Revolver Rita Review: சொல்லியடிக்கும் டார்க் காமெடி தோட்டாவா? வானத்தை நோக்கி சுட...
``மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சியை சார்ந்த மாபியா'' - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என நூறு நாட்களுக்கு மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். அதுசம்பந்தமாக இன்று (நவ.28) சென்னை எழும்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸ் அவர் பேசியதாவது,
"நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். தமிழகத்தின் பல பிரச்னைகளை வெளிச்சம் காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து போராட்டங்களை செய்து இந்த பிரச்னைகளுக்கு தீர்வையும் கொண்டு வருவோம்.
திமுக அரசை அகற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் நடைபயணத்தை தொடங்கினேன். இவர்கள் தமிழகத்தை ஆள தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழ விவசாயிகளை சந்தித்தேன். அவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மாம்பழம் 1 டன்னே 8000 ரூபாய்க்குதான் போகிறது. பறிக்கிற கூலியை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சி சார்ந்த ஒரு மாபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாம்பழத்துக்கு 1 டன்னுக்கு 25000 ரூபாயை குறைந்தபட்ச ஊக்கத்தொகையாக கொடுக்க வேண்டும்.

உலகத்திலேயே போராடுகிற விவசாயிகளை குண்டத் சட்டத்தில் அடைத்த ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். இப்படி ஒரு ஆட்சி தேவைதானா?
நந்தன் கால்வாய் இணைப்புத் திட்டத்தை 60 வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள். 300 கோடி ரூபாய் இருந்தால் அந்தத் திட்டத்தை செயல்படுத்திவிட முடியும். அன்புமணிக்கு 3 வயது இருக்கும் போது அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினோம் என அமைச்சர் எ.வ.வேலு பெருமையாக கூறுகிறார். அந்த 60 வருட திட்டத்தை செயல்படுத்த கூட திறமையில்லாத அரசுதான் திமுக அரசு.
வீராணம் ஏரியை தூர்வாரும் பணியை எந்த அரசும் இதுவரை செய்யவில்லை.
கொள்ளிடம் ஆற்றுக்கரையில் இருக்கக்கூடிய விவசாயிகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்கிறார்கள். எவ்வளவு மோசமான ஆட்சி இது? குடிநீர் வசதியை கூட உங்களால் செய்து கொடுக்க முடியாதா?

நெல் அறுவடையில் மூன்றில் ஒரு பங்கைதான் அரசு கொள்முதல் செய்கிறது. மற்றவற்றை தனியார்தான் கொள்முதல் செய்கிறது. அரசு செய்கிற அந்த ஒரு பங்கு கொள்முதலுக்கு கூட கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்கவில்லை. முதல்வரே நீங்களும் டெல்டாவிலிருந்துதானே வருகிறீர்கள்?" என்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
















