செய்திகள் :

ஹிட்லரின் நாசி படைகளை நடுங்க வைத்த ஐரீனா சென்ட்லர்; 2,500 யூதக் குழந்தைகளின் உயிர்காத்த தேவதை!

post image

ஒவ்வொரு நாள் காலையிலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் எழும்.

ஆனால், மனிதநேயத்திற்காகவும், சக மனிதர்களின் உயிரைக் காப்பதற்காகவும் தன் உயிரையே பணயம் வைத்த ஒரு சாதாரண செவிலியரின் கதையைப் படிக்கும் போது, நமக்குள் எழும் உத்வேகம் பல மடங்கு அதிகரிக்கும்.

இரண்டாம் உலகப்போரின் இருண்ட காலகட்டத்தில், நாசிப் படைகளின் மரணக் பிடியிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட யூதக் குழந்தைகளை, குப்பைக் கூடைகளிலும், மருத்துவப் பெட்டிகளிலும் மறைத்து வைத்துக் காப்பாற்றிய போலந்து நாட்டுப் பெண்மணி ஐரீனா சென்ட்லரின் (Irena Sendler) கதைதான் இது.

ஐரீனா சென்ட்லர்
ஐரீனா சென்ட்லர்

ஐரீனா சென்ட்லர் பிப்ரவரி 15, 1910 அன்று போலந்தின் தலைநகரான வார்சாவில் பிறந்தார். ஓட்வோக் என்ற சிறு நகரத்தில் வளர்ந்தார். அவரது தந்தை டாக்டர் ஸ்டானிஸ்லாவ் ஒரு சிறந்த மருத்துவர். தாய் பெயர் ஜானினா.

ஐரீனாவின் தந்தை, ஏழை யூதர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்த ஒரு மாமனிதர். 1917-ம் ஆண்டு, மற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப் பயந்த `டைபஸ்' (Typhus) என்ற கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை யூத நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார்.

அதன்படியே அந்த நோய்த்தொற்று அவருக்கும் பரவி இறந்தார். அப்போது ஐரீனாவுக்கு 7 வயது. இறப்பதற்கு முன் அவர் ஐரீனாவுக்குச் சொன்ன ஒரு வாழ்க்கைப்பாடம்தான், ஐரீனாவின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் செதுக்கியது.

"உலகில் மனிதர்களை இரண்டு வகையாக மட்டுமே பிரிக்க முடியும்: நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள். அவர்களின் மதம், இனம், தேசிய இனம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது மட்டுமே உண்மையான மனித அறம்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஐரீனா சென்ட்லர்
ஐரீனா சென்ட்லர்

ஆண்டுகள் கடந்தன. 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது. ஹிட்லரின் நாசிப் படைகள் போலந்தை ஆக்கிரமித்தன. 1940-ல் `வார்சா கெட்டோ' என்ற ஒரு குறுகிய பகுதிக்குள் சுமார் 4.5 லட்சம் யூதர்கள் அடைக்கப்பட்டனர்.

அங்கு பட்டினியாலும், நோயாலும், நாசிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக பலியாகத் தொடங்கினர். எஞ்சியவர்கள் `ட்ரெப்லிங்கா' என்ற மரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அப்போது வார்சா நகர சமூக நலத்துறையில் அதிகாரியாகவும், செவிலியராகவும் பணிபுரிந்து வந்த ஐரீனா, இதைப்பார்த்து சும்மா இருக்கவில்லை. சுகாதார ஆய்வாளர் என்ற பெயரில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி `வார்சா கெட்டோ' பகுதிக்குள் நுழைவதற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றார்.

யூதர்களுடன் தனது ஒற்றுமையைக் காட்ட, தனது கையில் `ஸ்டார் ஆஃப் டேவிட்' (Star of David) சின்னத்தை அணிந்து கொண்டு உள்ளே சென்றார்.

ஐரீனா சென்ட்லர்
ஐரீனா சென்ட்லர்

2,500 உயிர்களை மீட்ட உன்னதப் போராட்டம்

1942-ல் யூதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட `செகோடா' (The Council to Aid Jews) என்ற ரகசிய அமைப்பில் `ஜோலண்டா' என்ற ரகசியப் பெயருடன் இணைந்தார் ஐரீனா. அந்த அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

பெற்றோர்களை மரண முகாம்களுக்கு அனுப்புவது உறுதியான நிலையில், அவர்களின் குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என ஐரீனா முடிவு செய்தார். ஆனால், இது அத்தனை எளிதல்ல. தன் குழந்தையை நிரந்தரமாகப் பிரியப்போகிறோம் எனத் தெரிந்தும், அவர்களின் உயிரைக் காக்க கண்ணீருடன் குழந்தைகளை ஐரீனாவிடம் ஒப்படைத்தனர் அந்த யூதப் பெற்றோர்கள்.

