பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில்...
அஜித் பவார் : `காரணத்தை அறிய அனைவரும் விரும்புகிறார்கள்' - விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை
மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய சரத் பவார் பேரன் ரோஹித் பவார், விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து தனது கணவரின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அஜித் பவாரின் மரணம் மற்றும் விமான விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''துணை முதல்வர் அஜித் பவாரின் துயர மரணத்திற்கு வழிவகுத்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரிக்கும்.

இது குறித்து நான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியுள்ளேன். விசாரணையை சிபிஐ செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்துள்ளது''என்று தெரிவித்தார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார் உட்பட சிலர் விமான விபத்தில் சதி இருப்பதாக தெரிவித்து இருப்பது குறித்து பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "நடந்தது துரதிர்ஷ்டவசமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற ஒரு துயர சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். மேலும் உண்மைகள் வெளிவர வேண்டும். சம்பவம் நடந்த உடனேயே விமான போக்குவரத்து துறை ஆணையம் மற்றும் சி.ஐ.டி விசாரணையைத் தொடங்கி விட்டது. ஆனால் இப்போது தேசியவாத காங்கிரஸ் கோரியபடி சி.பி.ஐ விசாரணைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்றார்.
அஜித் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வரும் 28ம் தேதிக்குள் வெளியாகும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டத்தை புறக்கணித்த சரத்பவார் கட்சி
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைய இருப்பதாக செய்தி வெளியான நிலையில், நேற்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று தொடங்கும் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து கலந்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பங்கேற்கவில்லை.




















