49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
வெனிசுலாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்கா - இந்த விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
வெனிசுலா நாட்டின் மீது திடீர் தாக்குதலை முன்னெடுத்திருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டு மக்களால் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவருடைய இணையரையும் இரவோடு இரவாகக் கடத்திச் சென்றுள்ளது. இந்த கொடுஞ்செயலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெருமையாக அறிவித்ததுடன், இனிமேல் வெனிசுலாவை தாங்களே நிர்வகிக்கப் போவதாகவும், அதன் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தச் செயலால் உலகமே அதிர்ந்துள்ளது. பல நாடுகளும் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அமெரிக்காவின் நண்பர்களும் கூட அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்திய வெளியுறவுத்துறை மிகவும் மென்மையான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவை நேரடியாகக் கண்டிக்கவில்லை என்பதுடன், தனது ‘ஆழ்ந்த கவலையை’ குறிப்பிட்டு, பிரச்னைக்கு ‘பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்’ என்று மட்டும் கூறியுள்ளது.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக நடந்திருக்கும் மிகக் கடுமையான தாக்குதலைப் பற்றி இந்தியா மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு மிகவும் மென்மையான ஒன்றாகும். இந்தியாவின் கூட்டாளிகளான பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு நாடுகள் எதுவுமே இது போலப் பேசவில்லை.
வெனிசுலாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பிரேசில், அமெரிக்காவைத் தொடர்ந்து எதிர்த்து வரும் ரஷ்யா, சீனா ஆகியவை மட்டுமல்லாது தென் ஆப்பிரிக்காவும் கூட இந்த விஷயத்தில் அமெரிக்காவின் செயலை நேரடியாகக் குறிப்பிட்டு அது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும், இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் என்றும் கூறி தெளிவாகக் கண்டித்துள்ளன. இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பதுடன், உலக அரங்கில் உருவாகியுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலுக்குக் கச்சிதமான வடிவம் கொடுக்க வேண்டும்.
வெனிசுலாவை குறிவைத்த அமெரிக்காவின் தாக்குதல் ஒரு தனித்த நடவடிக்கை அல்ல. சில மாதங்களுக்கு ‘2025 அமெரிக்கத் தேச பாதுகாப்பு உத்தி’ என்ற ஆவணம் வெளியிடப்பட்டது, அதில் ‘உலகின் மீதான தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவோம், அதற்காக ராணுவ தாக்குதல்களைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்’ எனக் குறிப்பிட்டனர். இந்த பின்னணியில்தான் வெனிசுலா மீதான தாக்குதலும் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் மிரட்டலை வெளிப்படுத்திய மார்கோ ரூபியோ, தாங்கள் அடுத்து ‘கியூபா, மெக்சிகோவை’ குறிவைப்போம் என்றார்.

வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளங்களே அமெரிக்காவின் குறி என்பதை ட்ரம்ப் தெளிவாக்கிவிட்டார். உலகிலேயே மிக அதிகமாக எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ள நாடு அது. அவை சில தனியார் பெருமுதலாளிகளின் வசம் இருந்தவரை அமெரிக்காவுக்குப் பிரச்னையாக இல்லை. ஆனால், அந்த நாட்டின் அதிபராக 1999 ஆம் ஆண்டில் ஹூகோ சாவேஸ் தேர்வானார். அவர் ‘பொலிவாரியன் செயல்முறையை’ முன்னெடுத்தார். அதன்படி அந்த நாட்டின் இயற்கை வளங்களின் மீது அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தினர். ஆய்வுப் பணிகளும், எண்ணெய் எடுப்பும் அரசின் கைகளுக்குச் சென்றன, சுத்திகரிப்பு – விற்பனையில் மட்டும் தனியார் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிடைத்த லாபம் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதனால்தான் அமெரிக்காவும், வெனிசுலாவின் எண்ணெய் முதலாளிகளும் எரிச்சலடைந்தனர்.
2002-ம் ஆண்டில் சாவேஸ் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா திட்டமிட்டது. சாவேசின் பின்னணியில் மக்கள் எழுச்சியுற்று இந்த கவிழ்ப்பு நாடகத்தை முறியடித்தார்கள். அமெரிக்காவுக்கு ஆதரவாக உற்பத்தியை நிறுத்திய பெருமுதலாளிகளின் எண்ணெய் நிறுவனங்களைத் தொழிலாளர்கள் மீட்டு எடுத்து இயக்கினார்கள். சாவேஸ் மறைவுக்கு பின்னர், போக்குவரத்து தொழிலாளியும், தொழிற்சங்க தலைவருமான நிகோலஸ் மதுரோ அந்த நாட்டின் அதிபரானார்.
உலகில் எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்த காலத்தில், வெனிசுலா தனது மக்களுக்குக் கல்வி, உணவு, வீட்டுவசதி தேவைகளை நிறைவேற்றும் மிகப்பெரும் சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றினார்கள். பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் கருவியாக இல்லாமல், மக்களிடம் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும் கருவியாக அரசை மாற்ற வேண்டும் என்பதுதான் ‘பொலிவாரியன் செயல் திட்டம்’. ஆனால், அவர்கள் பெருமுதலாளிகளின் சொத்துக்களை அவர்கள் முற்றாகப் பறிமுதல் செய்யவில்லை. இந்த நிலையில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், வெனிசுலாவின் மீது அமெரிக்கா ஏற்படுத்திய பல்வேறு பொருளாதார முற்றுகைகளும் அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்தன. இப்போது, நேரம் கனிந்திருப்பதாகக் கருதும் அமெரிக்கா, வெனிசுலாவின் பெருமுதலாளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அரசாட்சியைக் கைப்பற்றும் பகிரங்க முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த கடத்தலும், தாக்குதலும் நடந்துள்ளன.

