"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணத்துக்கு `தர்பூசணி காரணம் அல்ல' - இறந்தவர்கள் உடலில் விஷம்?
மும்பையில் கடந்த வாரம் தர்பூசணி சாப்பிட்டதால் அப்துல்லா என்பவரும், அவரது மனைவி மற்றும் மகள்கள் என்ற நான்கு பேர் இறந்தனர். அப்துல்லா தனது உறவினர்கள் 5 பேரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். விருந்தினர்கள் இரவில் தங்களது வீட்டிற்கு சென்ற பிறகு அப்துல்லாவும், அவரது குடும்பத்தினரும் தர்பூசணி சாப்பிட்டனர். அவர்கள் தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக நான்கு பேரும் இறந்து போனார்கள்.
தர்பூசணி சாப்பிட்டதால்தான் நான்கு பேரும் இறந்தனர் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. இதனால் தர்பூசணியில் விலை அடியோடு சரிந்தது. பின்னர், இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனை மற்றும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தடயவியல் சோதனை ஆகியவற்றில் இறந்தவர்களின் மூளை, இருதயம், சிறுகுடல் போன்றவை பச்சையாக மாறி இருந்தது தெரிய வந்தது. அதோடு வழக்கமான உணவு விஷமாகி போய் அவர்கள் இறந்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த மர்மத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, சக்திவாய்ந்த வலி நிவாரணியாக கருதப்படும் மார்ஃபின், அப்துல்லா டொகாடியாவின் உடலில் கண்டறியப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் அப்துல்லா இதற்கு முன்பு மார்ஃபின் மருந்து எடுத்துக்கொண்டாரா என்பது குறித்தும், அல்லது எதிர்பாராத விதமாக அவர்கள் மார்ஃபின் மாத்திரையை எடுத்துக்கொண்டார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தர்பூசணி காரணம் அல்ல
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் தர்பூசணி சாப்பிட்டதற்கும் இந்த மரணத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதோடு தர்பூசணியில் எதாவது கலந்து இருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் இவ்விவகாரத்தில் தங்களது இறுதி முடிவை தெரிவிக்கவில்லை. இறந்தவர்கள் உடல் உறுப்புகளை ரசாயான ஆய்வுக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



















