முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்! - என்னவெல்லாம் விவாதிக்கப்பட...
"ஆதி, இதன் லாபத்தை பார்க்காமல் நிதியுதவி செய்திருக்கிறார்!" - 'பொருநை' ஆவணப்பட இயக்குநர் பேட்டி!
'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் 'தமிழண்டா இயக்கம்' தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த இயக்கம் மூலம் 'தமிழி' என்ற ஆவணப்பட இணையத் தொடர் வெளியாகி பாராட்டைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இப்போது 'பொருநை' என்ற ஆவணப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். தாமிரபரணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு பணிகளை நேரடியாக படம்பிடித்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இதற்கு இசையமைத்து, நரேஷனுக்கு பின்னணி குரலும் தந்திருக்கிறார். மேலும், பிரதீப் குமார் - இளங்கோ என இருவர் சேர்ந்து இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
தற்போது இந்த ஆவணப்படம் துருக்கியில் நடைபெறவிருக்கும் 'Foca International Archaeology & Cultural Heritage Film Festival' என்கிற திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோவிடம் வாழ்த்துகள் சொல்லி, இந்த ஆவணப்படம் பற்றி விரிவாக பேசினோம்.
நம்மிடையே பேசிய இளங்கோ, "தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 'பொருநை' ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த ஆவணப்படம் துருக்கியில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!
பொதுவாக, அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களில் புகைப்படங்கள் அல்லது காணொளிகள் எடுக்க பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படாது.

ஆனால், நாங்கள் ஏற்கனவே 'தமிழினி' என்ற ஆவணப்படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருந்ததை கவனித்த தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்த பொருநை நதிக்கரை அகழ்வாய்வுப் பணிகளை முழுமையாக ஆவணப்படுத்த பிரத்யேக அனுமதியை எங்களுக்கு வழங்கியது.
கீழடி அகழ்வாய்விற்குப் பிறகு அகழ்வாராய்ச்சி என்ற சொல் வெகுஜன மக்களிடம் பிரபலமடைந்திருந்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நுணுக்கங்கள், வழிமுறைகள் மற்றும் அதில் ஈடுபட்டுள்ள பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிப் பொதுமக்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. அதனை மிக எளிமையாகத் தெளிவுபடுத்துவதே இந்த ஆவணப்படத்தின் முதன்மை நோக்கம் என நாங்கள் முன்பே திட்டமிட்டோம்.
ஹிப் ஹாப் ஆதியின் 'தமிழண்டா இயக்கம்' சார்பாக நாங்களும் எங்களுடைய குழுவினரும் சுமார் ஓராண்டு காலம் பொருநை நதிக்கரையோரப் பகுதிகளில் தங்கி இந்த ஆவணப் படத்திற்கான பணிகளை மேற்கொண்டோம்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று முக்கிய வரலாற்றுத் தளங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வுகள் அனைத்தையும் இந்த பொருநை ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
அகழ்வாய்வுக் குழிகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அவை எத்தனை அடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்படுகின்றன, தொல்லியல் அறிவியலின் படி அவை எவ்வாறு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன என்ற ஒட்டுமொத்த செயல்முறையையும் பதிவு செய்யும் முதல் ஆவணப்படம் இதுதான்.

