முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்க...
"முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன்" - போஸ் வெங்கட் பேட்டி
"திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது" என்கிறார் போஸ் வெங்கட்.
திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், வரப்போகும் தேர்தல், பிரசார திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

''அடிப்படையில திமுக குடும்பம் எங்களோடது. சொந்த ஊரான அறந்தாங்கியில அதிமுகவின் சீனியர் சு. திருநாவுகரசர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அவருக்கு எதிரா அரசியல் நடவடிக்கைகள்ல ஈடுபட்டிருக்கேன்.
பிறகு சீரியல், சினிமானு நடிகராகி கலைஞரின் 'கண்ணம்மா' படத்தில் நடிச்சப்ப கலைஞருக்கு மட்டுமல்ல, அப்ப இளைஞரணித் தலைவரா இருந்த இப்போதைய முதல்வரான தளபதிக்குமே நல்லா தெரிஞ்சவனாகிட்டேன். அதனால கட்சியில உறுப்பினர் கார்டு தரட்டும், பதவி தரட்டும்னெல்லாம் வெயிட் பண்ணலை. சீரியல் நடிகரா மக்கள் மத்தியில பிரபலமா ஆனதுமே பிரசாரத்துல இறங்கிட்டேன்.
முதல் பிரசார மேடை நல்லா ஞாபகமிருக்கு. காஞ்சிபுரம். 'நடிகர் போஸ் வெங்கட்'னு நோட்டிஸ்ல பேரு போட்டிருக்காங்க. நானும் சொன்ன நேரத்துக்கு முன்னடியே போயிட்டேன். அங்க போய் பார்த்தா கூட்டமே இல்லை.
எனக்கு முன்னாடி பேசிய ஒரு பேச்சாளர் தொண்டை கிழியக் கத்திட்டிருக்கார். எதிரே ஐம்பது பேர் கூட இல்லை. என்னடா இது, முதல் கூட்டமே இப்படி இருந்தா தலைவர், தளபதி காதுக்கு விஷயம் போனா என்னாகும்கிற பதட்டம் ஒருபக்கம்.
கூட்ட ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டு 'மெட்டி ஒலி' போஸ் வெங்கட் வந்திருக்கார்னு மைக்கில் சொல்லுங்கனு சொன்னேன். அது ஓரளவு ஒர்க் அவுட் ஆச்சு.

பெண்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வரத் தொடங்குச்சு. ஆனா அந்தச் சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அங்க ரெண்டு பேரு சண்டை போட்டு ஒருத்தர் கையை ஒருத்தர் வெட்டிட்டார்.
கூட்டத்துல ஒரே கூச்சல் கூப்பாடு. வந்திருந்த கொஞ்சம் பெண்களும் தெறிச்சு ஓடிட்டாங்க. 'என்னய்யா இது சோதனை'னு நினைச்சிட்டிருந்தப்பவே போலீஸ் வந்திடுச்சு.
இதுக்கு மேலயும் பேசாம இருந்தா சரிப்பட்டு வராது, நிகழ்ச்சியை ரத்து செய்தாலும் செய்திடுவாங்கனு பேசிட்டிருந்தவரை இறக்கி விட்டுட்டு நான் மைக் முன்னாடி போயிட்டேன்.
நான் பேச ஆரம்பிச்சதுமே வந்திருந்த சில போலீஸ்காரங்களே பக்கத்துல வந்து, 'நீங்க தொடருங்க, எந்தப் பிரச்னையுமில்ல'னு சொல்லி எங்களுக்குப் பாதுகாப்புக்கு நிக்கிற மாதிரி நின்னுட்டாங்க. அதன் பிறகு ஓடின ஜனங்க கொஞ்சம் கொஞ்சமா திரும்ப, சுமூகமா கூட்டத்தை முடிச்சோம்.
பிறகு ஏகப்பட்ட கூட்டங்கள். தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன். இந்த முறையும் பிரசாரத்துக்குக் கிளம்ப இருக்கேன். தொகுதி, தேதி உள்ளிட்ட விபரங்களைக் கட்சி முறைப்படி அறிவிக்கும்'' என்றவரிடம்,
'தேர்தலில் நிற்க முன்பே சீட்டு கேட்டீர்கள். இந்த முறை கேட்கவில்லையா' என்றோம்.
'திமுகவுல தேர்தல் சீட் கேட்கறவங்கள்ல கொஞ்சம் பேர் அந்த வாய்ப்பு மூலமா தலைவர்கிட்ட பக்கத்துல உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிட மாட்டோமானுதான் விருப்ப மனுவே கொடுப்பாங்க.
நானுமே ஒரு தடவை விருப்ப மனு கொடுத்து நேர்காணலுக்காக கலைஞர் முன்னாடி போய் உட்கார்ந்தேன். தளபதி அந்த அறையில கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்தார்.
என்னைப் பார்த்ததுமே கலைஞர், 'என்னய்யா ஷூட்டிங் இல்லையா'னுதான் கேட்டார்.
'இல்லய்யா இருக்கு'ன்னு இழுத்தேன். 'அப்புறம் ஏன்?'ன்னார்.
எனக்குப் புரிஞ்சு போச்சு.
அடுத்து சிரிச்சுகிட்டே, 'எவ்வளவு செலவழிப்ப'னு கேட்டார். அந்தக் கேள்விக்கும் நான் பதிலைக் கொஞ்சம் இழுக்க, தளபதியைப் பார்த்து, 'நீ பார்த்துக்கோ'ன்னு சொன்னார். அதுதான் அவர் எங்கிட்டயும் என் தொடர்பாகவும் பேசிய கடைசி வார்த்தை.
அவர் என்ன நினைப்புல சொன்னாரோ, ஆனா இப்ப வரை தளபதி என்னைப் பார்த்துகிடுறார்னுதான் சொல்வேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார் போஸ்.



