உலக அளவில் எண்ணெய் வர்த்தகத்தை தங்கள் ஏகாதிபத்திய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம் ஆகும். இதற்காக, வெனிசுலாவை மட்டுமல்ல, இந்தியாவை மிரட்டுவதற்கும் அமெரிக்கா தயங்கியதில்லை.
உக்ரைன் போருக்கு பிறகான சூழலில், ரஷ்யா தனது எண்ணெய் வளத்தைக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்தது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்க டாலரைப் பயன்படுத்தாமலே, குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது. ஆனால், இதை நிறுத்தக் கோரிய அமெரிக்க அதிபர், அதற்காகவே இந்திய ஏற்றுமதிகளின் மீது மிக அதிகமான வரிகளை விதித்தார். அமெரிக்காவிடமிருந்து அதிக விலைக்குக் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தியும் வருகிறார்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தை ஏற்றால் நம்முடைய பெட்ரோல் விலை உயர்வதுடன், கடன்களுக்கு வட்டி செலுத்தக் கூடக் கூடுதலாக டாலர் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். இந்தியாவின் மீதான இன்னும் பல தாக்குதல்களை அமெரிக்கா கடந்த சில மாதங்களில் வேகப்படுத்தியுள்ளது.
1) இந்தியத் தொழிலாளர்களை ஆவணங்கள் இல்லையென்று திருப்பி அனுப்பிய அமெரிக்கா, ராணுவ விமானத்தில் கைகளையும், கால்களையும் விலங்கிட்டு, மனித உரிமையற்ற நிலையில் இந்திய எல்லைக்குள் தள்ளியது.
2) பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்ற நாடுகளை வெளிப்படையாகவே மிரட்டிய அவர், இந்தியாவிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகளை உயர்த்தினார்.
3) ஹெச் 1 விசா மீதான கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்திய மென்பொருள் நிறுவனங்களை நேரடியாகத் தாக்கியது.
4) அரசியல் ரீதியிலும் இந்தியாவின் தனித்தன்மையான நிலைப்பாடுகளை கேலிப்பொருளாக்கியது.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து உருவான பதற்றத்தைத் தனிக்க இருநாடுகளையும் மிரட்டிப் பணிய வைத்ததாகப் பலமுறை ஊடகங்களில் கூறினார் ட்ரம்ப்.
இது போன்ற தாக்குதல்களை கொலம்பியா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளே உறுதியான சொற்களால் கண்டித்த நிலையில், இந்தியாவிடமிருந்து நேரடியான கண்டனம் இல்லை என்பது அமெரிக்காவின் பிடி இறுகுவதையும், இந்தியாவின் தலைமையில் ஊசலாட்டம் இருப்பதையும் காட்டுகிறது. நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரையும் கவலை கொள்ளச் செய்கிறது.
தெற்குலக நாடுகளின் தனித்துவமான நம்பிக்கையாக இந்தியாவை நிலை நிறுத்துவது காலத்தின் தேவையாகும். பாலஸ்தீனத்தின் நடந்துவரும் இனப்படுகொலைப் போருக்கு முடிவுகட்டவும், உக்ரைனில் நடந்துவரும் போரினைப் பயன்படுத்தி அந்த நாட்டின் கனிம வளம் சுரண்டப்படுவதையும், உலகப் பொருளாதாரத்தில் சுமை ஏற்றப்படுவதையும், இப்போது வெனிசுலாவின் இறையாண்மைக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதலையும் எதிர்ப்பதில் இந்தியா முன்னணிக்கு வருவது, நம்முடைய மதிப்பையும், தாக்கத்தையும் பல மடங்கு அதிகரிக்கும்.
இறையாண்மையை ஆதரித்து எழுப்புகின்ற குரல் உண்மையில், ஒவ்வொரு நாட்டின் மக்களும் தங்களுடைய அரசியலைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் சமத்துவ விழுமியத்துக்கான குரலாகும். சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்ட, ஏகாதிபத்திய ஆதிக்கங்களின் கொட்டத்திற்கு எதிரான குரலாகும். இந்தியாவின் குரல் அப்படித்தான் இருக்க முடியும்.

அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தையின் மூலம் நம்முடைய விவசாயத்தை, பால் பொருட்கள் உற்பத்தியை, எண்ணெய் வர்த்தகத்தை, அணு சக்தி நலனை, ராணுவத் தளவாட வர்த்தகத்தைச் சமரசம் செய்து, அமெரிக்காவுக்குப் பலன் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா நமது கைகளை முறுக்குவதாகச் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் நமது தரப்பை வலுப்படுத்தவும், நம் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாக்கவும் இந்தியாவின் தனித்துவமான குரல் வலுப்படுத்துவது மிக மிக அவசியமாகும்.
உலகம் முழுவதும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான இயக்கங்களுடன் நாம் கொண்டிருந்த நட்பு, விடுதலைப் போராட்ட பாரம்பரியத்திலேயே உருவான ஒன்றாகும். அணி சேரா இயக்கத்திற்கான தொடக்கக் கால முயற்சிகளில், 1946 முதலே (விடுதலைக்கு முன்பே) நாம் பங்கேற்று வந்துள்ளோம். விடுதலைக்குப் பின்னரும், உலக அரங்கம் கண்ணுற்ற பனிப்போர் முன்னெடுப்புகளில் நாம் விலகி நின்றுள்ளோம். விலகி நின்றபோதுதான் நமது தனித்துவம் வலுப்பட்டுள்ளது. உலக மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து நிற்கும் இந்தியாவே, இப்போதைய ஒரே தேவையாகும்.













