2025-ல் அமெரிக்காவுக்கு சென்ற வரிப்பணம்; இந்த ஆண்டு வட்டியுடன் திரும்புகிறது - ட...
LG TV : 60 ஆண்டு டிவி சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறதா? - வெளியான தகவலும் பின்னணியும்!
சமீபத்தில், ஜப்பானின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சோனி, தனது பிரேவியா டிவி வர்த்தகத்தின் பெரும்பான்மை கட்டுப்பாட்டை சீன நிறுவனமான TCL-க்கு வழங்கியது. இப்போது அதே வழியில் மற்றொரு ஜாம்பவான் நிறுவனமான எல்.ஜியும் செல்லக்கூடும் என்ற செய்திகள் வெளியாகி டெக் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தனது 60 ஆண்டுகால டிவி வர்த்தகத்தை மறுசீரமைக்க அல்லது விற்கக் கூட எல்ஜி திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
கொரிய ஊடகமான EBN வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, எல்ஜி நிறுவனம் தனது டிவி பிரிவை மறுசீரமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹைசென்ஸ் (Hisense) உடன் விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் மட்டும் உண்மையாகியிருந்தால், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக டிவி தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த எல்ஜியின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கும்.

இந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், எல்ஜியின் உயர் அதிகாரிகள் சமீபத்தில் பெய்ஜிங்கிற்குப் பயணம் செய்து, ஹைசென்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த எல்ஜி, "நிறுவன அளவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லாத நிலையில், விற்பனை குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படும் செய்திகளை உறுதிப்படுத்துவது கடினம்" என்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.
இந்த செய்திகளில் துளியும் உண்மையில்லை என்றும், டிவி வர்த்தகத்தை விற்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் எல்ஜி நிறுவனம் இந்தியா டுடே டெக் பிரிவிற்கு பிரத்யேகமாக உறுதிப்படுத்தியுள்ளது. பரவி வரும் தகவல்கள் தவறானவை மற்றும் திசைதிருப்பும் நோக்கம் கொண்டவை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலகளாவிய டிவி சந்தையில் தேவை குறைந்து வருவதும், லாபம் சரிந்து வருவதும், குறிப்பாக ஆக்ரோஷமான சீன பிராண்டுகளிடமிருந்து வரும் போட்டியும் தான் இதற்குக் காரணம். TCL, ஹைசென்ஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே, பெரிய திரை கொண்ட டிவிகளை மிகக் குறைந்த விலையில் வழங்கி சந்தையில் தங்களுக்கு என ஒரு பெரிய இடத்தைப் பிடித்து வருகின்றன. இதனால், எல்ஜி போன்ற பாரம்பரிய பிரீமியம் பிராண்டுகள் லாபகரமாகச் செயல்படுவது பெரும் சவாலாக மாறியுள்ளது.
சந்தை ஆய்வு நிறுவனமான ஓம்டியாவின் (Omdia) தரவுகளின்படி, கடந்த ஆண்டு உலகளாவிய டிவி ஏற்றுமதியில் TCL சுமார் 14 சதவீதத்தையும், ஹைசென்ஸ் 12.5 சதவீதத்தையும் கைப்பற்றின. ஆனால், எல்ஜியின் சந்தைப் பங்கு கடந்த சில ஆண்டுகளாக 10 சதவீத அளவிலேயே இருந்து வருகிறது. மேலும் 2024 முதல் TCL, ஹைசென்ஸ் மற்றும் ஷாவ்மி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சந்தைப் பங்கு சாம்சங் மற்றும் எல்ஜியை விட அதிகமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் தான் பிரச்சனையா?
ஆம், லாபம் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எல்ஜியின் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரிவு இந்த ஆண்டு சற்று மீண்டிருந்தாலும், நீண்டகாலமாகவே அழுத்தத்தில் உள்ளது. இந்த பிரிவின் லாப வரம்பு வெறும் 1 முதல் 2 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், நீண்டகால லாபம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எல்ஜியின் பிரீமியம் OLED டிவிக்களால் கூட, அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது எல்ஜிக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே, பல ஆண்டுகளாக நஷ்டத்தைச் சந்தித்த தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை 2021-ல் முழுமையாக மூடியது. LG Wing போன்ற புதுமையான போன்களை அறிமுகப்படுத்தியும், சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாததால் அந்த முடிவை எடுத்தது. அப்போது, மின்சார வாகன பாகங்கள், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஹோம் போன்ற எதிர்கால வளர்ச்சி உள்ள துறைகளில் கவனம் செலுத்தப் போவதாக எல்ஜி அறிவித்தது. டிவி வர்த்தகம் குறித்த இந்த செய்திகளும், நிறுவனத்தின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது.
தற்போது எல்ஜி இந்த விற்பனை செய்தியை முழுமையாக மறுத்துள்ளதால், டிவி பிரியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும், உலக சந்தையின் போட்டிச் சூழல், லாபத்தை மையமாகக் கொண்ட நிறுவனத்தின் எதிர்கால முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.



















