செய்திகள் :

காக்க வந்த கரைகள்... கழுத்தை நெரித்த கதை: `கோசி திட்டம்' ஒரு வரலாற்றுப் பிழையா?

post image

இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு 'அவல்ஷன்' (Avulsion) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பகுதியின் நில அமைப்பையே குறுகிய காலத்தில் மாற்றி எழுதும் திறன் கொண்டது.

இப்போது நேபாளத்தில் நடந்ததும் இது தான். ஒரு பனிப்பாறை சரிவு... அதனை தொடர்ந்து பெரு வெள்ளம். கரைகளை உடைத்து உயிர்களையும் அவர்களின் உடமைகளையும் அடித்துச் சென்றிருக்கிறது.

வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கரைகள் ஒருபோதும் உடையாது என்று நேபாள மற்றும் இந்திய மக்களும், அரசாங்கங்களும் எளிமையாக நம்பினர். ஆனால், இரு நாடுகளிலும் ஆற்றுக்கரைகள் உடைந்து பேரழிவை ஏற்படுத்தியதற்கான நீண்ட, சோகமான வரலாறு ஏற்கெனவே இருந்தது.

இது, இயற்கையை அடக்க நினைத்த மனிதனின் முயற்சி, விபரீதத்தில் முடிந்ததன் வரலாறு.

காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய வட இந்தியாவில், விவசாயிகள் மற்றும் ஜமீன்தார்கள் அவ்வப்போது தற்காலிக மண் கரைகளை ('பந்த்ஸ்') அமைப்பது வழக்கம். இது சிறிய நிலப்பரப்பை குறிப்பிட்ட காலத்திற்கு வெள்ளத்திலிருந்து பாதுகாக்க மட்டுமே பயன்பட்டது.

ஆனால், வெள்ளத்தை முழுமையாகத் தடுப்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மலைப்பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணையும் கரிமப் பொருட்களையும் கொண்டுவந்து வயல்களை வளப்படுத்தியதால், ரசாயன உரங்கள் இல்லாத அக்காலத்தில் விவசாயிகள் அதை நம்பியிருந்தனர். வெள்ளம் சில நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்தாலும், அதன் வேகம் குறைவாக இருந்ததால் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன.

ஆனால், தெற்காசியாவில் நிரந்தரமாக வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கில் பெரிய அளவிலான கரைகளை முதலில் கட்டியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். ஏழை விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்று அவர்கள் கூறினாலும், அதன் பின்னணியில் அவர்களின் சுயநலமும் இருந்தது. ஒரிசாவின் மகாநதி டெல்டாவில், சொத்துக்களைத் தெளிவாக வரையறுக்கவும், வரி வசூலிக்கும் அதிகாரத்தை வலுப்படுத்தவும் ஆங்கிலேயர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர். மேலும், தங்களது ரயில்வே போன்ற உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவே கரைகளைக் கட்டினர்.

1850-களில், கல்கத்தாவிற்கு மேற்கே தாமோதர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது அவர்களின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று.

ஆனால், சிக்கல்கள் விரைவிலேயே வெளிப்படத் தொடங்கின. வண்டல் மண் வராததால் விவசாய விளைச்சல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் அளித்தனர். மேலும், கரைகள் இருப்பதால், நிலப்பகுதியில் தேங்கும் நீர் மீண்டும் ஆற்றுக்குள் வடிய முடியாமல் போனது. இது வெள்ளத்தை மேலும் நீடிக்கச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சரியான பராமரிப்பு இல்லாததால் கரைகள் உடைந்தபோது, ​​தண்ணீர் அதிவேகத்தில் வெளியேறி சுற்றுப்புறப் பகுதிகளைச் சூறையாடியது.

இது மெதுவாக உயரும் இயற்கை வெள்ளத்தை விடப் பன்மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததால், தாமோதர் கரைகள் கட்டப்பட்ட பத்தாண்டுகளுக்குள்ளேயே இடிக்கப்பட வேண்டியதாயிற்று.

