'இது சட்டமன்றமா... இல்ல சண்டை மன்றமா?' - திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆட்டிசம்: `கையேந்த விரும்பல; உழைத்து வாழ வாய்ப்பு கெடச்சா போதும்'- பொம்மை வியாபாரம் செய்யும் குமார்!
சென்னை, தாம்பரத்தில் சாலையோரக் கோயில் ஒன்றின் முன்பு, "இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது" என்று எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய இடம். அந்த இடத்தில் விரிக்கப்பட்டிருந்த ஒரு ஷீட்டின் மீது சில பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விற்றுக்கொண்டிருந்த இளைஞரைப் பார்த்தால், அது ஒரு சாதாரண வியாபாரமாகவே தோன்றும். ஆனால், அருகில் சென்று அவருடன் பேச முயன்றபோதுதான், அந்த பொம்மைகளை விற்கும் இளைஞரின் வாழ்க்கைப் போராட்டம் புரிந்தது.
ஆட்டிசம் (Autism) பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளியான குமார், யார் கையையும் நம்பி இருக்காமல், சாலையோரத்தில் சிறிய பொம்மைகளை விற்று தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
அவருடன் பேச முயன்றபோது, ஆரம்பத்தில் மிகவும் தயக்கத்துடனும் பதற்றத்துடனும் இருந்தார். "வீடியோ எடுக்காதீங்க... ரெக்கார்டு பண்ணாதீங்க..." என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

ஆட்டிசம் சார்ந்த பதற்றத்துடன் கூடிய அந்தப் பயத்துக்குப் பின்னால் மறக்க முடியாத ஒரு கசப்பான அனுபவம் இருந்தது.
பின்னர் பொறுமையாக நம்மிடம் பேசத் தொடங்கியவர், ``எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான் இருக்கிறார். ஐ.டி.ஐ படிப்பை முடித்திருக்கிறேன்.
ஆட்டிசம் பாதிப்பு காரணமாக, பல இடங்கள் ஏறி இறங்கியும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் இந்தச் சிறிய பொம்மை வியாபாரத்தை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறேன்" என்று குமார் பகிர்ந்துகொண்டார்.
அவரைப் போன்ற பலர் இன்று வேலை தேடி அலைகிறார்கள். அவர்களின் கனவு வெறும் வேலை பெறுவது மட்டுமல்ல; எதிர்காலத்தில் தாங்களே வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மற்றவர்களுக்கும் வேலை வழங்கும் நிலையை அடைய வேண்டும் என்பதே. "எங்களை இரக்கத்துடன் பார்க்க வேண்டாம்; எங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு மட்டும் வழங்குங்கள்" என்பதே அவர்களின் வேண்டுகோள்.
அவரின் கனவு மிகவும் எளிமையானதுதான்; ஆனால் அதன் பின்னால் பெரிய லட்சியம் இருக்கிறது.
"எனக்கு ஒரு சிறிய கடை நடத்த வேண்டும். அதற்கான இடம் மட்டும் அரசு வழங்கினால் போதும். கடையை நாங்களே அமைத்துக்கொள்கிறோம். வாடகையோ, லீஸோ, டெண்டரோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்" என்று குமார் கூறுகிறார்.
"அந்தக் கடை கிடைத்தால், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். யாரிடமும் கையேந்தாமல், அவர்களும் தங்கள் உழைப்பால் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று குமார் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளாக இதே சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருவதாகவும், பலமுறை முதல்வர் தனிப்பிரிவு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த பதிலும் உதவியும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
"எங்களுக்குத் தேவை உதவித்தொகை இல்லை; உழைத்து வாழ ஒரு நிரந்தரமான இடம் மட்டும் வேண்டும்" என்பதே அவரது கோரிக்கை. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
உடல் மற்றும் நரம்பியல் சவால்கள் அவரது வாழ்க்கையைச் சோதித்திருக்கலாம்; ஆனால் அவரது தன்னம்பிக்கையைப் பறிக்க முடியவில்லை!


















