அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - வேளாண்மை துறை அமைச்சர் ...
`உங்களால் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லையே.!' - அண்ணாமலைக்கு எதிராக காட்டமான தமிழிசை | பேட்டி
முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்... இனி கேள்விகளும் அதற்கு தமிழிசை சவுந்தரராஜனின் பதில்களும்..!
``தேர்தலில் பா.ஜ.க-வின் தோல்விக்கு அண்ணாமலையை ஓரம்கட்டியது தான் காரணம் என சொல்கிறார்கள்? அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது தான் பா.ஜ.க கூட்டணி எடுபடாமல் போனது என பலரும் சொல்கிறார்களே?"
“இதற்கு பல தலைவர்கள் பதில் சொல்லிவிட்டார்கள்.
நீங்கள் சொன்ன அந்த வெளியேறியவருக்கு, பெயர் வாங்க வைத்தது எங்கள் கட்சி. அதனால் அவர் எங்களுக்கு வெளியேறியவர் தான். தனி ஹெலிகாப்டர் கொடுத்து 80 தொகுதிகளுக்கு மேல் போக வைத்து பிரசாரம் செய்தது அவருக்கு எடுபடவில்லையா.
அவரே போட்டி போடுவதற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் புறந்தள்ளுகின்றோம் என்ற ஒரு கதையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனை எங்களுடைய மாநிலத் தலைவர் மற்றும் மகளிர் அணி தலைவர் வானதி அவர்கள் சொல்லிவிட்டார்கள். எங்களுடைய கட்சியில் 10 ஆண்டுகள் ஆன பிறகுதான் ஒருவர் மாநிலத் தலைவராக முடியும் என்ற வழிமுறைகள் உள்ளது. இன்றைக்கு சொல்கிறார்கள் புறந்தள்ளுகிறோம் என்று.
ஆனால் ஒரு இளைஞர் வந்திருக்கிறார் என்று எங்களுடைய கட்சியின் கட்டமைப்பை புறந்தள்ளிவிட்டு அவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்து இருந்தோம். மூன்று ஆண்டுகள் முழு சுதந்திரம் கொடுத்து, கூட்டணியை முடிவு செய்கின்ற சுதந்திரம் கொடுத்திருந்தோம்.
ஏன் உங்களால் சாதிக்க முடியவில்லை...
இவ்வளவையும் நாங்கள் கொடுத்த பின்பு ஏன் உங்களால் சாதிக்க முடியவில்லை. கட்சி உங்களுக்கு முழு கட்டமைப்பை கொடுத்தது. அதன் மூலம் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று தான் என்னால் சொல்ல முடியும்.
இந்த இயக்கம் ஒரு ஆலமரம் போன்ற இயக்கம். அந்த ஆலமரத்திலிருந்து சில இலைகள் விழுவதினால் இந்த இயக்கம் நிச்சயம் பட்டு போகாது. இந்த இயக்கம் துளிர்த்து துளிர்த்து தான் வரும். நான் இந்த இயக்கத்தில் 28 ஆண்டுகளாக இருக்கிறேன்.
ரமேஷ் அவர்கள் கொலை செய்யப்பட்டபோது, ரத்த வெள்ளத்தில் அவரை நான் பார்த்தேன். அவர் பா.ஜ.க-வில் பணியாற்றினார் என்பதற்காக அவரை நான் சந்தித்தேன். பாடி சுரேஷ் அவருடைய இரண்டு குழந்தைகளை பார்க்க போகிற நேரத்தில் வெட்டிக் கொன்றார்கள். இப்படிப்பட்ட சவால்களை கடந்து வந்த இயக்கம் இது.

பா.ஜ.க-வின் வாக்கு சதவீதத்தை மட்டுமே வைத்து பா.ஜ.க-வின் வளர்ச்சியையோ, பலத்தையோ தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் எங்களால் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடிகிறது. திரிபுராவில் எங்களால் வெற்றி பெற முடிகிறது. தமிழகத்தில் திராவிட கழகங்கள் பலமாக இருந்ததனால் எங்களால் வெற்றிப் பெற முடியவில்லை என்பதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.
2014 ஆம் ஆண்டில் திமுக, அதிமுக அல்லாமல் நாங்கள் ஒரு கூட்டணி அமைத்து 18.5% வாக்குகளை பெற்றிருந்தோம்.
அப்போது அண்ணன் பொன்னார் அவர்கள் தலைவர், நான் தேசிய செயலாளர். 18.5% வாக்குகளைப் பெற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாண்டிச்சேரியோடு சேர்த்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தோம்.
இதேபோன்றுதான் உங்களிடமும் கட்சி முழு வாய்ப்பையும் கொடுத்தது. 11%, 18% என சொல்கிறீர்களே... ஆனால் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லையே. மரியாதைக்குரிய அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றெடுத்த பலமான கோயம்புத்தூரை உங்களிடம் ஒப்படைத்தார். அதற்குப் போட்டியிடுகின்ற வாய்ப்பு பல பேருக்கு இருந்தாலும் உங்களிடம் கொடுத்தார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை.
