`இனி என் தலைவர் நிதின் நபின்' எனக் கூறும் பிரதமர் மோடி; 45வது வயதில் பாஜக தலைவர்...
"எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்!" - அமைச்சர் ரகுபதி விளக்கம்
'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்...

"தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபுப்படி, கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். இதை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
ஆனால், ஆளுநர் ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறினார்.
அவர் சட்டமன்றத்தில் ஏதேனும் பிரச்னையைக் கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால், அது முடியவில்லை. அதனால், இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்தார்.
ஆளுநர் உரையைப் படிக்கக் கூறி, எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ, அவ்வளவு தாழ்ந்து சபாநாயகர் கேட்டுப்பார்த்தார். ஆனால், ஆளுநர் வாசிக்காமல் வெளியேறிவிட்டார்.
மீடியா, பிற கட்சிகள் என அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம் - எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது? அது சுத்தமான புளுகு.
ஆளுநரை ஆளுநர் உரை பேசத் தான் அழைத்தோமே தவிர... மைக்கை ஆஃப் செய்ய அழைக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளைக் கூட ஆளுநர் கூறுகிறார்.

தமிழ்நாடு அரசின் முதலீட்டுத் தகவல் தவறு என்று கூறுகிறார். மத்திய அரசு தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 சதவிகிதமாக உள்ளது என்று கூறியிருக்கிறது. முதலீடு, வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 11.9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியும்?
ஆளுநர் வெளியேறிய உடனேயே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவருகிறது என்றால், அது முன்னரே தயாரிக்கப்பட்டது தான். அதில் எங்களுக்கு கவலை இல்லை.
தமிழ்நாட்டில் பெண்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் உற்பத்தி தமிழ்நாட்டில் இல்லை.
இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகத்தின் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. பெண்கள் அதிகம் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு.
பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் பன்மடங்கு கல்வி வளர்ச்சி உள்ளது
தற்கொலைக்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அரசு காரணமாக முடியாது. ஆனால், அதை தடுக்க அரசு உதவி செய்து வருகிறது" என விளக்கம் அளித்தார்.















