Parasakthi: 'ரிலீஸ் தேதி மாற்றம்!'; ஜனநாயகனுக்கு அடுத்த நாள் வெளியாகும் 'பராசக்த...
அன்றே சொன்ன `மாஸ்கோ' கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி
தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார்.
'அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, 'ஏங்க எங்க ஊருக்கு வாங்க'னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல என்ன சிறப்பு இருக்கு' என எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள், 'இனி என்னங்க அவருக்கு சினிமா வாய்ப்பு வரும், நடிகராகிடுவார்' எனக் கொஞ்சம் புகைச்சலுடனேயே பேசுகிறார்கள்
எனில், கூமாப்பட்டி தங்கப்பாண்டியை பாராட்டுவதில் அர்த்தமில்லையா? டைட்டில் வென்றதைத் தாண்டி அவரைப் பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
என்னென்ன பார்க்கலாமா?
குக்கிராமம் ஒன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தங்கப்பாண்டிக்கு படிப்பின்மீது அதிக அக்கறை இருக்கிறது. தன் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டிலும், படித்த புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள், உள்ளூர் அரசியல் முதல் உலகத் தலைவர்கள் குறித்த புத்தகங்கள் என அலமாரிகளை நிறைத்து வைத்திருக்கிறார். இதற்காகவே முதலில் பாராட்ட வேண்டும்.
பாடம் சொல்லிக் கொடுக்கும் படிப்பான பி.எட். வரை படித்தும் உரிய வேலை அமையாததால் வீட்டில் இருக்கும் வாய்ப்பான ஆடு மாடு மேய்த்தலை இன்முகத்துடன் செய்து வந்தார். இன்னொருபுறம் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து அதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் விரக்தி அடையாமல் தன் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கணும் என்கிற பொறுப்பு தங்கப்பாண்டி மனதில் இப்போதும் இருக்கிறது.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை, ஒருகட்டத்தில் 'என்னதான் செய்யப் போற' எனக் கேட்டு விட்ட அப்பா. விரக்தியில் வேறெந்த முடிவுக்கும் செல்லாமல் சமூக ஊடகம் வருகிறார். வீண் அரட்டை, ஆபாசம், எனத் தவறாகப் பயன்படுத்தி வரும் ஒரு பெருங்கூட்டத்தின் நடுவே 'என்ன செஞ்சா நம்மைப் பார்க்க வைக்கலாம்' என நினைத்த தங்கப்பாண்டியின் யோசனை குறித்து பிசினஸ் புள்ளிகளிடம் கேட்டுப் பாருங்கள், 'அதில் ஒரு வியாபார உத்தி அடங்கியிருக்கிறது' என்பார்கள்.
நம்ப முடியவில்லையா, ஜீ தமிழ் சேனல் 'எங்கே பிக்பாஸுக்கு அழைத்துப் போய் விடுவார்களோ' என முந்திக் கொண்டு தன்னுடைய நிகழ்ச்சியில் கமிட் செயதது, அந்த உத்திதான். நிஜம்தான், ஜீ தமிழ் சேனலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், சந்தேகமே வேண்டாம் பிக் பாஸ் தமிழ் 9 ல் தங்கப் பாண்டியும் ஒரு போட்டியாளர்.
மீடியா வெளிச்சம் வந்தவுடன் மனிதர் அதைப் பயன்படுத்திய விதத்தையும் பாராட்ட வேண்டும். 'சிஙகிள் பசங்க' நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் 'நிகழ்ச்சிக்கு எப்படி செட் ஆகுறார்' என் நாம் முன்பு கேட்டிருந்தபோது, 'ஆர்வம், கொடுத்த வேலையைச் சரியா முடிக்கணும்ங்கிற அந்த சின்சியாரிட்டி ரெண்டுமே இருக்கு, அதனால எங்களுக்கு சிரமமே இல்லை' என்றார்கள்.

அந்த நம்பிக்கையில்தான் சீனியர் நடிகை சாந்தினியுடன் சேர்த்துவிட்டார்கள். அவருடன் இவர் ஆட்டம் போட்ட எபிசோடுகள் ரேட்டிங்கை அள்ளியிருக்கின்றன.
விளைவு, ஆறு மாதங்களுக்கு முன் கூமாப்பட்டியில் இருந்த தங்கப் பாண்டி என்கிற கிராமத்து இளைஞன் இப்போது லட்சக் கணக்கான மக்கள் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்.
ஒரு பேட்டியில் தங்கப் பாண்டி, தான் வீட்டில் வளர்க்கும் நாய் குறித்துப் பேசிய போது, 'மாஸ்கோ''னு பேரு வச்சிருக்கேன். 'மாஸ்'னா வெற்றி, 'கோ'ன்னா போ. 'போய் ஜெயிச்சுட்டு வா'னு அர்த்தம். வேட்டையை மனசுல வச்சு நானேதான் இந்தப் பேரை வச்சேன்' எனச் சொல்லியிருப்பார்.
தனக்கும் சேர்த்தே அதைச் சொல்லியிருக்கிறார் போல.


















