ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!
``அமைச்சரவையில் அதிமுகவா... ஆலோசித்து முடிவெடுப்போம்" - செல்வப்பெருந்தகை
அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின விழாவான இன்று, கிண்டியில் இருக்கும் அயோத்தி தாசர் மணிமண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் குருவாக விளங்கியவரும், மாபெரும் தலைவருமான திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசருக்கு மலர் அஞ்சலி செலுத்தி அவருடைய புகழைப் பாடுவதில் பெருமை அடைகிறோம். கடந்த 2023-ம் ஆண்டு சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பண்டிதர் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைத்துத் தந்த அன்றைய முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

மேலும், இனிவரும் காலங்களில் இந்தப் பேரொளியின் மணிமண்டபத்தையும், அதன் அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் மணிமண்டபங்களையும் புதிய அரசு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். புதிய அமைச்சரவையில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள், எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்கக்கூடும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடிதத்திலேயே இடம்பெற்றுள்ளன. நீங்களும் அதனைப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்.
முதலமைச்சர் பதவிக்காக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு எனது கவனத்திற்கு வரவில்லை. இரு கட்சிகளும் இணைவது அல்லது கூட்டணி வைப்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் மட்டுமே வந்தது.

அவ்வாறு கூட்டணி வைப்பார்களா என்பது குறித்து 1000 மில்லியன் கேள்விகள் உள்ளன. என் தனிப்பட்ட கருத்து என்ற முறையில் அதற்கு வாய்ப்பே இல்லை." என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது மற்றும் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ``இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்குக் கண்டிப்பாகக் கொண்டு செல்வேன்" என்று உறுதியளித்தார். தொடர்ந்து பேசியவர், ``அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றால் அது குறித்து விரிவாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.











