங்கா' பாடலும் மிகவும் நன்றாக வந்திருக்கின்றன. திரையரங்கிற்கு வந்து படம் பார்த்துவிட்டுச் செல்லும் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான Commercial திரைப்படத்தைப் பார்த்த திருப்தி கண்டிப்பாக இருக்கும்.
‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நண்பராகவும், நலம்விரும்பியாகவும், விஷாலின் முதல் இயக்கப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி சார் மற்றும் விஷாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம், எங்கள் முழு குழுவிற்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவர வேண்டும். டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடிச்சிருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் கண்டிபாகப் பிடிக்கும்." என்றார்.
















