செய்திகள் :

கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ்!

post image

எப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்டிவாக இருக்கிறது சத்யமூர்த்தி பவன். திமுகவிடமிருந்து கடந்த முறையை விட அதிக சீட்டுகளை வாங்கிவிட வேண்டுமென ஒரு முடிவோடு இறங்கி ஆடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். ராகுலும் டெல்லியிலிருந்து அமைதியாக அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை கட்டி ஆண்ட கட்சி, இப்போது கூடுதலாக ஒன்றிரண்டு சீட்டு கேட்டு தகராறு செய்யும் நிலைக்கு வந்து சேர்ந்திருப்பதில்தான் தமிழக அரசியலின் பெரும் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது.

சத்யமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

திமுக - காங்கிரஸ் கூட்டணியே ஒரு ஆச்சர்ய முரண்தான். ஏனெனில், தமிழகத்தில் மாநில சுயாட்சி பேசி காங்கிரஸை வீழ்த்த தொடங்கப்பட்ட இயக்கம்தான் திமுக. தங்களின் லட்சியத்தை கட்சி தொடங்கிய 18 ஆண்டுகளிலேயே சாதித்தது திமுக. 1967 இல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

அகில இந்திய அளவிலேயே பெரும் தலைவராக பார்க்கப்பட்ட காமராஜரின் கதர் கூட்டத்தை அண்ணாவின் படை தோற்கடித்தது. சுதந்திரத்துக்கு பிறகு தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட காங்கிரஸால் அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சியையே பிடிக்க முடியவில்லை. அதைவிட பெரிய சோகம், தங்களை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பிய திராவிட கட்சிகளுடனேயே மாறி மாறி கூட்டணி அமைக்கும் நிலைக்கு காங்கிரஸ் சுருங்கியது.

1967 க்குப் பிறகு காங்கிரஸூக்குள் பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்திக்கும் காமராஜர் போன்ற கட்சியின் சீனியர்களுக்கு இடையேயும் முட்டிக் கொண்டது. மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல் போன்ற இந்திராவின் அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸின் சீனியர்கள் விரும்பவில்லை. அந்த சமயத்தில் வந்த குடியரசுத் தலைவர் தேர்தல் இரு தரப்புக்கும் இடையேயான மோதலை வீதிக்கு கொண்டு வந்தது. காமராஜர் தரப்பு நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்த இந்திரா வி.வி.கிரியை வேட்பாளராக்கினார். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கான அச்சாரமும் இங்கேதான் போடப்பட்டது.

காமராஜர்
காமராஜர்

தன்னுடைய வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்குமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் இந்திரா கேட்கிறார். மன்னர் மானிய ஒழிப்பு போன்ற புரட்சிகர திட்டங்களை காரணம் காட்டி இந்திரா தரப்பை ஆதரித்தார் கருணாநிதி. வி.வி.கிரி குடியரசுத் தலைவர் ஆனார். ஆத்திரமடைந்த காங்கிரஸின் சீனியர்கள் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி இந்திராவை காங்கிரஸிலிருந்து நீக்கினர். காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாக உடைந்தது.

நாடாளுமன்றத்தில் இந்திராவின் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு. மீண்டும் கருணாநிதி கைகொடுத்தார். திமுக இந்திரா காங்கிரஸை ஆதரித்தது. இந்திராவின் ஆட்சி தப்பித்தது. ஆனால், சில வாரங்களிலேயே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை எடுக்கிறார்.

தமிழகத்தில் கருணாநிதியும் தேர்தலை எதிர்கொள்ளும் முடிவுக்கு வந்தார். 1971 இல் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரு சேர நடக்கிறது. திமுக கூட்டணியில் இணைகிறது இந்திரா காங்கிரஸ். ஸ்தாபன காங்கிரஸ் தனி கூட்டணி.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில் திமுக கூட்டணியில் இந்திரா காங்கிரஸுக்கு 9 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு எம்.எல்.ஏ சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இக்கட்டான சூழலில் தனக்கு உதவியதால் இந்திராவும் அதற்கு ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் திமுக - இ.காங் கூட்டணிக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. திமுக மட்டும் 184 இடங்களில் வென்றது. இ.காங் போட்டியிட்ட 9 எம்.பி தொகுதிகளிலும் வென்றது. ஸ்தாபன காங்கிரஸூக்கு பெருத்த அடி.

இந்திரா காந்தி, கருணாநிதி
இந்திரா காந்தி, கருணாநிதி

1971 க்குப் பிறகு தேசிய அரசியலும் தமிழக அரசியலும் புயலை கிளப்பும் மாற்றங்கள் அரங்கேறின. திமுகவிலிருந்து பிரிந்து வந்து எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்குகிறார். 1975 இல் இந்திராவுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் எமெர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது. இங்கிருந்து திமுக - இ.காங் கூட்டணியின் நிலைப்பாடுகள் மாற தொடங்கின.