ஐரீனா சென்ட்லர்
ஐரீனா சென்ட்லர்

குழந்தைகளை நாசிப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி வெளியே கொண்டுவர ஐரீனாவும் அவரது குழுவினரும் (சுமார் 25 பெண்கள்) பயன்படுத்திய உத்திகள் திரைப்படங்களை விட சிலிர்ப்பானவை:

  • சிறிய குழந்தைகளை மயக்க மருந்து கொடுத்து, மருத்துவப் பெட்டிகள், குப்பைக் கூடைகள் மற்றும் உருளைக்கிழங்கு மூட்டைகளில் மறைத்து வைத்து வெளியே கடத்தினார்.

  • சில நேரங்களில், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில் உயிருள்ள குழந்தைகளை மறைத்து வைத்துக் கடத்தினார்.

  • ஆம்புலன்ஸில் குழந்தைகளை ஸ்ட்ரெச்சருக்கு அடியில் மறைத்து வைத்துக் கொண்டு வருவார். நாசிப் படையினரின் சோதனைச் சாவடியை நெருங்கும் போது, குழந்தைகள் பயத்தில் அழுதால் மாட்டிக்கொள்வார்கள்.

    அதற்காக, ஆம்புலன்ஸில் தான் வளர்த்த ஒரு நாயை உடன் அழைத்துச் செல்வார். சோதனைச் சாவடி வந்ததும், அந்த நாயின் வாலை மிதித்து விடுவார். நாய் வலியால் சத்தமாகக் குரைக்கும். நாயின் குரைப்பொலியில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் மறைந்துவிடும்!

வெளியே கொண்டுவரப்பட்ட குழந்தைகளுக்கு போலந்து கிறிஸ்தவர்கள் போல போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, கத்தோலிக்க ஆதரவற்றோர் இல்லங்கள், கான்வென்ட்கள் மற்றும் தத்துக்கொடுக்கும் குடும்பங்களிடம் அவர்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.

போர் முடிந்த பிறகு, இந்த குழந்தைகள் தங்கள் உண்மையான குடும்பத்தையும், தங்களின் சுய அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதில் ஐரீனா மிகத் தெளிவாக இருந்தார். எனவே, ஒவ்வொரு குழந்தையின் உண்மையான யூதப் பெயரையும், தற்போதைய கிறிஸ்தவப் பெயரையும், அவர்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற முகவரியையும் மெல்லிய டிஸ்யூ தாள்களில் எழுதி, அவற்றை சிறிய கண்ணாடி ஜாடிகளில் அடைத்தார்.

அந்த ஜாடிகளை, நாசிப் படைகளின் முகாமுக்கு எதிரே இருந்த ஒரு நண்பரின் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தின் அடியில் ரகசியமாகப் புதைத்து வைத்தார்.

ஐரீனா சென்ட்லர்
ஐரீனா சென்ட்லர்

அக்டோபர் 20, 1943 அன்று, ஐரீனாவின் ரகசியச் செயல்கள் நாசிப் போலீசான கெஸ்டாபோவுக்குத் தெரிந்துவிட்டது. அவரைப் பிடித்து `பாவியாக்' என்ற கொடூரமான சிறையில் அடைத்தனர். கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது கால்கள் மற்றும் கைகள் முறிக்கப்பட்டன. ஆனால், இத்தனை சித்திரவதைகளை அனுபவித்தும், ஒரு குழந்தையின் பெயரையோ அல்லது தனக்கு உதவியவர்கள் பற்றிய சிறு தகவலையோ கூட அவர் வாய்திறந்து சொல்லவில்லை.

ஆத்திரமடைந்த நாசிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர். அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்பு, `செகோடா' ரகசிய அமைப்பு நாசிப் படை காவலர்களுக்கு பெருமளவு லஞ்சம் கொடுத்து, ஐரீனாவைத் தப்பிக்க வைத்தது. அதன் பிறகு போர் முடியும் வரை தலைமறைவாகவே வாழ்ந்தார்.

