ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க சரி... ஆனா பணம் எங்க பாஸ்? தம்பதிகளே கவனியுங்க!
அவசர நிலை முதல் அயோத்தி வரை: இந்திய வரலாற்றைக் குரலால் செதுக்கிய மார்க் டல்லி காலமானார்!
தெற்காசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளரும், பிபிசி (BBC) செய்தி நிறுவனத்தின் இந்திய முகமாகப் போற்றப்பட்டவருமான மார்க் டல்லி (90), டில்லியில் நேற்று காலமானார்.
அக்டோபர் 24, 1935-ல் கொல்கத்தாவில் பிறந்த இவர் தன் சீரிய ஆற்றலாலும், தீவிர அர்பணிப்பு மிக்கப் பணிகளாலும் பெரும் உச்சத்தை அடைந்தார்.
சர் மார்க் டல்லி 1964-ம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில் இணைந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் பிபிசியில் பணியாற்றினார். 1975-ம் ஆண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை மற்றும் இந்திரா காந்தியின் படுகொலை போன்ற இக்கட்டான காலங்களில், நம்பகமான செய்திகளுக்காக இந்தியர்கள் மார்க் டல்லியின் குரலையே மலைபோல் நம்பியிருந்தனர்.

அரசு தணிக்கை நிலவிய அவசரநிலை காலத்தில், இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மார்க் டல்லியிடம் கூறப்பட்டது. இதுவே அவரைப் பொதுமக்களிடையே ஒரு தேசிய அடையாளமாக நிலைநிறுத்தியது. மக்கள் ரேடியோக்களில் பெரும் போராட்டத்திற்கு, இடையே மார்க் டல்லியின் செய்திகளைக் கேட்டு நிகழ்வுகளைப் புரிந்து கொண்டனர்.
தெற்காசியாவின் மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்களை உலகிற்குத் தனது அறிக்கைகள் மூலம் மார்க் டல்லி கொண்டு சேர்த்தார். இந்தியா-பாகிஸ்தான் போர்கள், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் தூக்குத்தண்டனை, 1984 போபால் விஷவாயு விபத்து, ஆபரேஷன் புளூ ஸ்டார், ராஜீவ் காந்தி படுகொலை, பாபர் மசூதி இடிப்பு எனப் பல முக்கிய நிகழ்வுகளை அவர் முன்னின்று பதிவு செய்தார்.
குறிப்பாக1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, பிபிசி மீது கோபத்தில் இருந்த ஒரு கும்பலால் மார்க் டல்லியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஒரு அறையில் பல மணிநேரம் அடைத்து வைக்கப்பட்ட அவரை, உள்ளூர் அதிகாரி ஒருவரும், பூசாரி ஒருவரும் இணைந்து அவரை மீட்டு, உயிரைக் காப்பாற்றினர்.
மேலும், வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரரான மார்க் டல்லி, இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதியுள்ளார். 1985-ல் சதீஷ் ஜேக்கப்புடன் இணைந்து எழுதிய Amritsar: Mrs Gandhi’s Last Battle அவரது முதல் புத்தகமாகும்.
2017-ல் வட இந்தியாவின் கிராமப்புறக் கதைகளை உள்ளடக்கிய Upcountry Tales என்ற தனது கடைசிப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது சேவையைப் பாராட்டி 1992-ல் பத்மஸ்ரீ, 2002-ல் Knighted மற்றும் 2005-ல் பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
1994-ம் ஆண்டு பிபிசியின் அப்போதைய இயக்குநர் ஜான் பிர்ட் உடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் தனது துணைவியாரும் சக பத்திரிகையாளருமான கில்லியன் ரைட்டுடன் வசித்து வந்தார். இருவரும் இந்தி மொழியில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர்கள்.

2019 வரை பிபிசி ரேடியோவில் Something Understood என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தார். அதற்குப் பிறகு சில உடல்நலப் பிரச்னை காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில்தான் அவர் காலமான செய்தி வெளியாகியிருக்கிறது.
நிஜாமுதீனில் உள்ள அவரது வீட்டின் பெயர்ப்பலகையில் 'மார்க் டல்லி' என்று மட்டுமே இருக்கும். ஆனால், நீண்ட காலமாக பிபிசியின் அதிகாரப்பூர்வமற்ற இந்தியத் தலைமையகமாகச் செயல்பட்ட இடம் அதுதான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.


















