`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழ...
அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தீய சக்தி தி.மு.க-வை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கழகத்தை கட்டிக் காத்தார்கள்.
மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள்
அ.தி.மு.க ஆட்சியில்தான் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சிறுபான்மை மக்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டன.
சகோதரத்துவம் சமத்துவம் ஆகிவற்றை எக்காலமும் பேணிக்காப்பது நமது உயிர் மூச்சாக கொண்டிருப்பது அ.தி.மு.க. நம் கழகத்தின் இரு தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. ஆனால் அவர்கள் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டோம். பெரும்பான்மை நிரூபிக்கின்ற பொழுது, நம்மோடு இருந்த சிலரே எதிர்தரப்புடன் கைகோர்த்து சோதனைகளை உருவாக்கினார்கள்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும், அவரோடு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறக்கமாட்டோம். என்னுடைய மேஜையின் மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். அதை எல்லாம் நாம் கடந்தோம். அதன்பிறகுதான் முதல்வராக ஆனோம்.
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை.

அ.தி.மு.க ஆட்சி அமைந்தப் பிறகு அதை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்றைக்கும் எடப்பாடி அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துவிட்டது என்பதைத் தாண்டி, தி.மு.க-வால் கூட நம்முடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு பொற்கால ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க.
அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலரும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார். " என்றார்.
(தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உரை இங்கு அப்டேட் செய்யப்படும்!)














