Ilaiyaraaja Trance & மூளையின் ரகசியம்! | Science of Consciousness in Tamil | The...
வெளிநாட்டு பெண்ணுக்கு நிர்வாண பரிகார பூஜை - சென்னை ஜோதிடர் சிக்கிய பின்னணி!
கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண், சென்னையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர், சென்னைக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் அவ்வப்போது சென்றிருக்கிறார். அங்கு ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த இசக்கி முத்து என்பவரிடம் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் , தன்னுடைய எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார். உடனே ஜோதிடர் இசக்கிமுத்தும், உங்களுக்கு திருமணமாகி நீங்கள் கணவரைப் பிரிந்து வாழ்கிறீர்கள், உங்களுக்கு இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று சில தகவல்களை ஆரூடமாக சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அந்தப் பெண், நீங்கள் என்னுடைய கடந்த கால வாழ்க்கையையும் எதிர்கால வாழ்க்கையையும் சரியாக சொல்கிறீர்கள் என்று கூறியதோடு ஆயிரக்கணக்கில் பணத்தையும் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு ஜோதிடர் இசக்கி முத்துவை வெளிநாட்டு பெண் அடிக்கடி சந்தித்து ஜோதிடம் பார்த்து வந்திருக்கிறார். இந்தநிலையில், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் ஜோதிடர் இசக்கிமுத்துவை சந்தித்திருக்கிறார் அந்த வெளிநாட்டுப் பெண். அப்போது தன்னுடைய வக்கிர எண்ணைத்தை இசக்கி முத்து பரிகார பூஜை என்ற பெயரில் அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அந்தப் பரிகார பூஜைக்கும் வெளிநாட்டு பெண் சம்மதித்திருக்கிறார்.

இதையடுத்து ஜோதிடர் இசக்கிமுத்து கூறியதைப் போல சென்னையில் தங்கியிருந்த இடத்திலேயே வெளிநாட்டு பெண், நிர்வாண பூஜையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த பூஜையை வீடியோ காலில் ஜோதிடர் இசக்கிமுத்து நடத்தியிருக்கிறார். அதன்பிறகு வெளிநாட்டு பெண், கனடாவுக்குச் சென்றுவிட்டார். சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய அந்தப் பெண், ஜோதிடர் இசக்கிமுத்துவிடம் நீங்கள் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜோதிடர் இசக்கிமுத்து, நாங்கள் சொன்னப்படி நீங்கள் பரிகார பூஜை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணுக்கும் ஜோதிடருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஜோதிடர், உங்களின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. அதை வெளியிடாமலிருக்க நீங்கள் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும், அதோடு நான் சொல்கிறபடி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு பெண்ணை மிரட்டியிருக்கிறார் ஜோதிடர் இசக்கிமுத்து. இதையடுத்து அந்தப் பெண், சென்னையில் தனக்கு இசை கற்றுக் கொடுக்கும் ஆசிரியரிடம் விவரத்தை கூறி கதறி அழுதிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும் சில ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஜோதிடர் இசக்கிமுத்துவிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



















