Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்...
`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, `` `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது வடிகட்டிய பொய். ஏற்கெனவே 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது, இப்போது மட்டும் எப்படி நிறுத்த முடியும்? தோல்வி பயம் காரணமாக, அதாவது `வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தோற்றுவிடுவோம்’ என்ற காரணத்தினால், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதுவும், குடும்பத் தலைவிக்கு பிப்ரவரி மாத உரிமைத்தொகை தானாக கிடைக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் உரிமைத்தொகை கிடைத்துவிடும். இருந்தாலும், இந்த மூன்று மாதத் தொகையையும் முன்பணமாகக் கொடுத்து, அதோடு கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ஒன்றையும் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது.

இதற்கு முன்பு 2022, 2023, 2024, 2025 ஆம் ஆண்டுகளிலும் கோடைக்காலம் வந்தது. ஆனால், தேர்தல் நடக்கின்ற 2026 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்டாலினுக்குக் கோடைக்காலம் எப்படிக் கண்ணுக்குத் தெரிந்தது? இது முழுக்க முழுக்கத் தேர்தலை மையமாகக்கொண்டு அறிவிக்கப்பட்டது. உரிமைத் தொகைப் பெறுகின்ற குடும்பத் தலைவிகள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க சார்பாக ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், `திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 27 மாதகாலம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்திய பிறகே 28-வது மாதத்தில்தான் உரிமைத் தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம், அந்தப் பெண்கள் பாதிக்கப்படமாட்டார்களா?
ஆக, வேண்டுமென்றே திட்டமிட்டு, தேர்தலை மையமாகக்கொண்டு அந்த பெண்களின் குடும்ப வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் அவர்களே பொய் சொன்னாலும் பொருந்துகிற மாதிரியும், மக்கள் நம்புகிற மாதிரியும் சொல்லுங்கள். மாணவர்களின் திறமையை மேலும் வலுப்படுத்துவதற்கும், விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அம்மாவின் சிந்தனையில் உதித்த அற்புதமான திட்டம்தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 52.35 லட்சம் பேருக்கு நாங்கள் லேப்டாப் கொடுத்தோம். இந்த ஆட்சி வந்தபிறகு அந்தத் திட்டத்தை அப்படியே முடக்கிவிட்டார்கள். இப்போது, இளைஞர்களின் வாக்குகள் தேவை என்பதாலும், ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலும் அவசர அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு இப்போது லேப்டாப் கொடுக்கிறார்கள். லேப்டாப் கொடுத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், எப்போது கொடுத்திருக்க வேண்டும். 2025-ல் கல்லூரி திறக்கின்றபோதே கொடுத்திருக்க வேண்டும். உரிய நேரத்தில் கொடுக்காததால் உபயோகமில்லாமல் போய்விட்டது.
அ.தி.மு.க ஆட்சி மலர்ந்த உடனே, கனிமவளக் கொள்ளையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ, அதற்குத் துணைப்போன அதிகாரிகள் மீதெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க 31 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. இன்றைக்குத் தமிழகம் இந்தியாவிலேயே இந்த அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வருவதற்குக் காரணமே அ.தி.மு.க தான். அ.தி.மு.க ஆட்சியில் எத்தனைக் கல்லூரிகள் திறந்திருக்கிறோம். எத்தனை மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். இப்படி, எல்லா வகையிலும் அ.தி.மு.க ஆட்சியில்தான் நாட்டு மக்களுக்கு நன்மைக் கிடைத்திருக்கிறது.

விஜய்க்கு என்னத் தெரியும்? ஒருப் பிரச்னை நடந்தது. 72 நாள்கள் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. ஒருத் தலைவன் என்றால் பதில் சொல்லியாக வேண்டும். ஒருக் கட்சித் தொடங்கிவிட்டால், நிருபர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும், மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்தக் கட்சித் தலைவரின் கடமை. அந்தக் கடமையைச் செய்தாரா விஜய்? 15 நாள்கள் அலுவலகத்தையே மூடிவிட்டுச் சென்றுவிட்டார். அப்புறம் எங்குப்போய் கட்சி நடத்தி, மக்களுக்கு நன்மைச் செய்யப்போகிறார். ஒருப் பிரச்னையை சந்திக்கக்கூடத் திறன் இல்லாதவர் விஜய். நாங்கள் யாரையும் குறைச்சொல்லவில்லை. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். மக்களைச் சந்திக்கலாம். மக்கள்தான் எஜமானவர்கள். மக்கள் கொடுக்கின்ற தீர்ப்பே இறுதியானது. எங்களைப் பொறுத்தவரை நிறையச் செய்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு மக்களிடம்போய் சொல்கிறோம். நாங்கள் இரண்டு கட்டமாக கொடுத்திருக்கின்ற தேர்தல் அறிவிப்புகளைப் பார்த்து பயந்துதான் ஸ்டாலின் இப்போது விசித்தரமான அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.















