Pearle Maaney: 'மன்னிப்பு கேட்கிறேன்' ; சர்ச்சையினால் குறைந்த 3 லட்சம் ஃபாலோயர்ஸ...
`விசிக அலுவலகத்துக்கு அந்த சோபா வாங்கி தந்தது இவர்தான்' - விவரிக்கும் திருமாவளவன் மருமகன் இசை அமுதன்
வி.சி.க-வின் தொழிலாளர் பிரிவான `தொழிலாளர் விடுதலை முன்னணி'யின் மாநிலச் செயலாளராக இருப்பவர் இசை அமுதன். திருமாவளவனின் உடன் பிறந்த சகோதரியின் மகன். குழந்தைப் பருவம்தொட்டு திருமாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவருக்கு ஓட்டுநராக சில காலம் இருந்தவர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் தொடங்கி, சமீபத்திய திமுக, தவெக கூட்டணிப் பேச்சு, 'சோபா' விமர்சனம், குடும்ப அரசியல் என நம்முடைய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார் இசை அமுதன்.

``மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகனால் அந்தக் கட்சிக்குப் பிரச்னை. தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் என்கிற பழியை பலகாலமாகச் சுமந்து கொண்டிரூக்கிறது திமுக. மதிமுக, பாமகவிலும் மகன்களால் சிக்கல். இந்த சூழலில், விசிகவில் திருமாவளவனின் மருமகன் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பதே அவ்வளவாக வெளியில் தெரியவில்லையே, ஏன்?"
``நானும், என் அண்ணனும், சின்ன வயசுல இருந்தே அவருடன் தங்கியிருந்தோம். எங்களுக்கு சைக்கிள், நீச்சல் பழகித் தந்தது முதல் பள்ளிக் கூடத்துக்கு கொண்டு போய் விடறது வரைக்கும் அவர்தான் செஞ்சார். ஆனாலும் அவரைப் பார்க்க வர்ற கூட்டத்துல ஒருத்தராத்தான் எங்களையும் வச்சிருந்தார். எங்களுக்கு ஸ்பெஷல்னு எதுவும் கிடையாது. அதாவது அவருக்கு தொண்டர்கள் எப்படியோ அப்படிதான் நாங்களும். அதனாலேயே ஒரு கட்டத்துல எங்களுக்கு 'மாமா'ங்கிற வார்த்தையே மறந்து, அவருடன் இருப்பவர்கள் கூப்பிடுகிற 'தலைவர்'ங்கிற வார்த்தையே பழகிடுச்சு. இன்னைக்கும் அப்படிதான் கூப்பிடுறோம்.
நான் ஆரம்பத்துல சில பொறுப்புகள் கேட்டப்பவும், 'நான் எப்படி வந்தேன், அதேமாதிரி களத்துல கட்சிக்காரங்க கூட நின்னா அவங்களே கூட்டி வருவாங்க. நேரா எங்கூட மேடைக்கு வர ஆசைப்படாதேன்னுதான் சொன்னார். அந்த வார்த்தையை எப்பவுமே மனசுல வச்சிருக்கேன். இந்தப் பொறுப்பைக் கூட தொழிலாளர் அணி தொடர்பான என் பல வருட செயல்பாடுகளைப் பார்த்துவிட்டே தந்தார். அவருக்குத் தொண்டர்களே குடும்பம்கிறதால குடும்பத்துல இருந்து ஒருத்தரை வலிய முன்னிறுத்தணும்கிற அவசியம் இல்லை. அதனாலேயோ என்னவோ நானும் ஃபோகஸ் ஆகலைனு நினைக்கிறேன், கட்சிக்கு இது நல்லதுதானே?"

``தேர்தல் முடிவுக்குப் பிறகு விசிகவின் கூட்டணி நிலைப்பாட்டில் ஒரு தடுமாற்றம் நிலவுவதாகக் கூறப்படுகிறதே?"
''எங்களைப் பிடிக்காதவர்களின் விமர்சனம் அது. தேர்தலில் அதிக இடங்கள் கிடைத்த கட்சி ஆட்சியமைக்க முடியாத போது குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துடலாம்கிற அச்சம் பலருக்கும் இருந்தது போலவே எங்க தலைவருக்கும் இருந்தது. அதேநேரம் மற்ற சில கட்சிகள் போல அடுத்த நாளே சொல்லாமக் கொள்ளாம திமுக கூட்டணியை விட்டு வெளியில் வரவும் அவருடைய மனசாட்சி இடம் தரலை. பல வருடமா கொள்கை, சித்தாந்த ரீதியா அந்தக் கட்சியுடன் இருந்ததை நினைச்சுப் பார்த்தார். அதனாலாயே திமுக தலைவரைச் சந்திச்சு தவெகவுக்கு ஆதரவு தருவது குறித்துப் பேசிவிட்டு அரசமைக்க ஆதரவு தந்தோம். அதனால தலைவர்கிட்ட எந்த தடுமாற்றமூம் இல்லை.
திமுக தவெக கூட்டணி சேரலாம்கிற அவரது கருத்தை வைகோ போன்ற சிலர் கேலி செய்தாங்க. பெரியார், அண்ணா, அம்பேத்கர், சமுக நீதி, மாநில உரிமை, மதசார்பின்மைன்னு பல விஷயங்களில் இந்த ரெண்டு கட்சிகளிடையேயும் ஒற்றுமை இருக்கே, அதை வச்சுப் பேசினார். அவருடைய கோணம் அது. அதை வெளிப்படுத்தினார், அவ்வளவுதான்."

