59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்; `அந்த' 2 எம்.எல்.ஏ-க்க...
"எதிர்பாராத விதங்களில் வாழ்க்கையில் பயணிக்கும் கதை!" - நடிகராகும் ராஜ்குமார் ஹிரானியின் மகன்
பல கல்ட் கிளாசிக் பாலிவுட் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி தற்போது “ப்ரீதம் அண்ட் பெட்ரோ” என்ற இணையத்தொடரை தயாரித்துள்ளார்.
இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூலை மூன்றாம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

அவினாஷ் அருண் இயக்கியுள்ள இந்தத் தொடரில் ராஜ்குமார் ஹிரானியின் மகனான வீர் ஹிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகராக வீர் ஹிரானி அறிமுகமாகும் முதல் தொடர் இதுவாகும். மேலும், அர்ஷத் வர்சி, விக்ராந்த் மாஸ்ஸி, மோனா சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்தொடர் குறித்துப் பேசிய ராஜ்குமார் ஹிரானி, “மிகவும் வித்தியாசமான மனிதர்கள் ஒன்றிணைந்து, எதிர்பாராத விதங்களில் வாழ்க்கையில் பயணிக்கும் கதைகள் எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில், ‘ப்ரீதம் அண்ட் பெட்ரோ’ தொடர் நகைச்சுவை, அன்பு மற்றும் விளையாட்டுத்தனம் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டுள்ளது. இந்தத் தொடர், கதாபாத்திரங்களுடன் அதிக நேரம் செலவிடும் வகையிலும் அவர்களின் பயணத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. மேலும், இந்தத் தொடரை ஒளிபரப்பும் ஜியோ ஹாட்ஸ்டாருடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக, ராஜ்குமார் ஹிரானியின் படைப்புகளில் காணப்படும் மனித உணர்வுகள் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் இந்தத் தொடரிலும் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜ்குமார் ஹிரானியின் முதல் ஓடிடி தொடர் மற்றும் வீர் ஹிரானியின் அறிமுகத் தொடர் என்பதால் இத்தொடரின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


















