Kalyani Priyadarshan: `கிளியே கிளியே' துபாயில் கல்யாணி பிரியதர்ஷன் | Photo Album
"THAR கார் வைத்திருப்பவர்கள் பித்துப்பிடித்தவர்கள்"- ஹரியானா DGP-யின் கருத்து வைரல்
ஹரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங், மகிந்திராவின் தார் (THAR) காரை வைத்திருப்பவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் வெறிபிடித்தவர்களாக (Crazy) இருப்பார்கள் எனக் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று (நவ. 8) செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாகன சோதனைகளில் பின்பற்றப்படும் வழிமுறைகள் பற்றி விளக்கியதுடன், அதிகாரிகள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அப்போது ஒரு வாகனம் என்பது வண்டி மட்டுமல்ல அது தன்னைப் பற்றிய அறிக்கை எனப் பேசியுள்ளார்.

எல்லா வாகனங்களையும் சோதிப்பது இல்லை என்ற அவர், தார் காரை சோதிக்காமல்விட முடியாது என லேசான சிரிப்புடன் கூறினார்.
"அது ஒரு தார் என்றால், அதை எப்படி விட்டுவிடுவது? அல்லது அது ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளாக இருந்தால்... அனைத்து முரட்டுத்தனமான ஆட்களும் இந்த இரண்டையும் பயன்படுத்துகின்றனர். நீங்கள் தேர்வு செய்யும் வாகனம் உங்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறது." என்றார்.
தொடர்ந்து, "தார் ஓட்டுபவர்கள் சாலையில் ஸ்டண்ட் செய்கின்றனர். அசிஸ்டண்ட் கமிஷனரின் மகன் தார் ஓட்டிச் செல்லும்போது ஒருவரின் மீது மோதினார். காவலர் அவரின் மகனை விடுவிக்க விரும்புகிறார். நாங்கள் அவரிடம் கார் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்டோம். அது அவரது (காவலர்) பெயரில் உள்ளது. எனில் அவர்தான் முரட்டுத்தனமான நபர்.
நாம் காவலர்களின் ஒரு பட்டியலை உருவாக்கினால், அதில் எத்தனை பேரிடம் தார் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் ('dimaag ghuma hua hoga uska...). தார் என்பது ஒரு கார் இல்லை, தான் எப்படிப்பட்டவன் என்பதற்கான அறிக்கை." எனப் பேசியுள்ளார்.
சமீப காலமாக ஆன்லைனில் ஸ்டண்ட் செய்து வீடியோக்கள் போட தார் கார் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் ரசிக்கும்படியானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இவற்றைக் குறிப்பிட்டு சற்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார் டிஜிபி!