என்னை சொல்கிறார்கள் ஆறாவது, ஏழாவது முறையாக தோற்றவர் என்று. ஆனால் 29 ஆண்டுகளாக இந்த கட்சி வளர வளர என்னுடைய இளமை, ஆற்றல் என எல்லாவற்றையும் பின்னி பிணைந்து இந்த கட்சிக்காக அனைத்தையும் கொடுத்தவர்கள் நாங்கள்.
வந்த உடனேயே அரவக்குறிச்சியில் போட்டியிடும் வாய்ப்பு!
ஆனால் கட்சியில் வந்த உடனேயே அரவக்குறிச்சியில் போட்டியிடும் வாய்ப்பையும், 2024 ஆம் ஆண்டில் மிக பலமான கோயம்புத்தூரில் போட்டி போடுகின்ற வாய்ப்பையும் கட்சி உங்களுக்கு கொடுத்தது. இப்படி எல்லா பலத்தையும் கட்சி உங்களுக்கு கொடுத்தது. ஆனால் நீங்கள் வெற்றியை கையில் தரவில்லை. எல்லா பலம், ஆதரவு, தனித்தன்மை, கேட்கின்ற சீட்டுகள் என எல்லாவற்றையும் கட்சி உங்களுக்கு கொடுத்தது. நீங்கள் தலைவராக இருக்கும் பொழுது தான் பிரதமர் அவர்கள் 14 முறை தமிழகத்திற்கு வந்திருந்தார்.

அப்போதும் கூட அதை உங்களால் வாக்குகளாக மாற்ற முடியவில்லை. நாங்கள் தலைவராக இருக்கும் பொழுது ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்களோடு போராட வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு இருந்தது.
2006 ஆம் ஆண்டில் பாஜகவிற்கு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட படத்தை நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தேன். அதே 2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது. 2004-ல் இருந்து 2014 வரை காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான், பாஜகவிற்காக ரோட்டில் இறங்கி போராடினேன்.
மரியாதைக்குரியவர்களான இல.கணேசன், கே. லட்சுமணன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தம்பி எல்.முருகன், நான் என எல்லோருமே சிறுக சிறுக சிறுக சேர்த்து வைத்த மாளிகையின் கோபுரத்தை உங்கள் கையில் கொடுத்தார்கள்.
அந்த கோபுரத்தை அரண்மனையாக மாற்றுவீர்கள் என்பதற்காக உங்களிடம் கொடுத்தார்கள். இந்த மாளிகை நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த செங்கல்கள் தான். படித்தவர் பாஜக-விற்கு தலைவராகி விட்டார் என இப்போது பேசுகிறார்கள். ஆனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் எம்.எஸ் படித்தவர் பாஜகவிற்கு தலைவராக இருந்திருக்கிறார்.
மருத்துவர் சந்திரபோஸ் அப்போதே பாஜக-விற்கு தலைவராக இருந்துள்ளார். நான் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் டிஜிஓ படித்துள்ளேன். என்னவோ படித்தவர் இப்பதான் தலைவர் ஆனது போல் பேசுகிறார்கள்.
ஏன் கட்சியை வளர்க்க முடியவில்லை?
அனைத்து அதிகாரம் எல்லாவற்றையும் கொடுத்து, மத்தியில் இருந்து எல்லா ஆதரவையும் கொடுத்து, மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு, எல்லா மாநிலங்களிலும் வெற்றி பெறுகின்ற சூழ்நிலையில் கட்சியை முழுவதுமாக மூன்று வருடங்கள் உங்களிடம் கொடுத்த பின்பும், ஏன் கட்சியை வளர்க்க முடியவில்லை? ஏன் கட்சியை பலமாக மாற்ற முடியவில்லை? ஏன் உங்களால் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வர முடியவில்லை?
மூன்று வருடங்கள் கட்சி முழுவதுமாக அவர்களுக்கு எல்லா ஆதரவும் கொடுத்தது. ஆனால் அவர்தான் கட்சிக்கு முட்டுக் கொடுத்தேன் என்று பேசுகிறார். கட்சி உங்களுக்கு விட்டு கொடுத்தது. உங்களுக்கு விட்டுக் கொடுத்ததை நீங்கள் முட்டுக் கொடுத்தேன் என சொல்கிறீர்கள்.”
``நீங்கள் பேசும்போது சொன்னீர்கள், நாங்கள் சிறுக சிறுக கட்டிய மாளிகையை நேரடியாக அண்ணாமலைக்கு கொடுத்து விட்டார்கள் என்று. அண்ணாமலை அவர்கள் நேரடியாக பதவிக்கு வரும் பொழுது உங்களுக்கு அந்த ஆதங்கம் இருந்ததா?"