கருணாநிதி எமெர்ஜென்சியை ஆதரிக்கவில்லை. திமுகவினர் சிறைபிடிக்கப்பட்டனர். இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் எமெர்ஜென்சிக்கு முழு ஆதரவு கொடுத்தார். விளைவு, கருணாநிதியின் ஆட்சி மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷனை அமைத்தார் இந்திரா. திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்.

1977 இல் எமெர்ஜென்சியை விடுவித்து தேர்தலை அறிவிக்கிறார் இந்திரா. கருணாநிதி டெல்லி சென்று எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா கட்சியின் கூட்டணிக்கு காரணமாக இருந்தார். திமுகவும் ஜனதா கட்சியும் கரம் கோர்த்தன. அதிமுகவும் இந்திரா காங்கிரஸூம் கரம் கோர்த்தன. தேசியளவில் முடிவுகள் வேறாக வந்தன. ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர். தமிழகம் தலைகீழாக வாக்களித்தது. எம்.ஜி.ஆர், இந்திரா கூட்டணி பெரு வெற்றிப் பெற்றது.

MGR
எம்.ஜி.ஆர்

1977 இல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் அதிமுக - இ.காங் கூட்டணி தொடரவில்லை. காரணம், ஜனதா கட்சியுடன் எம்.ஜி.ஆர் நெருக்கம் காட்ட தொடங்கினார். அதிமுகவிடம்தான் எம்.பிக்கள் இருந்தனர் என்பதால் மொரார்ஜி தேசாயுக்கும் எம்.ஜி.ஆரின் ஆதரவு தேவைப்பட்டது. ஜனதாவிடமிருந்து மெல்ல திமுக விலகியது.

1980 இல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல். இடையில் தமிழகம் வருகையில் இந்திராவின் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அதனால் காங்கிரஸூம் திமுகவும் மீண்டும் இணையவே மாட்டார்கள் என்ற அனுமானங்கள் உண்டாகியது. ஆனால், அரசியல் இருதரப்பையும் மீண்டும் இணைத்தது.

ஜனதாவை வீழ்த்த மீண்டும் பிரதமராக கருணாநிதியுடன் கரம் கோர்க்க எண்ணினார் இந்திரா. எமெர்ஜென்சிக்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றது திமுக. மெரினாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மன்னிப்பும் கேட்டார் இந்திரா. 'நேருவின் மகளே வருக...நிலையான ஆட்சி தருக!' என கருணாநிதியும் உருகினார்.

திமுகவுக்கு எதிர்நிலை எடுப்பதுதான் எம்.ஜி.ஆரின் அரசியல். அதிமுக ஜனதாவோடு கைகோர்த்தது. 1980 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியை கொடுத்தன. இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அதிமுக - ஜனதா கூட்டணி வென்றது. மற்ற எல்லா இடங்களும் திமுக கூட்டணிவசமானது. இந்திரா மீண்டும் பிரதமரானார். எம்.ஜி.ஆரின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தலும் வந்தது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1971 இல் சட்டமன்றத் தேர்தலில் சீட்டே வேண்டாமென இந்திரா விட்டுக்கொடுத்தார். ஆனால், இந்த முறை அப்படியல்ல. இப்போது இந்திராவுக்கு சவலாளிக்க காமரஜாரும் இல்லை, ஸ்தாபன காங்கிரஸூம் இல்லை. அதனால் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டுப் பெற்றார் இந்திரா. திமுகவும் காங்கிரஸூம் சரிசமமாக தலா 109 தொகுதிகளில் போட்டியிட்டனர். அதிக தொகுதிகளில் வெல்வோருக்கு முதல்வர் பதவி என திமுகவிடம் காங்கிரஸ் தலைவர்கள் முறுக்கினர். ஆனால், அதற்கெல்லாம் வேலையே இல்லாமல் போனது. 'நான் என்ன தவறு செய்தேன்? என்னுடைய ஆட்சியை அநியாயமாக டிஸ்மிஸ் செய்துவிட்டார்களே?' என்கிற எம்.ஜி.ஆரின் பிரசாரம் எடுபட்டது. அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது

திமுக 37 தொகுதிகளிலும் அதிமுக 31 தொகுதிகளிலும் மட்டுமே வென்றிருந்தன. ஆட்சியமைத்த எம்.ஜி.ஆர் வழக்கம்போல மத்திய அரசுக்கு இணக்கமான போக்கை கடைபிடித்தார். விளைவு, காங்கிரஸூம் அதிமுகவும் மீண்டும் நெருங்கின. இந்திராவின் இறப்புக்குப் பிறகு ராஜிவ் காந்தியும் அதிமுகவோடு கூட்டணி வைத்தார். 1984 தேர்தலில் 400+ இடங்களை வென்று ராஜிவ் பிரதமராக, தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வர். 73 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 61 தொகுதிகளில் வென்றது.

1987 டிசம்பர் 24 இல் எம்.ஜி.ஆர் இறக்கிறார். அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஜானகி அணியை ஆதரிக்க வேண்டுமென நடிகர் சிவாஜி கணேசன் விரும்புகிறார். ராஜிவ் சிவாஜியின் விருப்பத்தை ஆமோதிக்கவில்லை. ஒன்றுபட்ட அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என்றார். ஜானகியின் ஆட்சி கலைந்து மீண்டும் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை கூட்டணி எதுவுமின்றி தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்தது. திமுக நீண்ட காலமாக ஆட்சியில் இல்லை, அதிமுக பலமிழந்து கிடக்கிறது.

