Kalyani Priyadarshan: `கிளியே கிளியே' துபாயில் கல்யாணி பிரியதர்ஷன் | Photo Album
'அதிபருக்கே நடக்குமென்றால், சாமானியப் பெண்ணின் நிலை?' - பாலின சமத்துவமும் அரசின் கடமையும் #Hersafety
பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடல் நடக்க, ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
சென்ற வாரம் கோவையில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு மீண்டும் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடலைத் துவக்கி இருக்கிறது.
நவம்பர் 2 ஆம் தேதி கோவையில் ஒரு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் காலியான சாலையோரத்தில் காரில் இருந்தபோது மூன்று நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர்.
அவர்களைத் தடுக்கமுயன்ற ஆண் நண்பரை அடித்து போட்டு அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து, தூக்கி வீசிவிட்டு சென்றிருக்கின்றனர்.
2012ம் ஆண்டு டெல்லியில், ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில்செல்கிறார். ஓட்டுநர், ஒரு மைனர் உட்பட பேருந்தில் இருந்த ஆறு ஆண்கள், அந்த ஆண் நண்பரை அடித்து போட்டு பெண்ணைக் கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி இருவரையும் சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவத்தை எவராலும் மறந்துவிட முடியாது.
நிர்பயா வழக்கு குறித்த ஆவணப்படத்தில், தான் செய்த பாலியல் வல்லுறவு அந்தப் பெண்ணுக்கும் அவரது ஆண் நபருக்கும் புகட்டப்பட்ட பாடம் என்றும், இரவு நேரத்தில் தனியாக பெண்கள் வெளியில் வந்தால் அவர்களுக்கு இதுதான் நடக்கும் என்றும் குற்றவாளி முகேஷ் சிங் பேசியிருந்தார்.
2013-ல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு மேஜர் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது. தண்டனையை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2020-ல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கியபோது, மெக்ஸிகோ நாட்டின் 60 வயது பெண் அதிபர் கிளவுடியா ஷெயின்பம், மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் போது, மதுபோதையில் ஒருவர் அவர் உடல் மீது தகாத முறையில் கைவைக்க முயற்சி செய்த செய்தி வந்துசேர்ந்தது.
சம்பவத்திற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் கிளவுடியா அந்த நபர் மீதுதான் புகாரைப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இது போன்ற ஒரு சம்பவம், ஒரு அதிபருக்கே நடக்கும் என்றால், நாட்டில் உள்ள சாமானிய பெண்களின் நிலை என்ன என்ற கேள்வியை வைத்தார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 6 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் எனப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
முகேஷ் சிங்கின் வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால், "ஒரு பெண்ணின் இடம் சமயலறையில். ஒரு பெண் என்றும் ஒரு ஆணுக்குச் சமமானவள் அல்ல"
அதிபர் கிளவுடியாவுக்கு நேர்ந்த சம்பவம், அதிகாரம் கொண்டிருக்கும் பெண்ணுமே கூட ஆணுக்குச் சமமல்ல என்கிற சிந்தனையில் நிகழ்த்தப்பட்ட சம்பவம். பெண் எத்தனை உயர்வான இடத்துக்குச் சென்றாலும், அவளைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தாலும், தன்னால் அவளின் உடல் மீது கை வைக்க முடியும் என நினைக்கும் ஆண் மைய அதிகார சிந்தனையிலிருந்து விளைந்த சம்பவம்!

நிர்பயா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பிறகுதான் அரியலூர் நந்தினி கூட்டுப் பாலியல் வல்லுறவு, பொள்ளாச்சி சம்பவம், ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் வல்லுறவு, தற்போது கோவை கூட்டுப் பாலியல் வல்லுறவு எனப் பல சம்பவங்கள் நேர்ந்து கொண்டிருக்கின்றன.
சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை நாம் இன்றும் தொடர்ந்து பார்க்கிறோம். தூக்குத் தண்டனை வரை கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பாலியல் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நிகழும் வன்முறை உலகளவில் மிகவும் பரவலாகவும் இடைவிடாமலும் காணப்படும் மனித உரிமை மீறல்களில் முக்கியமான ஒன்று.
உலகளவில், மூன்று பெண்களில் கிட்டத்தட்ட ஒருவராவது தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு, நெருங்கிய துணையாலோ அல்லது துணையல்லாதவர்களின் மூலமாகவோ அல்லது இரண்டு தரப்பினாலுமோ ஏதோ ஒரு கட்டத்தில் ஆளாக்கப்படுகிறார்.
2023 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான வன்முறை காரணமாகக் குறைந்தபட்சம் 51,100 பெண்கள், தங்களின் துணைவர் அல்லது குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்பட்டார் என்கிறது ஐநா பெண்கள் அமைப்பு.
ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு. எனினும் மக்கள்தொகையில் தனக்குச் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கும் பாலினத்தை இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு காலங்காலமாக நிலவி வருகிறது.
இந்த ஆணாதிக்க போக்கு பெண்களைத் தங்களுக்குக் கீழாகவும், தங்களின் இச்சைகளைப் போக்கும் போகப்பொருளாகவும் பார்க்க வைக்கிறது.
உலகளவில் இந்தப் போக்கு இருந்தாலும், இந்தியா போன்ற சாதிய, மத, நவதாரளாதவாத நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கதன்மையுடன் இருக்கும் ஆண்களின் மனநிலை, இந்தியப் பெண்களை இனப்பெருக்கம் செய்யும் கருவிகளாக மட்டுமே பார்க்கிறது. குடும்பம் என்னும் நிறுவனம், பண்பாடு என்கிற போர்வையில் இந்தச் சிந்தனைப்போக்கை போதித்து வளர்த்தெடுக்கும் பயிற்சி மையமாகத் திகழ்கிறது.