``அவர் பதவியேற்கும் பொழுது நான் அங்கே இல்லை. அவர் பதவி ஏற்கும் பொழுது, நான் ஒரு கவர்னராக வேறொரு மாநிலத்தில் இருக்கிறேன். அவர் பதவி ஏற்கும் பொழுது ஒரு புகைப்படத்தில் மரியாதைக்குரியவர்களான சிபிஆர், பொன்னார், வானதி சீனிவாசன், எல்.முருகன் என எல்லோரும் அவரின் கையைப் பிடித்து அவரை அமர வைக்கிறார்கள்.

என்னிடம் கூட அப்படி ஒரு போட்டோ கிடையாது. நான் தலைவராகும்போது கூட அப்படி ஒரு போட்டோ எடுத்ததில்லை. நம்முடைய கட்சி ஒரு இளைஞனை தலைவன் ஆக்குகிறது என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். எங்களுடைய கட்சியில் முன்னாள் தலைவர்களுக்கு என்று ஒரு அடையாளம் எப்போதும் கொடுக்கப்படும். மரியாதைக்குரிய பாரத பிரதமர், மரியாதைக்குரிய அமித் ஷா அவர்களுக்கு அடுத்தபடியாக சீட் அண்ணன் பொன்னார் அவர்களுக்கு தான் கொடுக்கப்படும்.
அண்ணாமலைக்கு மேடையில் இடம்
ஏனென்றால் அவர் தான் வயதானவர், மூத்தவர். அவர்தான் ஆரம்பத்தில் இந்த கட்சியை வளர்த்தவர். ஆனால் எல்லா நேரமும் அந்த இடம் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பொன்னாரோ, நானோ யாருமே அந்த இடத்தை ஏன் அண்ணாமலைக்கு கொடுத்தீர்கள் என கேட்கவில்லை.
ஏனென்றால் ஒரு இளைஞர் வந்திருக்கிறார். அவர் கட்சிக்காக உழைத்திருக்கிறார். அதற்காக அவர்களுக்கான சீட்டை கொடுத்ததால் நாங்கள் ஒத்துக் கொண்டோம். திருச்சியில் வானதி சீனிவாசன் கூட ஒரு பேட்டியில் சொன்னார், எல்லா நேரமும் அண்ணாமலைக்கு மேடையில் இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒருநாளும் எந்த ஒரு சீனியரும் அவர்களுடைய அதிருப்தியை தெரிவித்ததே இல்லை. எல்லா நேரத்திலும், எல்லா விதத்திலும் அவர் கூடவே தான் இருந்தார்கள்.
``இவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள், இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள் என சொல்கிறீர்கள். ஆனால் எப்போது முரண்பாடு ஏற்பட்டது?"
``அதை நீங்கள் அவர் கிட்ட தான் கேட்க வேண்டும். யார் வெளியில் சென்றார்களோ அவங்க கிட்ட தான் நீங்க இதை கேட்க வேண்டும்."
``அ.தி.மு.க-வை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அண்ணாமலையை பதவியில் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என சொல்லப்படுகிறதே?"
``அது தவறு. நீங்கள் அதிமுக வேண்டாம் என்று சொல்லும் பொழுது கட்சி ஒப்புக்கொண்டது. அப்போது நீங்கள் அதில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். 2024-ல் அதிமுக வேண்டாம் என நீங்கள் சொன்ன போது, கட்சி ஒப்புக் கொண்டது. "

``தவறான முடிவு எடுத்ததுனால்தான் அவரை பதவி நீக்கினார்களா?"
``அவரை பதவி நீக்கம் செய்தார்கள் என்பதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புறக்கணித்தார்கள் என்பதெல்லாம் உண்மையில்லை. "
``அப்படி சொல்ல வேண்டும் என்ற தேவை என்ன இருக்கிறது?"
``அதனை நீங்கள் அவர் கிட்ட தான் கேட்க வேண்டும். அவருக்கு தனிப்பட்ட ஆசை என்ன இருந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதே நேரத்தில் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் மிகவும் கேவலமாக சித்தரித்தார்கள். அந்தப் படங்கள் எல்லாம் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கும். எதிர்க்கட்சி கூட அப்படி சித்தரிக்க மாட்டார்கள். கட்சிக்காக உழைத்தவர்களை சித்தரிக்கும் பொழுது அது தடுக்கப்படவில்லை. "
``இதெல்லாம் புகாராக கட்சி தேசிய தலைமை இடத்தில் சொன்னீர்களா? இவ்வளவு காலமாக இத்தனை வருத்தத்தையும் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தீர்களா?"
``கட்சிக்குள்ள நாங்கள் என்ன செய்வோம் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எங்குமே புகாராக சொன்னதே கிடையாது. ஒருத்தர் போன பிறகு அத்தனை விஷயத்தையும் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது."













