செய்திகள் :

'இந்த ரெண்டு நாள் வியாபாரத்தை நம்பிதான் எங்க வாழ்க்கையே!'- வாரச்சந்தையும் கிராம மக்கள் வாழ்வாதாரமும்

post image

கிராம வாழ்க்கையின் இதயமாக வாரச் சந்தைகள்:

கிராம வாழ்க்கையை நெருக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், அங்குள்ள வாரச் சந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த ஒரு நாளில் கிராமத்தின் உண்மையான வாழ்க்கை முழுவதும் கண்முன் தெரியும். மக்கள் கூட்டம், வியாபாரிகளின் கூச்சல், புதிய காய்கறிகளின் மணம், விலை பேசும் சத்தம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு தனி உலகத்தை உருவாக்குகின்றன.

கிராமங்களின் வாழ்க்கை முறையில் வாராந்திர சந்தைகள் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நகரங்களில் பெரிய கடைகள் மற்றும் மால்கள் வளர்ந்தாலும், கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இன்னும் நெருக்கமாக இணைந்திருப்பது இந்த வாரச் சந்தைகள்தான். மக்கள் தேவையான காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கும் இடமாகவும், சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்க்கையை நடத்தும் ஆதாரமாகவும் இந்த சந்தைகள் இருக்கின்றன.

அம்மையார் குப்பம் வாரச்சந்தையின் அமைப்பு:

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மையார் குப்பம் பகுதியில் வாரத்திற்கு இரண்டு முறை, இரண்டு இடங்களில் வாரச்சந்தை நடைபெறுகிறது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சிறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள் போன்றவற்றை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சிலர் மார்க்கெட் பகுதிகளில் வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

வாரம் இரண்டு நாள்கள் இந்தச் சந்தை நடைபெறுவதால், அந்த நேரங்களில் ஊரே ஒரு சிறிய திருவிழா போல காட்சியளிக்கிறது. காலையிலிருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். “சந்தை நாளுக்கு” காத்திருந்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் இங்கு ஏராளம். கடைகளை விட குறைந்த விலையில் பொருள்கள் கிடைப்பதால், பொதுமக்கள் அதிகமாக இந்த சந்தையை நம்பி வருகின்றனர்.

சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம்:

இந்த வாரச்சந்தை வெறும் பொருள்கள் வாங்கும் இடமாக மட்டும் இல்லை; பல சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்க்கையை தாங்கி நிற்கும் ஒரு நம்பிக்கையான இடமாகவும் உள்ளது. அவர்களின் அன்றாட வருமானமும் குடும்ப வாழ்க்கையும், இந்த இரண்டு நாள் சந்தையையே அதிகமாக சார்ந்திருக்கிறது.

கனகாவின் வாழ்க்கையும் சந்தைப் போராட்டமும்:

“இதுதான் எங்க வாழ்க்கைம்மா…” என்று பேசத் தொடங்குகிறார் அம்மையார் குப்பம் வாரச்சந்தையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி விற்று வரும் கனகா. “நான் பாகற்காய், கொத்தவரை, வாழைப்பழம், மாம்பழம் மாதிரி காய்கறி, பழங்கள எல்லாம் சுற்றுல இருக்குற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்து இங்க விக்கிறேன். அவங்களும் இயற்கை முறையில தான் விளைவிப்பாங்க. அதனால இதெல்லாம் உடம்புக்கும் நல்லதுதான்” என்று சொல்கிறார்.

“இதுக்கு முன்னாடி கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தேன். ஆனா வயசு ஆக ஆக உடம்பு முடியல. அதனால இப்ப இந்த சந்தையையே நம்பி இருக்கேன். வாரத்துல இந்த இரண்டு நாள்தான் எங்களுக்கு முக்கியம்” என்று அவர் கூறுகிறார்.

காலநிலை மாற்றமும் வியாபார சிரமங்களும்:

“முன்னாடி மழை எப்ப வரும், வெயில் எப்ப அடிக்கும் என்று ஒரு கணக்கு இருந்துச்சு. இப்போ அதுவும் இல்ல. சில நேரம் மழை அதிகமா பெய்யுது, சில நேரம் வெயில் அதிகமா அடிக்குது. அதனால காய்கறி சீக்கிரமா கெட்டுப் போயிடுது. சில நாள் நல்லா வியாபாரம் ஆகும்… சில நாள் எதுவும் விற்காம அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு போகணும்” என்று வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறார்.

“போக்குவரத்து செலவும் அதிகமா இருக்கு. ஆனா இதை விட்டா எங்களுக்கு வேற வேலை தெரியாது. இதை நம்பிதான் குடும்பம் ஓடுது” என்ற அவர் வார்த்தைகளில், சந்தையை நம்பி வாழும் சிறு வியாபாரிகளின் அமைதியான வாழ்க்கைப் போராட்டம் தெரிகிறது.

சந்தையின் மனித உணர்வுகள்:

வாரச் சந்தைகள் வெறும் பொருள்கள் வாங்கும் இடம் மட்டுமல்ல. அது மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடமாகவும் இருக்கிறது. பல நாள்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் அங்கே பேசிக் கொள்வார்கள். குழந்தைகள் சிறிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். வயதானவர்கள் சந்தையின் பரபரப்பை ரசித்து நிற்பார்கள். அந்த ஒரு நாள், கிராமத்தின் இயல்பான வாழ்க்கையை மிகவும் அழகாக காட்டுகிறது.

இன்றைய காலத்தில் பெரிய கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்தாலும், கிராம வாரச் சந்தைகளின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. காரணம், அந்தச் சந்தைகளில் பொருள்களோடு மனிதர்களின் உணர்வுகளும் கலந்திருக்கின்றன.

அதிகாலை முதலே வியாபாரிகள் தங்களது பொருள்களை எடுத்துக்கொண்டு சந்தைக்கு வரத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் மாலை நேரம் வந்தால்தான் சந்தை முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும். அந்தக் கூட்டம் இரவு வரை தொடர்கிறது.

குறைந்த லாபத்தில் நகரும் வாழ்க்கை:

சிலர் காய்கறிகள் விற்கிறார்கள், சிலர் பழங்கள், மலர்கள், திண்பண்டங்கள், சமையல் பொருள்கள் என தங்களால் முடிந்த பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிறிய இடத்தில் கடையை அமைத்து, நாள் முழுவதும் விற்பனை செய்யும் அந்த மனிதர்களின் முகத்தில் சோர்வு தெரிந்தாலும், “இன்னைக்கு நல்லா வியாபாரம் ஆகணும்” என்ற நம்பிக்கை மட்டும் அவர்களின் கண்களில் குறையாமல் இருந்தது.

சந்தையின் சத்தம், மக்கள் கூட்டம், விற்பனையாளர்களின் கூச்சல் இவை அனைத்திற்கும் நடுவில், பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது.

அங்கே வியாபாரம் செய்பவர்கள் வெறும் பொருள்களை மட்டும் விற்கவில்லை... தங்களின் உழைப்பையும், நம்பிக்கையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும்கூட வெளிப்படுத்துகின்றனர்.

எளிமையான வாழ்க்கைக்குள் மறைந்து இருக்கும் மனிதர்களின் உழைப்பையும் பொறுமையையும் இந்தச் சந்தைகள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

- தர்ஷினி.சி