'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
'அன்பு, கருணை, பரிவு' - மாணவர்கள் மத்தியில் நெகிழ்ந்த ராகுல் காந்தி! - முழு உரை
நீலகிரியின் கூடலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி இந்திய அரசியல் தொட்டு AI வரைக்கும் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

ராகுல் காந்தி பேசியவை, 'இது தகவல் தொழில்நுட்பத்தின் காலம். ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. நம்மைச் சுற்றி எவ்வளவோ தகவல்களும் செய்திகளும் கொட்டிக் கிடக்கிறது. நம்மால் அவற்றை இலவசமாகவும் அணுக முடிகிறது. இப்படியொரு காலக்கட்டத்தில் பள்ளிகள் மாணவர்களை எந்தவிதத்தில் வழிநடத்துகிறார்கள் என்பது முக்கியம்.
கொட்டிக் கிடக்கும் தகவல்களையும் செய்திகளையும் நாம் அறிவாக மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த அறிவோடு ஞானத்தையும் பண்பையும் பிணைத்து செயல்பட வேண்டும். பண்பற்ற அறிவு மிகமோசமான உலகத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும். ஒருவரோடு ஒருவர் சண்டையிட செய்யும். ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்கிறோம். இளம் மாணவர்களை நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு முன்பாக சில மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்றேன். சிலர் விமானி என்றனர். சிலர் ஆராய்ச்சியாளர் என்றனர். இன்னும் சிலர் மருத்துவர் என்றனர். ஆனால், யாருமே அரசியல்வாதி ஆக வேண்டுமென்று கூறவில்லை. நான் அரசியலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல்வாதி, டாக்டர், விமானி யாராக இருந்தாலும் அவர்களுக்கு சக மனிதர்களை நோக்கிய ஒரு கருணையும் பணிவும் இருக்க வேண்டும். அதுதான் மக்களை புரிந்துகொள்ளவும் ஒரு மேம்பட்ட தேசத்தை கட்டமைக்கவும் உதவும்.
நீங்கள் உங்களின் விருப்பப்படி என்ன ஆக வேண்டுமே ஆகுங்கள். எதை நினைத்தும் பயப்படாதீர்கள். எதை நினைத்தும் பதற்றப்படாதீர்கள். ஆனால், எப்போதும் உங்கள் நெஞ்சில் இருக்கும் கருணையையும் பணிவையும் விட்டுவிடாதீர்கள். அதை மட்டும் வளர்த்துக் கொண்டே இருங்கள்.

நம்முடைய நாடு இன்னமும் கற்றலில் நிறைவுபெறாத நாடு. நிறைய விஷயங்களை இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்படியொரு சூழலில் பெண்களை கண்ணியமாக நடத்துவது எந்தளவுக்கு முக்கியம் என நினைக்கிறீர்கள்?
என்னுடைய பாட்டிதான் (இந்திரா காந்தி) எங்களின் குடும்பத் தலைவி. சிறுவயதிலிருந்து அவரை பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அவரிடமிருந்தும் என் அம்மாவிடமிருந்தும் சகோதரியிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். ஆண்களை விட பெண்கள் பெரும் திறன் படைத்தவர்கள் என நம்புகிறேன். ஆண்களை விட பெண்கள் நிறைய நீண்ட நெடிய கனவுகளையும் தொலைதூரப் பார்வையையும் கொண்டவர்கள். அவர்கள் ஆகப்பெரும் காரியங்களை செய்ய தகுதியானவர்கள். நம்முடைய தேசத்தின் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் அதிகாரத்திலும் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கப் போகிறது.
உங்களுடைய பள்ளிக்காலத்தின் மறக்க முடியாத நினைவுகளைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.
பள்ளியில் நான் ஒரு சேட்டைக்காரப் பையன். யாரையாவது தொல்லை செய்துகொண்டே இருப்பேன். நான் படித்தது ஒரு போர்டிங் ஸ்கூல். நான் அங்கே ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அப்பா அம்மாவிடம் மகிழ்ச்சியாக இல்லாததைப் போல பாவனை செய்துவிடுவேன். அப்போதுதான் அவர்கள் என்னை அடிக்கடி வந்து பார்ப்பார்கள்.

பள்ளியில் எனக்கு ஒரு கெமிஸ்ட்ரி டீச்சர் இருந்தார். அவர் மிகச்சிறப்பாக கெமிஸ்ட்ரி கற்றுக்கொடுப்பார். நாம் எப்படி சிந்திக்க வேண்டும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பார். அவர் குறித்த நினைவுகள் இன்னமும் மனதில் இருக்கிறது.

கேள்வி கேட்ட மாணவியிடம் ராகுல் காந்தி ஒரு பதில் கேள்வி கேட்டார், 'ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும்?' என்றார். 'முதலில் மாணவர்களுக்கு கீழ்படிதலும் கட்டுப்பாடுகளுமே ரொம்ப முக்கியம்' என்றார் மாணவி. பதிலுக்கு ராகுல், 'நான் கீழ்படிதல்மிக்க மாணவன் கிடையாது. ஆசிரியர்களிடம் அதிகமாக கேள்வி கேட்பேன். ஒருவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டோமானால் நாம் சுயமாக சிந்திப்பது குறைந்துவிடும்.

