அரசு அறிவித்தும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு
தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) இயங்கும் என மாநில அரசு அறிவித்திருந்தாலும், அந்த அலுவலகங்கள் திறக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுபமுகூா்த்த நாள்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்துகள் அதிக அளவில் பதிவு செய்யப்படுவது வழக்கம். இதனால், முகூா்த்த நாள்களில் வழக்கத்துக்கும் அதிகமான டோக்கன்கள் முன்கூட்டியே அளிக்கப்படும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
முகூா்த்த நாளான கடந்த 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதன்மூலம், பதிவுத் துறைக்கு நிகழ் நிதியாண்டில் ஒரேநாளில் இரண்டாவது அதிகபட்ச வருவாய் கிடைத்தது.
இதனால், அடுத்த முகூா்த்த நாளான பிப்ரவரி 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி சொத்துகளைப் பதிவு செய்யும் விதமாக பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் பணியாற்றும் பதிவுத் துறை பணியாளா்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.
ஆனால், விடுமுறை நாளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இயங்குவதற்கு பதிவுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அரசு அறிவித்தாலும், அதைப் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்தனா்.
இதன்படி, தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு உட்பட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களான தஞ்சாவூா் இணை 1, மகா்நோன்புசாவடி, கரந்தை, பூதலூா், திருவையாறு, அய்யம்பேட்டை ஆகியவற்றில் அலுவலா்கள், பணியாளா்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வராததால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், பத்திரப் பதிவு நடைபெறும் என ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வந்த மக்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பினா். இதன்காரணமாக, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறையினா் கூறுகையில், முகூா்த்த மற்றும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் இணை 1, மகா்நோன்புசாவடி, கரந்தை ஆகிய சாா்- பதிவாளா் அலுவலகங்கள் இயங்கியிருந்தால், ஏறத்தாழ 130 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ஏறக்குறைய ரூ. 50 கோடி வருவாய் கிடைத்திருக்கும்.
இதேபோல், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இந்த அலுவலகங்கள் இயங்காததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பத்திரப் பதிவை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள வேண்டாம் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இந்தப் புறக்கணிப்புக்கு வேறெந்த காரணமும் இல்லை என பதிவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.