கோசி நதி, நேபாளத்தின் இமயமலையில் உருவாகி பீகாரில் கங்கையுடன் கலக்கிறது. இது திபெத்திய பீடபூமி மற்றும் நேபாள மலைகளில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. மலைப்பகுதிகளில் இருந்து அரிக்கப்படும் கோடிக்கணக்கான டன் வண்டல் மண்ணை இது தன்னுடன் சுமந்து வருகிறது. நவீன ஆய்வுகளின்படி, கோசி ஆறு ஆண்டுக்கு 80 முதல் 120 மில்லியன் கன மீட்டர் வண்டல் மண்ணைச் சுமந்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு 8 முதல் 12 ஆண்டுகளில் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்கு வண்டல் மண் படிய வைக்கப்படுகிறது.

சமவெளியை அடைந்ததும் ஆற்றின் வேகம் குறைகிறது. அப்போது, வண்டல் மண் படியத் தொடங்குகிறது. இதனால், ஆற்றின் படுகை தொடர்ந்து உயர்ந்து, ஆறு தாழ்வான பகுதியைத் தேடி தனது பாதையை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, கோசி நதி 100 கிலோமீட்டருக்கும் மேலாக மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

கரைகளைக் கட்டும்போது, ஆறு குறுகிய பரப்பிற்குள் அடைபடுவதால், வண்டல் மண் முன்பை விட வேகமாகப் படிந்து, ஆற்றின் மட்டம் சுற்றியுள்ள நிலப்பகுதியை விட உயர்ந்துவிடுகிறது ('சூப்பர்-எலிவேஷன்'). இது கரைகள் உடையும்போது பேரழிவை ஏற்படுத்துகிறது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேயப் பொறியாளர்களே கரைகள் கட்டுவது ஆபத்தானது என்பதை உணரத் தொடங்கினர். 1897 இல் கல்கத்தாவில் நடந்த வெள்ள மாநாட்டில், ஒரு ராணுவ அதிகாரி, "கரைகள் கட்டுவது இயற்கையை அவமதிப்பதற்கு சமம்; அந்த அவமானத்தை இயற்கை பழிவாங்காமல் விட்டதில்லை" என்று குறிப்பிட்டார்.

1937 வாக்கில், பீகாரின் தலைமைப் பொறியாளர் ஜி.எஃப். ஹால், "கரைகள் நீரின் சுதந்திரமான ஓட்டத்தைத் தடுத்து, வெள்ளத்தின் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றனவே தவிரக் குறைப்பதில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், கரைகளுக்கு எதிரான இந்த அதிகாரப்பூர்வ நிலைப்பாடு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, வெள்ளக் கட்டுப்பாட்டுக் கொள்கை தலைகீழாக மாறியது. 1953 இல் கோசியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, இமயமலை அடிவாரத்தில் இருந்து கங்கையுடன் கலக்கும் இடம் வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு கோசி ஆற்றின் இருபுறமும் கரைகள் கட்டும் 'கோசி திட்டம்' அறிவிக்கப்பட்டது.

பொறியாளர்களை சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பி, முறையே மஞ்சள் ஆறு மற்றும் மிசிசிப்பி ஆறுகளில் உள்ள கரை அமைப்புகளை ஆய்வு செய்ய அனுப்பியது அரசு. ஆனால், இந்த ஆய்வுகள் திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரு நாடுகளிலும் சமீபத்தில்தான் கரைகள் உடைந்து பேரழிவு ஏற்பட்டிருந்தது. உதாரணமாக, 1938 இல் ஜப்பானியப் படைகளைத் தடுக்க, சீன தேசியவாத இராணுவம் மஞ்சள் ஆற்றின் கரைகளை உடைத்துவிட்டது. ஆற்றின் மட்டம் உயர்ந்திருந்ததால், அந்த வெள்ளத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இறந்தனர். இந்த எச்சரிக்கைகளை இந்தியப் பொறியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

