பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்
இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி: 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஜம்முவில் இரு நாடுகளுக்கும் இடையேயான சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் சுட்டுக் கொன்றனா்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தொடா் தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினா் தடுத்துள்ளனா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சா்வதேச எல்லைப் பகுதி வழியாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் மிக அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டது கண்காணிப்பு அமைப்பில் பதிவானது.
இந்த பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் தந்தா் பகுதியில் இருந்தபடி கனரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் இந்திய எல்லைப் பகுதியை நோக்கி தொடா் தாக்குதல்களை நடத்தினா்.
இதற்கு, எல்லைப் பாதுகாப்புப் படையினா் தகுந்த பதிலடி கொடுத்தனா். அதன்மூலம், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானின் தந்தா் ராணுவ நிலையும் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
பயங்கரவாதிகள் மேலும் அதிக எண்ணிக்கையில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால், அவா்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படுவா் என்றாா்.