மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது
இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு ரசாயனங்களை அதிக விகிதாச்சார அளவில் பயன்படுத்தி பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரித்து அதை 'இயற்கை உரம்' என மோசடியாக லேபில்கள் அச்சிட்டு விவசாயிகளை ஏமாற்றி தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

இப்புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் தர கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் கண்ணன், ஆதிநாதன், நாகராஜன், கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநர் மணிகண்டன், வேளாண்மை அலுவலர்கள் காயத்ரி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஊத்துப்பட்டி சாலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு குடோனில் மூன்று குழுக்களாகத் திடீர் சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அந்தக் குடோன் சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் பேசினோம், “இந்தக் குடோனில் 160 பேரல் தியாமெத்சம் ரசாயன திரவம் மற்றும் புகையிலை குவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகப்படும்படியான சில பூச்சிக்கொல்லி மருந்துகளையும், எண்ணெய் மாதிரியான திரவங்களையும் கைப்பற்றியுள்ளோம். இதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்து இயற்கை உரமா அல்லது ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தா என்பதை உறுதி செய்து, அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இந்தக் குடோன் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் செயல்பாட்டில் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே முதல் கட்டமாக குடோனை மூடி சீல் வைத்துள்ளோம்” என்றனர்.

இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வேளாண் அதிகாரிகள் சிலரின் துணையின்றி இதுபோன்ற உரம் தயாரிப்பும், விநியோகமும், விற்பனையும் சாத்தியமில்லை எனவும், இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்து வரும் வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததன் விளைவுதான் இது, எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.



















