``அமைச்சரவையில் அதிமுகவா... ஆலோசித்து முடிவெடுப்போம்" - செல்வப்பெருந்தகை
கம்பம்: அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு; அதிகாரிகளை எச்சரித்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா!
தேனி மாவட்டம், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததுடன், குப்பைகள் மற்றும் முட் புதர்கள் சூழ்ந்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வுக்குச் சென்ற எம்.எல்.ஏ., அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார்.
“மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா? மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா?” என்று கேட்டறிந்தார்.

தொடர்ந்து குழந்தைகள் வார்டு, பெண்கள் வார்டு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் சென்று நோயாளிகளுடன் அருகில் அமர்ந்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கவனமாக கேட்டார். “நான் உங்களுக்கானவன்… உங்களில் ஒருவன்… எந்த நேரத்திலும் என்னை தொடர்புகொள்ளலாம்” என்று கூறி தனது செல்போன் எண்ணையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் மற்றும் வசதிகளை உடனடியாக பெற்றுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சின்னமனூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மற்றும் முட் புதர்கள் அதிக அளவில் காணப்பட்டதை பார்த்த எம்.எல்.ஏ., “48 மணி நேரத்திற்குள் குப்பைகளையும் முட் புதர்களையும் அகற்ற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்த முட் புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்ற தனது சொந்த ஜே.சி.பி. எந்திரத்தை அனுப்பி சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். மருத்துவமனையில் பழுதடைந்திருந்த மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்தார். குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் சிரமமின்றி இருக்க தனது சொந்த செலவில் குளிர்சாதன வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இந்த மனிதநேய செயல்பாடுகளை பார்த்த பொதுமக்கள், “மக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்கும் மக்கள் பிரதிநிதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் தலைமையிலான மக்களாட்சி அரசின் செயல்பாடுகளுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு” என்று பாராட்டுத் தெரிவித்தனர்.

