பணிவிடை செய்து, இனப்பெருக்கம் செய்து, சுயமாக முடிவுகள் எடுக்க அனுமதியில்லாத, பலவீனமானவர்களாக பெண்களைப் பார்க்க குடும்பங்கள் கற்றுக்கொடுக்கிறது. விளைவாக, பெண்களை உடல்ரீதியிலான போக இச்சை பொருட்களாகவும், தங்களுடைய உடைமைகளாகவும், அதிகாரம் செலுத்தப்படக் கூடிய அடிமைகளாகவும் பார்க்கும் வழக்கமே தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது.
இதனால் அவர்கள் பெண்ணின் உடலை தங்கள் பாலியல் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருப்பதாக நினைக்கின்றனர். இந்தச் சிந்தனைதான், ஆண்கள் செய்யும் பாலியல் குற்றத்தை நியாயப்படுத்தும் இடத்திற்கு அவர்களை எடுத்து செல்கிறது.
பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற கடும்தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், பாலியல் குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமும் இதுதான்.
“ஒரு பெண் ஏன் இரவு நேரத்தில் வெளியே வருகிறார்?” என முகேஷ் சிங் கூறியதுபோலவும், “ஏன் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவில் செல்கிறார்?” என கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிர்வினையாகப் பலர் எழுதிவருவது போலவும் ஆண்களின் மனநிலை இருப்பதற்கு காரணம், அந்தச் சிந்தனை ஆண்களின் அதிகார உணர்வில் இருந்து வருகிறது என்பதுதான்.
இவர்களுக்கு தண்டனைகள் எந்த அச்சத்தையும் கொடுப்பதில்லை. மாறாக மேலும் பெண்கள் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கும் போக்குத்தான் தொடர்கிறது.
சாதியும் மதமும் போதிக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை குடும்பக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தி சமூகத்திலும் அரச நிறுவனங்களிலும் புகுத்துகிறது. இதனால் சமூகப்படிநிலையில் உள்ள அனைத்து மட்டங்களிலும், பெண்களை இரண்டாம்தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு தொடர வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இதனால், பெண்கள் மீதான வன்முறைக்கும், சுரண்டலுக்குமான வழிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

தினசரி வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனைப் போக்கிலிருந்து பாலின சமத்துவத்தை நோக்கிய மன மாற்றத்தைக் கொண்டுவர அரசுகள் முதலில் பாலின சமத்துவ அரசுகளாக இருக்க வேண்டும்.
எப்படி ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பில் தனது சிந்தனையைக் கொண்டு வருகிறார்களோ, எப்படி லட்சக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் 'app' -களை வடிவமைக்கும் ஒரு மென்பொருள் பொறியாளர் தனது சிந்தனையை அந்தச் செயலிகளுக்குள் கொண்டு வருகிறாரோ, அது போல கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டின் தலைமையும் பாலின சமத்துவம், பெண்கள் விடுதலை, பெண் உரிமை, பெண் பாதுகாப்பு முதலிய பார்வைகளைத் தனது நிர்வாகத்தில் முன்னெடுக்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு என்பது வெறுமனே ஆபத்தைத் தடுப்பது என்பதாக மட்டும் கருதப்படாமல், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் இடங்களிலும் வன்முறை, ஒடுக்குமுறை, சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் பெண்கள் வாழ்வதுதான் எனக் கருதப்படும் சிந்தனை மாற்றம் ஏற்படவேண்டும்.
பெண்களுக்கான வாழ்க்கை, கல்வி மற்றும் உறவுக்கான தேர்வுகளில் தங்களுக்கான விருப்பத்துடன் வாழ்வதும் பொருளாதார சுதந்திரத்துடன் பெண்கள் வாழ்வதற்கான வழிகளை உறுதிப்படுத்துவதும்தான். உண்மையான பெண் பாதுகாப்பு ஆகும். அதுவே, பெண் விடுதலையை நோக்கி செல்வதற்கான உண்மையான வழியாகவும் இருக்க முடியும்!

வரலாறு நெடுக அரசுகள் போலியோ, காலரா, எய்ட்ஸ் போன்ற பல உயிர்க் கொல்லி நோய்களை அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றன. சமீபமாகப் பரவிய கொரோனா நோய்த்தொற்றைக் கூட எதிர்ப்பு மருந்துகள் மூலம் கையாளமுடிந்திருக்கிறது. ஆனால் அதே கொரோனா காலத்தில் கொரோனோ போலவே அதிகரித்து, Shadow Pandemic என ஐநாவால் அழைக்கப்பட்ட குடும்ப வன்முறைக்கு இன்றுவரை தீர்வு இல்லை என்பதே யதார்த்தம்.
ஏனெனில் அதிகாரம் ஏறும் அரசுகளுக்கு, உழைப்பு சக்தியாகப் பயன்பட மக்கள் வேண்டும், அவ்வளவுதான். அந்த மக்கள் மத்தியில் நிலவும் ஆண்-பெண் பாகுபாட்டைக் களைந்து, பாலின சமத்துவம் கொண்டு வர வேண்டிய தேவையை அரசுகள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் அதிகாரக் கட்டமைப்பு ஆணாதிக்கத்துக்கு ஏதுவாகச் செயல்பட மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
- கவிதா ராஜேந்திரன்














