செய்திகள் :

வங்கிகள் வலுப்பெறுகின்றன, கூடவே மோசடிகளும்... எப்போது முடிவுகட்டப்போகிறோம்?

post image

இந்தியா இன்று உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம். நம் நாட்டின் வங்கித்துறை தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கிக் கணக்கு, கடன் சேவைகள், நிதிச் சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என உச்சம் தொட்டு வருகிறது. இவையெல்லாம் பெருமை என்றாலும், இந்திய வங்கித் துறையைப் பின்னோக்கி இழுக்கும் விஷயங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமானது வங்கி மோசடிகள். சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட வங்கி மோசடித் தரவுகள் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றன.

2025-2026-ம் நிதியாண்டில் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 23,722-லிருந்து 10,114-ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.32,803 கோடியில் இருந்து ரூ.48,021 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, மோசடிகளின் எண்ணிக்கை குறைந்தி ருந்தாலும், மோசடி தொகை அதிகரித்துள்ளது. இந்த மோசடிகளில் சுமார் 85% தொகை கடன் வழங்கல்களில் நடந்துள்ளது. இவை, சாதாரண மக்களின் சிறிய கடன் மோசடிகள் அல்ல; வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய பெரிய அளவிலான கடன்களே மிகப்பெரிய இழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் மட்டும் ரூ.35,709 கோடி அளவுக்கான இழப்பு களைச் சந்தித்துள்ளன. இது மொத்த மோசடி மதிப்பில் கிட்டத்தட்ட 75%.

வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறிய திருட்டுகளைக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால், பெரிய கொள்ளைகளைத் தவறவிடுகின்றன. ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் வழங்கப்படும்போது, அந்த நிறுவனங்களின் நிதிநிலை, பணப்புழக்கம், நிர்வாகத் திறன், அடமான மதிப்பு ஆகியவை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஏற்கெனவே, மல்லையா, நீரவ் மோடி எனப் பல பண முதலைகள் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிப் போனது நினைவில்லையா? அவற்றிலிருந்து இன்னுமா வங்கிகள் பாடம் கற்கவில்லை? கடன் வழங்கும் செயல்முறைகளில் இன்னமும் பலவீனங்கள் நீடிப்பதை ஏன் ரிசர்வ் வங்கி கவனிக்கத் தவறுகிறது?

இந்தப் பணம் எல்லாம், பொதுமக்களின் சேமிப்பு. ஒரு வங்கி மோசடியில் ஆயிரக்கணக்கான கோடிகள் இழக்கப்படும்போது, அதன் சுமையை இறுதியில் சுமப்பவர்கள் சாமன்ய மக்களே.

டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்த இரண்டு நிலை அங்கீகாரம் (2FA) போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வங்கிகள், பெருநிறுவனங்களின் கடன் மோசடிகளில் மட்டும் ஏன் தொடர்ந்து கோட்டை விடுகின்றன? வங்கிகளின் நிர்வாகப் பொறுப்புணர்வு, கடன் வழங்கும் தரநிலைகள், உள்கட்டுப்பாட்டு அமைப்புகள், மற்றும் மோசடிகளுக்கு எதிரான தனிப்பட்ட பொறுப்பேற்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் வங்கி அமைப்புதான் அந்நாட்டின் பொருளாதார நம்பிக்கையின் அடித்தளம். அதில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கினால், வளர்ச்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். அடித்தளத்தைப் பாதுகாப்பது, இந்திய வங்கித் துறையின் மிக முக்கியக் கடமை.

- ஆசிரியர்