`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி
வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி
உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர்.
'ஏஎப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக்' இறுதிப்போட்டியில், ஜப்பானின் டோக்கியோ வெர்டி பெலெஸா அணியை 1-0 என வீழ்த்தி வடகொரியாவின் 'நேகோஹியாங் மகளிர் எஃப்சி' சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இக்கோப்பையைக் கைப்பற்றிய முதல் வடகொரிய கிளப் என்ற பெருமையைப் பெற்ற இந்த வீராங்கனைகளை கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து வாழ்த்தியபோது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பியொங்யாங்கில் நடைபெற்ற ஒரு சிறப்புப் பாராட்டு நிகழ்ச்சியில், சாம்பியன்ஸ் லீக் வென்ற நேகோஹியாங் அணியினருடன், சமீபத்தில் 2026 ஏஎப்சி யு-17 மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற வடகொரியாவின் இளம் தேசிய மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர். அவர்களை முகம் நிறையப் புன்னகையுடன் பாராட்டிய கிம் ஜாங் உன், கைகளைக் குலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தென்கொரியாவில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, நேகோஹியாங் வீராங்கனைகள் வடகொரியாவின் தேசியக் கொடியை மைதானத்தில் ஏந்தி ஓடிக் கொண்டாடினர். தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி வடகொரியக் கொடி அங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டாலும், மைதானத்தில் இருந்த சுமார் 1,200 தென்கொரிய ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும், தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் வடகொரிய மகளிர் அணியின் இந்த வரலாற்றுச் சாதனைக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
North Korean leader Kim Jong Un met Naegohyang Women's FC, winners of the Asian Football Confederation Women's Champions League last month in South Korea. The team were the first athletes to visit the South in eight years pic.twitter.com/IMHlQmEtTM
— Reuters (@Reuters) June 3, 2026
இந்த வரலாற்று வெற்றியைப் பற்றிப் பேசிய நேகோஹியாங் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரி யு இல், தங்களது சாதனைக்கு அதிபர் கிம் ஜாங் உன் வழங்கிய எல்லையற்ற அன்பும், ஊக்கமும்தான் முக்கியக் காரணம் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான சர்வதேசத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், விளையாட்டுத் துறையில் வடகொரியப் பெண்கள் உலக அரங்கில் தங்களது நாட்டின் கொடியை உயர்த்தி சாதித்து வரும் இந்தத் தொடர் வெற்றிகள், அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.





