1955-ல் தொடங்கிய கரைகள் கட்டும் பணி 1959-ல் நிறைவடைந்தது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் மண்வெட்டி மற்றும் கூடைகளைக் கொண்டு மண் சுமந்து இந்த மாபெரும் சுவர்களை எழுப்பினர். ஆரம்பத்தில் இத்திட்டம் குறித்து பரவலான உற்சாகம் நிலவியது. இது தேசத்தின் பெருமைச்சின்னமாகப் பார்க்கப்பட்டது. "ஒரு கணிக்க முடியாத ஆறு அடக்கப்பட்டுள்ளது... எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அறுவடை பெருகும். நிலம் வளமாகும்" என்று ஒரு அரசாங்க ஆவணப்படம் கொண்டாடியது.

ஆனால், கொண்டாட்டங்கள் விரைவில் முடிவுக்கு வந்தன. சுமார் 100,000 ஹெக்டேர் நிலமும், 300-க்கும் மேற்பட்ட கிராமங்களும் கரைகளுக்குள் சிக்கிக்கொண்டன. கிராம மக்கள் தங்களைக் கரைகளுக்கு வெளியே வைக்குமாறு போராடினர். கிராமங்களுக்குள் மோதல்கள் வெடித்தன. பழையபடி, வடிகால் குழாய்கள் செயலிழந்து, நிலப்பரப்பில் நீர் தேங்கும் பிரச்சனை ('வாட்டர்-லாக்கிங்') தீவிரமானது. 2,000 சதுர கிலோமீட்டர் நிலத்தைப் பாதுகாப்பதாகக் கூறப்பட்ட இத்திட்டத்தால், 1990-களில் 3,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலம் நீரில் ஊறிப்போனது..

வெள்ளமும் ஓயவில்லை. 2008 குசாஹா உடைப்புக்கு முன்னர், 1963, 1968, 1971, 1980, 1984, 1987 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் கோசி கரைகள் உடைந்தன.

அரசாங்கத் தரவுகளின்படி, பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதி 1954-ல் 25,00,000 ஹெக்டேராக இருந்தது, 1994-ல் 68,00,000 ஹெக்டேராக அதிகரித்தது. பாதுகாக்க வந்த கரைகளே, கழுத்தை நெரிக்கும் கதையாக மாறியதுதான் கோசி திட்டத்தின் வரலாற்றுச் சோகம்.!

மருதமலை: பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வரும் குட்டை – நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குட்டை ஒன்று தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. குட்டையின் நீர்ப்பரப்பில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுக... மேலும் பார்க்க

கூடலூர்: யானைக் காட்டில் ஆட்கொல்லி புலியைத் தேடி அலையும் வனத்துறை! | Photo Album

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிட... மேலும் பார்க்க

பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று.ஆனால், இந்தப் பகுதியின் பின்புறம் சென்றால் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உப்பளம் பகுதியில் இருந்து வரும... மேலும் பார்க்க

ஊசித்தோப்பு: `மனு மேல் மனு... தீர்வு மட்டும் இல்லை!'- போராடும் மக்களும் அதிகாரிகளின் விளக்கமும்!

“30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை... இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?” – அதிகாரிகளின் ஆய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாணியம்பாடி ஊசித்தோப்பு கிராம மக்கள்.திருப்பத்தூர் மாவட்டம், வா... மேலும் பார்க்க

‘குப்பை மேடாகும் தொன்மையான பேரூர் திருநீற்று மேடு’ - ஆற்றங்கரை நாகரிகச் சின்னம் பாதுகாக்கப்படுமா?

கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுமார் 2,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் திருநீற்று மேடு எனப்படும் சாம்பல் மேடு, தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை எ... மேலும் பார்க்க

Man Eater: அதே புலி, அதே இடம்; மேலும் ஒருவரைக் கொன்று தின்ற ஆட்கொல்லியால் அச்சத்தில் உறைந்த மக்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால், அதனைச் சீரமைப்பதற்காக கடந்த 9- ம் தேதி தன... மேலும் பார்க்க