உங்களை இந்த இடத்தில் நில்லுங்கள் என்றால், ஏன் எதற்கு என கேட்க வேண்டும். தீவிரமாக கீழ்படிதல் குணத்தை கொண்டிருப்பதும் நல்லதல்ல. கீழ்படிதல் என்கிற விஷயத்தில் கொஞ்சம் சமநிலையோடு சிந்திக்க வேண்டும்' என்றார்.
ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
நமக்கு ஒரு சிறந்த கல்விமுறை தேவைப்படுகிறது. கல்வி பெரும் பொருளை கேட்கக்கூடிய விஷயமாக இருக்கக்கூடாது. அதற்கு கல்வி முழுவதுமாக தனியாரிடம் செல்லக்கூடாது. தனியாரிடம் பள்ளிகள் இருக்கலாம். ஆனால், அரசின் கையில்தான் கல்வியை கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருக்க வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் கல்விக்காக அதிக தொகையை செலவிட வேண்டும். இரண்டாவது நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஐ.டி மற்றும் சேவைத்துறைகளை தாண்டி உற்பத்தித்துறையில் நாம் கோலோச்ச வேண்டும். சிறுகுறு வணிகங்களை பெருக்க வேண்டும். அதன்வழி எல்லாருக்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

சமீபத்தில் இந்த நாட்டையும் மக்களையும் இளைஞர்களும் ஜென் Z க்களும்தான் காப்பாற்றப் போவதாக ஒரு பதிவை இட்டிருந்தீர்கள். நாங்கள் அதை நோக்கி செல்ல என்ன செய்ய வேண்டும்?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே உங்களுக்கு ஒரு குரல் இருக்கும். எனக்கு ஒரு குரல் இருக்கும். நம் முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு குரலும் கருத்தும் இருக்கும். ஆனால், இப்போது அந்த ஜனநாயக குரல்களின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதுமே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசே அதை செய்கிறது.
தேர்தல் ஆணையம் உட்பட தன்னாட்சி அமைப்புகளை பற்றி படர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கொள்கைக்கு எதிரான கருத்துடையவர்களை அச்சுறுத்துகிறார்கள். உங்களை போன்ற இளமையான பயமறியாத கேள்வி கேட்கும் நேர்மையுடைய இளைஞர்களால்தான் இதை மாற்ற முடியும்.

இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சாதி, மத, இனரீதியாகவும் இன்னபிற ரீதியிலும் வேற்றுமைகள் ஊன்றியிருப்பதை பார்க்க முடிகிறது. இதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
நீங்கள் இப்படி எதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சௌகரியமாக இருந்தால் சொல்லலாம். (கேள்வி கேட்ட மாணவனிடம் ராகுல் காந்தி..)
உடலமைப்புரீதியாக (Body Shaming) என்னை தாக்கியிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி : உங்களை அப்படி ஒரு தாக்குகிறார் என்றால் அது அவருடைய குறுகிய மனதின் வெளிப்பாடுதான். உங்கள் பக்கம் எந்த பிரச்னையும் இல்லை. என்னையும் என்னுடைய எதிர்க்கட்சியினர் அப்படி தாக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எதோ கோபம், எதோ பதற்றம். அவர்கள் அசௌகரியமாக இருக்கிறார்கள். அதனால்தான் நம்மை தாக்குகிறார்கள். இந்தியா பல கலாசாரங்களையும் பண்பாடுகளையும் உள்ளடக்கிய நாடு. நான் சில மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகள் தெரியும் என்றனர். இதுதான் இந்தியா. நாம் எல்லா கலாசாரங்களையும் மதிக்க வேண்டும்.
இங்கே உங்களுக்கு விருப்பமான ஒரு மொழியையோ மதத்தையோ பின்பற்றும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத மதத்தையோ மொழியையோ பின்பற்றுபவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்த உரிமையும் இல்லை. பண்பட்ட மனதோடு கனிவோடு அன்போடு நடந்துகொள்ள பழகினால் இதையெல்லாம் தவிர்க்க முடியும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆரவல்லி மலைத்தொடர் பெரும் ஆபத்தில் இருக்கிறது. வன அழிப்புக்கும் சுரங்கங்களின் ஆக்கிரமிப்புக்கும் அந்த தீர்ப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நான் கூடலூரிலிருந்து வருகிறேன். அதுவும் ஒரு மலைப்பகுதி. இயற்கை வளங்களின் மீதான தாக்குதல் எனக்கு அச்சத்தை கொடுக்கிறது. இதில் உங்களுடைய கருத்து என்ன?
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், வளர்ச்சி என்று சொல்லப்படுபவைக்காக சுற்றுச்சூழலையும் இயற்கையையும் தியாகம் செய்ய முடியாது. இயற்கையோடு இணைந்த வளர்ச்சியைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். இயற்கையை அழித்து ஒரு போதும் வளர்ச்சியை எட்ட முடியாது. மலைகளையும் நீர் நிலைகளையும் இன்னபிற இயற்கை வளங்களையும் கொஞ்சம் தீவிரமான பரந்துபட்ட சிந்தனையோடு அணுக வேண்டும். அவையெல்லாம் உங்களுக்கும் எனக்கும் மட்டும் சொந்தமல்ல. வருங்கால தேசத்துக்கும் நம்முடைய சந்ததியினருக்குமே கூட அது சொந்தமானது. அதனால் இயற்கையை கவனமோடுதான் கையாள வேண்டும்' என்றார்.


















