தொடரும் விலகல், தத்தளிக்கும் நிர்வாகிகள் : மம்தாவின் கைகளை விட்டு நழுவுகிறதா திர...
கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன
கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத கல்குவாரிகள் சில அரசின் உரிமம் காலாவதியான நிலையிலும் கற்கள் வெட்டி எடுப்பதை கரூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஜெகநாதன் அளித்த புகார் ஒன்றின், விசாரணைக்காக கடந்த 2022 -ம் ஆண்டு, செப்டம்பர் 9-ம் தேதி கரூர் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் கல்குவாரியை சோதனை நடத்தி குவாரிக்கு சீல் வைத்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், அதே வருடம் செப்டம்பர் 18-ம் தேதி சமூக ஆர்வலர் ஜெகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் குப்பம் கிராமத்திலிருந்து காருடையாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மினி வேனை ஏற்றி கொலை செய்து விட்டு, இந்த கொலையினை மறைக்க சாலை விபத்து போல சித்திரித்து நாடகம் ஆடினார். ஆனால், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ரஞ்சித் குமார் உள்ளிட்ட மூன்று பேர் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது, கடந்த நான்கு ஆண்டுகளாக , கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு விசாரணை முடிவுற்று, நேற்று மாலை தீர்ப்பு வாசித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்குவாரி உரிமையாளர் க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது: 42), ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(வயது: 52) மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் சக்திவேல்(வயது: 28) ஆகிய மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் மூவரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
கரூரை சேர்ந்த சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கு நீதிபதி தண்டனை வழங்கியதை அடுத்து, நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இந்த அதிரடி தீர்ப்புக்கு தங்கது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்,
"இந்த கொலை வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் கரூர் மாவட்டத்தில் இயங்கும் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடி அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால், முந்தைய தி.மு.க அரசு கொலை செய்யப்பட்ட விவசாயிக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தற்போது, புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு கொலை செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஜெகநாதனின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.


















