செய்திகள் :

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

post image

தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதலமைச்சர் ஆன அரசியல் வரலாறு இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று, வெற்றி பெற்றால்தான் முதலமைச்சராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதில்லை. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும், முதன் முதலாக முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி அப்போது தேர்தலில் போட்டியிடவே இல்லை. அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்தார். பிரதமர் நேரு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான காமராஜர் உள்ளிட்டோரின் வற்புறுத்தலால் ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குழு ராஜாஜியை தங்கள் தலைவராகத் தேர்வு செய்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு அப்போதிருந்த சட்டமன்ற மேலவைக்கு ராஜாஜி தேர்வு செய்யப்பட்டார்.

ராஜாஜி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. அப்படியொரு ஆதரவு கிடைத்து விட்டால், வாக்குரிமை உள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சராக பதவி ஏற்க முடியும். அப்படித்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மரணமடைந்த பின்பு அதிமுக உறுப்பினர்களால் மூன்று சட்டமன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் எம்.எல்.ஏ. இல்லாத வி.கே.சசிகலாவும் ஒருவர்.

2016 டிசம்பர் 5 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு தாண்டி 1 மணிக்கு மேல், அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால் இரண்டு மாத காலம் மட்டும் ஆட்சி நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்ம யுத்தம் நடத்தினார்.

இதற்கிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தங்களின் சட்டமன்றக் குழுத் தலைவராக, ஜெயலலிதாவின் தோழி, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தேர்வு செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென, 130 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்த போதும், சசிகலாவை முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்கவில்லை.

இதற்கிடையில், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால் சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். சசிகலா சிறை செல்லும் முன்பு, கூவத்தூர் விடுதியில் நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வி.கே.சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி கே பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சசிகலா
சசிகலா

இங்கு, எம்.எல்.ஏ.வாக இல்லாத வி.கே.சசிகலா முதலமைச்சராக தகுதிபெற்றும், பதவியேற்க முடியவில்லை.

அதாவது 118 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்க வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சராகத் தொடர முடியாது.

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, 1988ஆம் ஆண்டு, அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆறு மாத காலத்திற்குள் அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும். ஆனால், ஜானகி ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அவர் 24 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். எம்.எல்.ஏ. ஆக வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

1952 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. இல்லாத ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, அப்போதிருந்த சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது போல, 1967ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக வெற்றிபெற்று பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. எம்.எல்.ஏ. இல்லாத திமுக தலைவர் அண்ணாதுரை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அண்ணா அப்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தென் சென்னை எம்பியாக இருந்தார். முதலமைச்சராக பதவியேற்க எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்படாமல், முதலமைச்சராக பதவியேற்றவர்கள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் போது, அரசியல் ஆடுபுலி ஆட்டங்களுக்கு அளவே இருக்காது.

இடைத்தேர்தல் என்றாலே தேர்தல் திருவிழா களைகட்டும், அதுவும் முதலமைச்சரே தேர்தலில் போட்டியிட்டால் எப்படி இருக்கும்.

காமராஜர்

அப்படித்தான், 1954ஆம் ஆண்டு ராஜாஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின்பு காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு காமராஜருக்கு இருந்தது, ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். அதனால் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரையாவது ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, பின்னர் அத்தொகுதியில் போட்டியிடலாம் அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறினர். ஆனால், அந்த நேரத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் காமராஜர்.

காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கோதண்டராமன் களமிறங்கினார்.

காமராஜர் ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல். ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வி திட்டத்தை காமராஜர் ரத்து செய்துவிட்டார். அதனால், ஈ.வே.ரா. பெரியார் பச்சைத் தமிழர் காமராஜர் வெற்றிபெற வேண்டுமென பரப்புரை செய்தார். காங்கிரசை எதிர்த்து கட்சி தொடங்கிய திமுக தலைவர் அண்ணா "குலக் கொழுந்தே குணாளா" என்று காமராஜரை ஆதரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக, பொது வேட்பாளராக காமராஜர் பார்க்கப்பட்டார். குடியாத்தம் இடைத்தேர்தலில் 38,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் காமராஜர்.

2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை இருந்தது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தார். ஒரு நபர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. ஆனால் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். அத்தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்தது. அதிமுக 132, தமிழ் மாநிலக் காங்கிரஸ் 22, பாட்டாளி மக்கள் கட்சி 20, காங்கிரஸ் 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, இந்தியக் கம்யூனிஸ்ட் 5 என்று அதிமுக கூட்டணி 197 இடங்களில் வென்றது.

தேர்தலில் போட்டியிடாத, எம்.எல்.ஏ. ஆகாத, ஜெயலலிதாவை சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியிடம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடித்தத்தைக் கொடுத்து, பதவியேற்க அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா.

எம்.எல்.ஏ. இல்லாத ஜெயலலிதா 2001 மே 4 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்குகள் காரணமாக, நீதிமன்ற உத்தரவின்படி சில நாட்களில் பதவியில் இருந்து விலகினார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தினமும் போயஸ் கார்டன் இல்லம் சென்றுவிட்டு, பின்னர் தலைமைச் செயலகமான கோட்டைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

2001 டிசம்பர் 4 அன்று ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தனி நீதிமன்றம் டான்சி வழக்கில் கொடுத்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், டி.ஆர்.சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ரத்தானதால் தேர்தலில் போட்டியிடவும், முதலமைச்சராக பதவி ஏற்கவும் தகுதி பெற்றார் ஜெயலலிதா. அப்போது ஆண்டிபட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் (தற்போதைய தேனி தொகுதி திமுக எம்பி) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெயலலிதா

ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில், அப்பகுதியைச் சேர்ந்த, நடிகர் வாகை சந்திரசேகர் களத்தில் குதித்தார். அதிமுகவில் டிடிவி தினகரன், திமுகவில் அழகிரி ஆண்டிபட்டி தொகுதியில் முகாமிட்டனர். மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோரும் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். 2002 பெப்ரவரி 21 அன்று நடைபெற்ற ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் 78,437 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார் ஜெயலலிதா. திமுக வேட்பாளர் வாகை சந்திரசேகர் 37,236 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார்.

ஆண்டிபட்டி தொகுதியில் வென்ற ஜெயலலிதா அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். 2002 மார்ச் 2 அன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட, ஜெயலலிதா அமைச்சரவையில் 26 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முன்னாள் முதலமைச்சராக மாறிய பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இரண்டாமிடம் பிடித்தார். பொதுத்தேர்தல் இல்லாமலேயே புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.!

(தொடரும்)

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்று... மேலும் பார்க்க

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரி... மேலும் பார்க்க

Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்' – டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்... மேலும் பார்க்க

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z' ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞர... மேலும் பார்க்க

``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.." - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெ... மேலும் பார்க்க