இந்த ஆவணப்படத்தின் ஆராய்ச்சிக்காக, பிரிட்டிஷ் காலத்து வரலாற்று ஆவணங்கள், கால்டுவெல் மற்றும் எச்.எச்.வில்சனின் குறிப்புகள் உள்ளிட்ட பலரின் வரலாற்று நூல்களை விரிவாக வாசித்தோம். தமிழ் வரலாற்றில் மதுரைக்கு முன்னரே கொற்கை துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்ற பின்னணியும், தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் இந்த அகழ்வாராய்ச்சியை பற்றிய பார்வையும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு முன் 'தமிழண்டா இயக்கம்' மூலம் நாங்கள் எடுத்திருந்த 'தமிழி' ஆவணப்படத்திற்காக பல்லாயிர கிலோ மீட்டர் பயணித்திருந்தோம். அதுபோல, இந்த ஆவணப்படத்திற்காகவும் பல வரலாற்றாசிரியர்களைச் சந்தித்து நாங்கள் பேட்டி கண்டிருக்கிறோம். இந்த ஆவணப்படத்தில் தொல்லியல் துறையைச் சேர்ந்த முன்னணி அறிஞர்களின் நேர்காணல்களும் முக்கியமானதாக இருக்கும்.
பேராசிரியர் கா. ராஜன், செல்வக்குமார், 2004-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அங்கு ஆய்வு நடத்திய சத்தியமூர்த்தி மற்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்." என்றார்.
மேலும் தொடர்ந்தவர், "ஹிப்ஹாப் தமிழாவின் 'தமிழண்டா இயக்கம்' என்பது ஒரு பண்பாட்டு இயக்கம். தமிழ் பண்பாடு மற்றும் தமிழ் வரலாறு சார்ந்த விஷயங்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்வதைத்தான் இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ஹிப் ஹாப் ஆதி இல்லை என்றால் இந்த ஆவணப்படம் சாத்தியமாகியிருக்காது. ஏனென்றால், ஒரு ஆவணப்படத்திற்கு வணிக ரீதியாக எப்படியான லாபம் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது. வணிக ரீதியாகப் பெரிய லாபமோ, முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெறும் உத்தரவாதமோ இதற்கு கிடையாது.
அகழாய்வு நடக்கும் இடத்தில் எந்த மாதிரியான பொருட்கள் கிடைக்கும் என்கிற உறுதித்தன்மையும் கிடையாது. சில சமயங்களில் பொருட்கள் கிடைக்காமலும் போகலாம். அந்த அகழாய்வு காலத்தில் நாங்கள் போட்ட உழைப்பிற்கு எதுவும் கிடைக்காமலும் போகலாம்.
ஆனால், இதுபோன்ற சவால்கள் எதையுமே அவர் கருத்தில் கொள்ளவில்லை. மூன்று வெவ்வேறு ஊர்களில் மூன்று கேமரா குழுக்களை அமைத்து, ஒரு வருடம் தங்குவதற்கும் பயணிப்பதற்கும் தேவையான முழு நிதியுதவியையும் ஹிப்ஹாப் தமிழா வழங்கினார்.
நிதியுதவி மட்டுமின்றி, எடிட்டிங் பணிகளின் போதும் ஆதி தனது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆவணப்படம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் கதை சொல்லலை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் சொன்னார்.
அதுபோல, தரவுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அனிமேஷன் காட்சிகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார். மேலும், தனது பிஸியான திரைப்படப் பணிகளுக்கு மத்தியில் இந்த ஆவணப்படத்திற்குத் தேவையான பின்னணி இசை மற்றும் வாய்ஸ் ஓவர் தந்திருக்கிறார்.

இந்த ஆவணப்படத்தை நானும், 'தமிழி' ஆவணப்படத்தின் இயக்குநர் பிரதீப் குமாரும் இணைந்து இயக்கியிருக்கிறோம். நாங்கள் நீண்ட கால நண்பர்கள் என்பதால், இருவருக்குள்ளும் ஒரே மாதிரியான புரிதலும், சிந்தனையும் இருந்தது. அதே சமயம் சிறு சிறு சண்டைகளும் எங்களுக்குள் வரும் (சிரித்துக் கொண்டே...)
படப்பிடிப்புப் பணிகளைப் பிரதீப் முழுமையாகக் கவனித்துக் கொண்டார். நான் ஆராய்ச்சி மற்றும் கண்டெண்ட் பணிகளை கவனித்துக் கொண்டேன். இந்த ஆவணப்படத்திற்காக நாங்கள் எடுத்த நேர்காணல்கள் மட்டும் 60 மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அதனைத் தாண்டி பல மணி நேர அகழாய்வு மாண்டேஜ் காட்சிகளும் இருந்ததால், அவற்றைச் சுருக்கி இறுதி வடிவத்திற்கு எடிட் செய்யப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
2021-ல் இந்த ஆவணப்படத்தின் ஒரு வெர்ஷன் எடிட் செய்யப்பட்டது. எனினும், இந்த அகழாய்வு தொடர்பான மற்ற அறிவியல் முடிவுகள் வராததால் படம் முழுமையடையாமல் இருந்தது. அவை வெளியான பிறகே ஃபைனல் காபியை முடித்தோம்." என்றவர், தமிழில் ஆவணப்படங்களை வெளியிடுவதற்கான சூழல் பற்றி, "தமிழ்ச் சூழலில் வீரப்பன் ஆவணப்படம் போன்ற சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் விஷயங்கள் நிறைந்த படைப்புகளுக்கு ஓடிடி தளங்களில் நல்ல மார்க்கெட் உள்ளது.
ஆனால், தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த 'Educative' ஆவணப்படங்களுக்கான வணிகச் சந்தை இங்கு இன்னும் மிகச் சிறியதாகவே உள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படும் இதுபோன்ற படைப்புகளுக்கான முதலீட்டை யூடியூப் போன்ற தளங்கள் மூலமாகத் திரும்பப் பெறுவது ரொம்ப கடினம்.

மக்களுக்கு இதுபோன்ற வரலாற்று உள்ளடக்கங்களைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், அதைத் தயாரிப்பதற்கான தகுந்த தளங்களோ அல்லது சுயாதீன மார்க்கெட் மாடல்களோ இன்னும் தமிழ் சூழலில் முழுமையாக உருவாகவில்லை.
இந்தச் சவால்களைக் கடந்துதான் 'பொருநை' ஆவணப்படம் தற்போது சர்வதேச அரங்கிற்குத் தமிழரின் பெருமையை எடுத்துச் சென்றிருக்கிறது!" என்றார்.


















