Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Albu...
`இந்த தொழில் மேல இருக்குற பாசத்துலதான் விடாம செஞ்சுட்டு இருக்கேன்'- ஒரு பானைக் கலைஞனின் கதை!
மண்ணில் தொடங்கும் ஒரு வாழ்க்கை:
மண்ணுக்கு உயிர் இல்லை என்பார்கள். ஆனால் அந்த மண் ஒரு கலைஞனின் கைகளில் சுழலும்போது அது ஒரு பானையாக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாகவும் மாறுகிறது.
அந்த மண்ணோடு அரை நூற்றாண்டாக திருவள்ளூர் மாவட்டம், ராஜா நகரத்தில் வாழ்ந்து வரும் கோவிந்தசாமி அவர்களை கள ஆய்வின் போது சந்தித்தேன். அவரது கைகளில் ஒட்டியிருந்த மண், அவர் கடந்துவந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கைப் பயணத்தை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருந்தது.
அவரை சந்தித்தபோது, பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாக மண்ணோடு வாழ்ந்து வரும் ஒருவரின் அனுபவம் அவரது பேச்சில் தெரிந்தது.

தலைமுறைகளை கடந்த பானைத் தொழில்:
“நான் சின்ன வயசுல இருந்தே இந்த வேலை பண்ணிட்டு வரேன். எங்க அப்பா, தாத்தா காலத்துல இருந்தே இந்த தொழில் இருக்கு. அவங்களப் பார்த்துதான் கத்துக்கிட்டேன்,” என்று தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி கூறத் தொடங்கினார். பானை தயாரிக்கும் முறையைப் பற்றி கேட்டபோது, “முதல்ல நல்ல களிமண் ஏரிகள்ல இருந்து எடுத்துட்டு வந்து, அதை நன்றாக பிசைந்து அதிலிருந்து முள் போன்ற பொருள்களை எடுத்து அதை நல்ல பக்குவப்படுத்தி காய வெப்போம். அதுக்கப்புறம் சக்கரத்துல வெச்சு கையால வடிவம் கொடுப்போம்.
பானை, குடம், அடுப்பு, மாதிரி பல பொருள்கள் செய்வோம். பிறகு வெயில்ல காயவைப்போம். இதெல்லாம் முடிக்க சுமார் பத்து நாள்கள் ஆகும். பின்னர் தயாரான பொருட்
களை நாங்கள் தலைகளில் சுமந்து சந்தைகளில் விற்போம்.

எங்களுடைய வாழ்க்கை கணிக்க முடியாத பருவகால மாற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மழை பெய்தால் காய வைத்த பானைகள் சேதமாகிவிடும். வெயில் அதிகமாக இருந்தால் மட்டுமே வேலைகள் விரைவாக முடியும். அதனால் இயற்கையோடு சேர்ந்து தான் எங்களுடைய வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
அவரது பணியிடத்தை சுற்றிப் பார்த்தபோது, வெயிலில் காய வைக்கப்பட்டிருந்த பானைகள் ஒவ்வொன்றும் ஒரு கலைஞனின் பொறுமையையும் உழைப்பையும் வெளிப்படுத்தியது. ஒரு பானை உடைந்தால் அது வெறும் பொருளின் இழப்பு மட்டுமல்ல; அதில் செலவிட்ட நேரம், உழைப்பு மற்றும் எதிர்பார்ப்பும் உடைந்து விடுகிறது.
மண்ணில் இருந்து பானை வரை: உருவாக்கத்தின் பயணம்:
“ஒரு பானையை உருவாக்குறது சுலபம் இல்ல. மண்ணை எடுத்து வரதுல இருந்து சந்தையில விற்பது வரை நிறைய கஷ்டம் இருக்கு. ஆனா இந்த வேலை மேல இருக்குற பாசத்தால தான் இன்னும் இதை விடாம பண்ணிட்டு இருக்கோம்,” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

அந்த புன்னகைக்குப் பின்னால் பல ஆண்டுக்கால போராட்டங்களும் அனுபவங்களும் மறைந்திருந்தன. மண்ணை வடிவமைக்கும் அவரது கைகள், உண்மையில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையும் ஒரு பாரம்பரியத்தின் வரலாறையும் வடிவமைத்துக் கொண்டிருந்தன. இன்று பலர் மறந்து வரும் இந்தக் கலை, கோவிந்தசாமி போன்ற கலைஞர்களின் அர்ப்பணிப்பால் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மாறிவரும் சந்தையும் குறையும் வரவேற்பும்:
“முன்னாடி இந்த பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. இப்போ பிளாஸ்டிக், ஸ்டீல் பொருள்கள் வந்ததுக்கப்புறம் கொஞ்சம் வியாபாரம் குறைஞ்சிருக்கு. ஆனாலும் மண் சட்டி, மண் குடம் வாங்குறவங்க இன்னும் இருக்காங்க,” என்று அவர் கூறினார்.
அவரது வார்த்தைகளைக் கேட்டபோது, உழைப்புக்கும் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பல கைவினைக் கலைஞர்களின் நிலை நினைவுக்கு வந்தது.
அடுத்த தலைமுறைக்கு செல்லாத கலை:
"எங்க அப்பா எங்களுக்கு கத்துக்கொடுத்த மாதிரி நாங்க அடுத்த தலைமுறைக்கு கத்துக்கொடுக்கணும்னு நினைச்சோம். ஆனா இப்போ இந்த தொழிலுக்கு ஆட்கள் இல்லை, வருமானமும் குறைஞ்சிருக்கு. அதனால எங்க வீட்டுல இருக்குற பசங்களையும் இந்த தொழிலுக்கு வரச் சொல்லல. அவங்க நல்ல வாழ்க்கை வாழணும்னுதான் ஆசை.





ஆனா இந்தக் கலை எங்களோடவே முடிஞ்சிடுமோனு நினைச்சா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு," என அவர் கூறியபோது, அவரது குரலில் இருந்த ஏக்கமும் முகத்தில் தெரிந்த சோகமும் இந்தக் கலையின் எதிர்காலத்தைப் பற்றிய அவரது கவலையை வெளிப்படுத்தியது. அரை நூற்றாண்டாக மண்ணோடு வாழ்ந்த ஒரு கலைஞனின் மனவேதனை அந்த சில வார்த்தைகளிலேயே உணர முடிந்தது.
ஏழைக்கு இடமில்லையா
எங்கும் இந்த தொல்லையா
ஈசன் பாதை இல்லையா
பேச மனம் இல்லையா...
பாழ் மழை பெய்யல
பஞ்சமும் ஒளியை
பாடு படும் கையில
பானை செஞ்சி நாலணா
கஞ்சிக்கொரு மூணனா
கையிலேது காலணா...
என்ற பாடலை பாடி அவரின் வலிகளை கூறி முடிக்கிறார்.
ஒரு பானையை உருவாக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும், அந்த தொழிலின் பின்னால் இருக்கும் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள முடிந்தது. மண்ணை வெறும் பானையாக மட்டுமல்லாமல், தனது வாழ்க்கையாக வடித்து வரும் கோவிந்தசாமி போன்ற கலைஞர்களால்தான் இந்த பாரம்பரிய தொழில்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.
ஒரு பானையை வாங்கும் போது அதன் விலையை மட்டும் பார்க்காமல், அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த பானையில் மண் மட்டுமல்ல, ஒரு மனிதனின் அனுபவமும் வாழ்க்கையும் கலந்திருக்கிறது.
- தர்ஷினி.சி



















