`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி
Nuclear Dustbin: 1,00,000 ஆண்டுகள் அணுக்கழிவைப் பூட்டிவைக்கும் நிலவறை தயார்! - நிரந்தர தீர்வாகுமா?
அணுமின் நிலையங்கள் நமக்குத் தேவையான மின்சாரத்தைத் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், அதன் பிறகு வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்பதுதான் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்துவருகிறது.
இந்த மிக நீண்டகாலப் பிரச்னைக்கு, ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டது பின்லாந்து. ஆம், உலகின் முதல் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமான 'ஓன்கலோ' (Onkalo) திறப்புக்குத் தயாராகிவிட்டது.
அப்படியென்ன ஸ்பெஷல் இந்த நிலவறையில்? இதன் டெக்னிக்கல் டீட்டெயில்ஸ் என்ன? வாங்க பார்க்கலாம்.

எதற்காக இந்த பிரம்மாண்டத் திட்டம்?
1950-களில் முதல் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கியதிலிருந்து, அதிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். இதுவரை, இந்தக் கழிவுகள் தற்காலிகமாக நீர் நிறைந்த நிலைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. இந்தச் சிக்கலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் பின்லாந்து, ஓன்கலோ என்ற இந்த வேற லெவல் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது.
ஓன்கலோவின் ஸ்பெஷல்!
பின்லாந்தின் தென்மேற்கில் உள்ள யூராஜோகி (Eurajoki) என்ற இடத்தில், அடர்ந்த காட்டுக்கு அடியில் இந்த மையம் அமைந்துள்ளது. சுமார் 1.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளைக் குடைந்து இந்த நிலவறை சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
லிஃப்டில் ஏறி கீழே சென்றால், தரைமட்டத்திலிருந்து சரியாக 433 மீட்டர் ஆழத்தில் இந்த மையம் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள், பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம்! இந்த ஆழத்தில்தான், உலகின் மிக ஆபத்தான கழிவுகள் அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்குப் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படப்போகின்றன.

இந்த மையத்தின் செயல்பாடுகளுக்கு இந்த மாதம் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ செயல்பாடுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்" என இதன் ஆபரேட்டரான TVO நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிலிப் போர்டேரியர் தெரிவித்திருக்கிறார்.
பேக்கேஜிங் டெக்னாலஜி எப்படி?
வெறுமனே கழிவுகளைக் கொண்டுபோய் கொட்டிவிட மாட்டார்கள். இதற்கென ஒரு பக்கா ப்ராசஸ் இருக்கிறது. முதலில், பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் (spent fuel rods), அரிப்பைத் தாங்கக்கூடிய மிகத் தடிமனான செப்புக் கலன்களுக்குள் (copper canisters) வைக்கப்படும். பின்னர் இந்தக் கலன்கள், 433 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கங்களின் தரையில் தோண்டப்பட்ட துளைகளில் இறக்கப்படும்.

இத்துடன் வேலை முடிந்துவிடவில்லை. அந்தத் துளைகளைச் சுற்றி 'பென்டோனைட் களிமண்' (bentonite clay) கொண்டு நிரப்பப்படும். இது ஒரு நேச்சுரல் மினரல். இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஈரம் பட்டவுடன் இது விரிவடைந்து, கலனைச் சுற்றி ஒரு ஊடுருவ முடியாத (impenetrable) தடுப்புச் சுவரை உருவாக்கிவிடும். இதனால், கசிவுக்கான வாய்ப்பே இல்லை.
இந்த மையத்தில் சுமார் 6,500 டன் யுரேனியக் கழிவுகளைச் சேமிக்க முடியும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பின்லாந்தின் 5 அணு உலைகளிலிருந்து வரும் கழிவுகளைச் சேமித்த பிறகு, இந்த நிலவறை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்.
எல்லாம் சரி... ரிஸ்க் எதுவும் இல்லையா?
"இது என்றென்றைக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை" என்கிறார் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் போசிவா நிறுவனத்தின் வேதியியலாளர் லாரி பர்வினென். ஆனால், விஞ்ஞானிகள் சில ரிஸ்க்குகளையும் கண்டறிந்துள்ளனர். காலப்போக்கில் செப்புக் கலன்களில் அரிப்பு ஏற்படுவது மற்றும் எதிர்காலத்தில் பனி யுகங்கள் (Ice Ages) ஏற்படும்போது உண்டாகும் நிலநடுக்கங்கள் ஆகியவை முக்கிய ரிஸ்க்குகளாகப் பார்க்கப்படுகின்றன.
ஆனால், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள், இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பானது என்றே தெரிவிக்கின்றன. மனிதகுலம் உருவாக்கிய ஒரு முடிவில்லாத பிரச்னைக்கு, ஒரு நீண்டகாலத் தீர்வைக் காணும் முயற்சியில் பின்லாந்து உலகிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.
Come 450 meters underground as we visit Onkalo , the world’s first-ever deep geological repository for spent fuel. pic.twitter.com/nOwsAiclNt
— IAEA - International Atomic Energy Agency ⚛️ (@iaeaorg) December 20, 2020




















