Nvidia-வின் 'AI PC' : ஒற்றை சிப் தான்! `உங்க லேப்டாப்பே பேசும், யோசிக்கும்' - வே...
'எத்தனை குழந்தைங்க, எத்தனை முறை வந்தாலும் பால் இலவசம் தான்' - நேயம் பேசும் நெல்லை சந்திரா பேக்கரி
'அந்த மனசு தான் சார் கடவுள்...' என்பதற்கு ஏற்ப திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் சந்திரா பேக்கரியில் பசியோடு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறார், பேக்கரி உரிமையாளர், சுப்பிரமணியம். கடையில் நுழைந்ததுமே கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம், அவர் கூறிய வரிகள், தொலைக்காட்சியில் அவருடைய பாடல்கள் போன்று கடை முழுவதும் விஜயகாந்தின் தீமிலேயே செட்டப் செய்திருக்கும் இந்தக் கடையின் உரிமையாளர், இந்த அற்புதமான சேவையை கொண்டு வந்த சில மாதங்களிலேயே மக்கள் அதிகமானோர் இந்த சேவையினால் பயன்பெற்று வருகிறார்கள்.

இது போன்று சேவைகளை செய்யவே பெரிய மனசு வேண்டும்... இதைப் பற்றி அந்தக் கடையின் உரிமையாளரான சுப்பிரமணியம் நம்மிடம் பேசுகையில்,
'எத்தனை குழந்தைகள் வந்தாலும் எப்பொழுது வந்தாலும்...'
"நான் திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தின் உள்ளே இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறேன். இதற்கு முன்பாக இதனுடைய இன்னொரு கிளை வண்ணாரப்பேட்டையில் கேசவன் சந்திரா பேக்கரியாக இருந்தது. இது என்னுடைய இரண்டாவது பிரான்ச் ஆகும். இந்த கடையை தொடங்கி ஆறேழு மாதங்களே ஆகின்றன. நம்ம பேக்கரியில் பொதுவாக மற்ற பேக்கரிகளில் கிடைக்கும் பொருள்களே கிடைக்கின்றன. அது போக... ஸ்பெஷல் என்னவென்றால் பசியினால் வரும் பச்சிளம் குழந்தைகள், எத்தனை குழந்தைகள் வந்தாலும் யாராக இருந்தாலும் எப்போது வந்தாலும் அவர்களுக்கு பால் இலவசமாக கொடுக்கின்றோம்."
கேப்டன் விஜயகாந்த் வழியில் என்றென்றும்...
இவ்வாறு செய்ய உங்களை எது தூண்டியது என்று கேட்டபோது, "நான் ஒரு விஜயகாந்த் ரசிகர். கேப்டன் யாரிடம் சென்று பேச ஆரம்பித்தாலும் முதலில் கேட்பது 'சாப்பிட்டியா..?' என்றுதான் கேட்பார். இதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது.. அதனால்தான் கடை முழுவதும் அவருடைய தீமிலேயே செட் அப் பண்ணி இருக்கிறேன். அவருடைய அந்த நற்குணம் தான் என்னுடைய இந்த சேவையை தொடங்க உந்துதலாக இருந்தது. என்னுடைய இரண்டு கடைகளிலுமே இந்த சேவை இருக்கிறது.

மக்களிடையே பெரும் வரவேற்பு...
என்னுடைய இந்த சேவையினால் ஒரு நாளைக்கு சராசரியாக இருபதிலிருந்து இருபத்தைந்து குழந்தைகள் பயனடைகிறார்கள். அதிலும் சில எளிய மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மூன்று வேளையும் நம்முடைய கடையில் தான் பால் வாங்கிச் செல்கிறார்கள். பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு பெரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றார்கள். எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது.

'ஏழை எளிய மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும்..'
என்னுடைய சேவை இத்துடன் நிற்கப் போவதும் இல்லை. வரும் காலங்களில் ஊனமுற்றவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இலவசமாக உணவளிக்கும் சேவையை தொடங்க இருக்கிறேன். பச்சிளம் குழந்தைகளோடு நிற்காமல் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த முயற்சியாக இருக்கும். கேப்டன் மறைந்தாலும் அவருடைய வழியில்தான் நான் இன்றளவிலும் செல்கிறேன்" என்று தன்னுடைய அடுத்த கட்ட முயற்சிகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
வாழ்த்துகள் சுப்பிரமணியம், நேயம் சார்ந்த உங்கள் சேவை தொடரட்டும்!




















