எஸ்.டி.எஸ், பாக்யராஜ் முதல் பண்ருட்டியார் வரை; அடேங்கப்பா! அதிமுக-விலிருந்து எத்...
அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்
மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்டிப்பறந்தான். அவனை அரசாங்கமே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.
மெக்சிக்கோவில் இருந்து போதைப்பொருள் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு வந்தது. எல் மென்ச்சோ, மெக்சிக்கோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் பதுங்கி இருந்து தனது கடத்தல் தொழிலை செய்து வந்தான். அதோடு Jalisco New Generation Cartel என்ற ஒரு அமைப்பு மூலம் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த எல் மென்ச்சோவிற்கு எதிராக மெக்சிக்கோ ராணுவம் நேற்று ஜாலிஸ்கோ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
இதில் எல் மென்ச்சோ படுகாயத்துடன் பிடிபட்டான். அவனை ராணுவத்தினர் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து போனான். அவன் ராணுவத்தால் கொல்லப்பட்ட செய்தி பரவியவுடன் நாடு முழுவதும் வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டது.

எல் மென்ச்சோ ஆதரவாளர்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை மறித்து தீவைத்து கொளுத்தி வருகின்றனர். நிலைமை சரியாகும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று ஜாலிஸ்கோ கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளார். 6 மாகாணங்களில் வன்முறை நடந்து வருகிறது.
இது குறித்து மெக்சிக்கோ பாதுகாப்புத்துறை செயலாளர் ஹார்ஃபுச் அளித்த பேட்டியில், ''மெக்ஸிகோ-குவெரெட்டாரோ நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை கொள்ளைகள், லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்தல், கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகளில் தொடர்புடைய ஒரு முக்கிய CJNG தலைவரான, எல் மென்ச்சோ படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக உளவுத்துறைப் பணி மற்றும் மாநில கூட்டு சோதனைகள் மூலம் இதனை ராணுவம் செய்துள்ளது''என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு ஹார்ஃபுசை படுகொலை செய்ய எல் மென்ச்சோ ஆதரவாளர்கள் மூன்று முறை முயற்சி செய்தனர். ஆனால் இப்போது நடந்த ராணுவ நடவடிக்கையில் ஹார்ஃபுச் முன்நின்று நடத்தி இக்காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இது தொடர்பாக மெக்சிகோவின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இராணுவ நடவடிக்கையைப் பாராட்டினார். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார். அனைத்து மாநிலங்களின் அரசும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், நாட்டின் பெரும்பாலான இடங்கள் முழுமையான இயல்புநிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நிர்ப்பந்தம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மெக்சிக்கோவில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க எல் மென்ச்சோவை ஒழிக்கும்படி மெக்சிக்கோ அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

அதோடு போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவறினால் அமெரிக்கா இவ்விவகாரத்தில் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படும் என்றும் எச்சரித்து இருந்தார். கொகைன் போன்ற போதைப்பொருளை அமெரிக்காவிற்கு கடத்தி வந்த எல் மென்ச்சோ பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தது.
கடந்த ஆண்டு எல் மென்ச்சோவின் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. எல் சென்ச்சோவின் அமைப்பு கடந்த ஆண்டு மேயர் ஒருவரை சுட்டுக்கொலை செய்தது. கடந்த காலக்கட்டங்களில் மெக்சிக்கோவில் நடந்த பல படுகொலைகளை எல் மென்ச்சோ அமைப்பு செய்து வந்தது. தற்போது அமெரிக்கா எல் சென்ச்சோவை கொலை செய்ய புலனாய்வுத்துறை தகவல்களை கொடுத்து உதவியதாகவும், அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை என்று மெக்சிக்கோ தெரிவித்துள்ளது. எல் மென்ச்சோ பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக போலீஸாருக்கு பணம் கொடுத்து வந்தான்.
2015ம் ஆண்டு மெக்சிகன் படைகள் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவரது ரகசிய உதவியாளர்கள் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தினர்.
எல் சென்ச்சோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சில காலம் அமெரிக்க சிறையில் இருந்தான். அதன் பிறகு அங்கிருந்து மெக்சிக்கோவிற்கு நாடு கடத்தப்பட்டான். மெக்சிக்கோ வந்த பிறகு போலீஸில் சேர்ந்தான். அதன் பிறகு போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு சேர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.




















