IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்...
`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறார்' - உதயநிதி
தஞ்சாவூரில் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமணம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் இல்லத் திருமணம் என இரண்டு நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், எம்.பி-க்கள் ச.முரசொலி, சு.கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டனர்.

இதில் உதயநிதி பேசியதாவது, ``இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் "மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை" என மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இப்படி பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், இந்தியாவிலேயே வளருகின்ற மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதல் மாநிலமாக தற்போது தமிழ்நாடு விளங்கி வருகின்றது. இதையெல்லாம் பொறுக்க முடியாத ஒன்றிய பாஜக அரசு, இன்றைக்குப் பல்வேறு வகையில் தமிழ்நாடு அரசுக்குத் பல தொல்லைகளைக் கொடுத்து வருகிறது.
நிதி உரிமையைப் பறிப்பது, மொழி உரிமையைப் பறிப்பது, மீண்டும் புதிய கல்வியைக் கொண்டு வந்து இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் தமிழ்நாடு மாணவர்கள் மீது திணிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. பழநிமாணிக்கம் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். ஆனால் இப்போதுள்ள ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்கன்னு பெருமையா சொல்லுவாங்க, ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடுங்கிற வார்த்தையே கடந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இப்படி ஒன்றிய அரசு தமிழ்நாட்டைப் பல வகையில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்து வருகின்றது. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கின்றார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைப் படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே, மிகச் சிறந்த பட்ஜெட் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. முரட்டு பக்தர்களைக் கேள்விப்பட்டிருப்பீங்க, முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கீங்களா, பாஜக-வுடைய ஒரு முரட்டு அடிமையாக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து இந்த பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறார்.
இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று, தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமரப் போவது உறுதி. அதற்கான தொடக்கமாக இந்த தஞ்சாவூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. திமுக ஆட்சி அமைக்க வேண்டுமானால், ஸ்டாலின் முதல்வராக நாற்காலியில் அமர வேண்டுமானால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இங்கே வந்திருக்கக்கூடிய திமுக நிர்வாகிகள், கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.