1945-ல் போர் முடிவுக்கு வந்ததும், தான் புதைத்து வைத்த ஜாடிகளைத் தோண்டி எடுத்தார். சுமார் 2,500 குழந்தைகளின் பட்டியலை எடுத்து, அவர்களை அவர்களின் உண்மையான குடும்பத்தினருடன் சேர்க்க முயன்றார். ஆனால் பெருந்துயரம் என்னவென்றால், அக்குழந்தைகளின் பெற்றோர்கள் கிட்டத்தட்ட அனைவருமே `ட்ரெப்லிங்கா' மரண முகாம்களில் கொல்லப்பட்டிருந்தனர். பின்னர் அக்குழந்தைகள் உறவினர்களிடமும், இஸ்ரேலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாழ்க்கையும் விருதும்

ஐரீனா சென்ட்லர் தனது வாழ்வில் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். தன்னுடைய அளப்பரிய தியாகத்திற்காக, 1965-ஆம் ஆண்டு இஸ்ரேலின் `யாட் வாஷெம்' அமைப்பால் `Righteous Among the Nations’ (உலக தேசங்களில் நீதிக்கானவர்) என்ற உயரிய விருதைப் பெற்றார். 2007-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

ஐரீனா சென்ட்லர் சிலை
ஐரீனா சென்ட்லர் சிலை

தான் செய்தது ஒரு பெரிய சாதனை என்பதை ஐரீனா இறுதிவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. "நான் ஒரு ஹீரோ அல்ல. நான் செய்ததெல்லாம் மிகச் சாதாரணமான ஒன்று. நான் இன்னும் நிறைய குழந்தைகளைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்ற குற்றவுணர்ச்சிதான் என்னைத் துரத்துகிறது" என்று அவர் அடிக்கடி கூறுவார். தனது 98-வது வயதில், மே 12, 2008 அன்று வார்சாவில் ஐரீனா சென்ட்லர் காலமானார்.

ஒரு சாதாரண செவிலியராக இருந்துகொண்டு, உலகமே பயந்து நடுங்கிய நாசிப் படைகளை எதிர்த்து, 2,500 எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றியது ஒரு பெண்ணின் அதீத மன உறுதி.

நல்ல செயல்களைச் செய்வதற்கு பெரிய ஆயுதங்களோ, பதவியோ தேவையில்லை; ஆழமான மனிதநேயமும், அதற்கான துணிச்சலும் இருந்தாலே போதும் என்பதைதான் ஐரீனாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

'மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா' டு 'இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட்' காஷிஷ் மெத்வானியின் வியத்தகு பயணம்

மாடலிங் உலகின் ஜொலிக்கும் மேடைகளில் தனது பயணத்தை ஆரம்பித்த காஷிஷ் மெத்வானி இன்று நம் தேசம் காக்கும் இந்திய ராணுவத்தின் 'ஏர் டிபென்ஸ்' பிரிவில் லெப்டினன்ட்டாக சேவை புரிந்து வருகிறார். 2023-ஆம் ஆண்டு 'ம... மேலும் பார்க்க

'அம்மாவுக்கான கண்டுபிடிப்பு' - 6வது படித்த நெசவாளர் பத்மஸ்ரீ விருது பெற்ற நெகிழ்ச்சிக் கதை தெரியுமா?

தினமும், அன்றைய நாளுக்கான சவால்கள் நமக்கு மலை போலத் தோன்றலாம். ஆனால், எந்தவொரு முறையான தொழில்நுட்பக் கல்வியும் இல்லாத, வெறும் 6-ம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாதாரண நெசவாளர், தனது தாயின் உடல் வலியைப் ... மேலும் பார்க்க

மலையை உடைத்த மாமனிதன்; 22 ஆண்டுகள் தனி ஒருவனாக சாதித்த `தசரத் மாஞ்சி’யின் கதை!

`என்னால் இதைச் செய்ய முடியுமா? என்னிடம் எந்த வசதியும் இல்லையே!’ என்ற சந்தேகம் எழும்போதெல்லாம், நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு நிஜ நாயகனின் கதை இது. காதலுக்காக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார் என்று வரலா... மேலும் பார்க்க

ஒற்றை மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு - `வனமகன்’ ஜாதவ் பயேங் கதை!

ஒவ்வொரு நாள் தொடங்கும்போது, 'நம்மால் தனியாக என்ன சாதித்துவிட முடியும்?' என்ற சோர்வு வந்தால், நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரே பெயர் ஜாதவ் பயேங் (Jadav Payeng). எவ்விதப் பின்புலமும், பண பலமும், பெரிய தி... மேலும் பார்க்க