``திருமா மாநில அரசியலுக்கு வருவதை திமுக தடுத்ததாக கூறினார்களே, நீங்க அப்படி உணர்ந்தீர்களா?"
``நிச்சயமாக இல்லை. காட்டுமன்னார் கோவிலில் அவர் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனார். அந்த விருப்பத்தை ஏற்க நினைத்தார். ஆனால் அவருக்கு நெருக்கமான தேசியத் தலைவர்கள் சிலர் 'நீங்க ஸ்டேட்ல இருந்துகிட்டா இந்தியா முழுக்க பாதிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு யார் குரல் கொடுக்கறது'னு கேட்டாங்க. அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிய, போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கினார். இதுல எங்க இருந்து வந்தது திமுகவின் அழுத்தம்?
அதேபோல அந்தத் தொகுதியில் போட்டியிட விசிகவுல இருந்து ஒருத்தர் கூட கிடைக்கலையாங்கிற விமர்சனத்தையும் சிலர் வச்சாங்க. இளையபெருமான் மீது தலைவரும் தலைவர் மீது அவரும் வச்சிருந்த மரியாதை, பிரியம் வேற யாருக்கும் தெரியாது. அதனால அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தரலாம்னு முடிவு செய்தோம். விசிகவுல கட்சி தாண்டி இந்த மாதிரி வேட்பாளர்களை நிறுத்துவது புதிதல்ல. இதுக்கு முன்னாடி மறைந்த பல்கலைக் கழக துணைவேந்தர் வசந்தி தேவிக்கு தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு தந்திருக்கோம்."

``தவெக ஆட்சி அமைவதற்கு முந்தைய சில நாட்களில் திருமாவளவனை முதல்வராக்கும் முயற்சி நடந்ததாகக் கூட செய்திகள் வெளியாகின.. அது குறித்து?"
''அந்தப் பேச்சுகளை தொடக்கத்திலேயே எங்கள் தலைவர் நிராகரிச்சுட்டார். யதார்த்தத்தில் அது சாததியப்படாத விஷயம்னு அவருக்குத் தெரியும்."

``தேர்தல் முடிவு வெளிவந்த சமயத்தில் விசிக அலுவலகத்துக்கு புதிதாக வந்திறங்கிய சோபாவில் இருந்தே 'சோபா மாடல்' என்கிற வார்த்தை பிரபலமானதாகச் சொல்கிறார்களே?"
``எங்களோடது ஏழைக் கட்சி. எங்க அலுவலகத்துல பிளாஸ்டிக் நாற்காலிகள்தான் இருந்தன. அதுகூட கட்சிக்காரங்க யாராச்சும் ஸ்பான்சர் செய்யறதுதான். இந்த நிலையில் வசதி வாய்ப்புகளோட இருந்த ஒரு உச்ச நடிகர் முதன் முதலா நம்ம இடத்துக்கு வர்றார்ன்னதும், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற கையோட தன்னுடைய அமைச்சரவையில பங்கு தர்றேனு வர்றப்ப, அவரை உட்காரச் சொல்ல ஒரு சோபா இல்லையேன்னு நினைச்சோம்.
எங்க சார்பு அமைப்பான இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையைச் சேர்ந்த ஒரு வட்டச் செயலாளர் உடனே தன் காசுல ஆர்டர் கொடுத்து வரவைக்கிறேனு சொல்லி வரவழைச்சார். இது தெரியாம 'சோபா மாடல்'னு ஒரு விமர்சனத்தை வச்சாங்க. அந்த விமர்சனத்தின் நோக்கம் தலைவருக்கு நல்லாவே புரிஞ்சது. அதனால சிரிச்சுட்டுக் கடந்து போயிட்டார்'' என்று முடித்தார்.