Rajiv Gandhi | ராஜீவ் காந்தி
Rajiv Gandhi | ராஜீவ் காந்தி

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இதுதான் சரியான நேரமென ராஜிவ் நினைத்தார். மூப்பனார் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டு அவருக்காக 14 முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்தார் ராஜிவ். ஏமாற்றமே மிஞ்சியது. திமுக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 19.8% வாக்குகளுடன் 26 இடங்களில் மட்டுமே வென்றது.

திமுக ஆட்சி கலைக்கப்பட 1991 இல் மீண்டும் தேர்தல். இந்த முறை அதிமுக ஜெ.வின் கட்டுப்பாட்டில் இருந்தது. ராஜிவ் காந்தி அதிமுகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். தேர்தல் பிரசாரத்தின் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி உயிரிழந்தார். ராஜிவ்வின் இறப்புக்கு காரணமே திமுகதான், அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என காங்கிரஸார் கொந்தளித்தனர். ராஜிவ் மீதான அனுதாபம் காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு பெரு வெற்றியைக் கொடுத்தது. 65 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 இடங்களில் வென்றது.

ஆனால், இந்தக் கூட்டணிதான் அடுத்த தேர்தலுக்குள் காங்கிரஸின் பிளவுக்கும் காரணமாக இருந்தது. 'ராஜிவ்வின் ரத்தத்தால் அதிமுக ஜெயிக்கவில்லை' என்ற ஜெயலலிதாவின் ஸ்டேட்மெண்ட் காங்கிரஸை கொதிக்க வைத்தது. மேலும், ஜெ.வின் அந்த ஐந்தாண்டு ஆட்சி கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கொண்ட ஆட்சி. அந்த ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை என அனுமானித்தார் மூப்பனார். அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென்றார். தேசிய தலைமை ஒத்துக்கொள்ளவில்லை. மூப்பனார் விரக்தியடைந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது.

திமுக - தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு கொடுத்தார். அதிமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி. திமுக ஆட்சியைப் பிடித்தது. 64 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒன்றில் கூட வெல்லவில்லை. ஆனால், அரசியல் எவ்வளவு வினோதமானது என்பது அடுத்த 5 ஆண்டுகளில் தெரிந்தது.

மூப்பனார்
மூப்பனார், ப.சிதம்பரம்

திமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க, மூப்பனார் வெறுத்துப் போனார். எந்த ஜெயலலிதா கூட்டணியை எதிர்த்து தமாகாவை தொடங்கினாரோ இப்போது அதே கூட்டணியில் கொண்டு தமாகாவை சேர்த்தார். அதிமுக, காங்கிரஸ், தமாகா கூட்டணி 2001 தேர்தலை வென்றது. தமாகா 32 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகள் தொகுதிகளையும் காங்கிரஸ் 14 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளையும் வென்றது.

மூப்பனாரின் இறப்புக்குப் பிறகு காங்கிரஸூம் தமாகாவும் இணைந்தது. திமுகவும் ஐந்தாண்டு அமைச்சரவையில் இருந்துவிட்டு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் பக்கமாக வந்திருந்தது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 48 சீட்டுகள். 34 சீட்டுகளை காங்கிரஸ் வெல்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டுமென இப்போது காங்கிரஸ் கேட்கிறதல்லவா? ஆனால், அப்போது அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. திமுக 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. 'மைனாரிட்டி திமுக' என ஜெயலலிதா வசைபாடினார். பாமக, காங்கிரஸின் ஆதரவால்தான் திமுக ஆட்சியே நடந்தது. அப்போது வாய்ப்பிருந்து அமைச்சரவையில் பங்கு என்கிற விஷயத்தை அழுத்தி கேட்காமல் இருந்தது காங்கிரஸ் தலைமை. காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிரண்டு பேர் அதைப் பற்றி குரல் எழுப்புவதோடு ஓய்ந்து போனது.

ஈழப்பிரச்னை, 2G விவகாரம் என அந்த காலத்தில் திமுக - காங் கூட்டணியின் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. 2G விவகாரம் குறித்த சிபிஐ விசாரணையின் போதே 2011 தேர்தலுக்கான சீட் பங்கீடை முடித்தது காங்கிரஸ். கடந்த தேர்தலை விட 15 தொகுதிகள் அதிகமாக பெற்று 63 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ். அந்த தேர்தல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் தோல்வியை கொடுத்தது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 2G வழக்கில் கனிமொழி, ஆ.ராசா போன்றோர் சிறைக்கு செல்கின்றனர். 'கூடா நட்பு கேடில் முடிந்தது' என காங்கிரஸ் கூட்டணியை முறித்துவிட்டார் கருணாநிதி. அறிவாலயத்தில் வெடி வெடித்து கொண்டாடினர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கிறது. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 5% க்கும் கீழ் வாக்குவங்கி குறைகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கைகோர்த்தது. இந்த முறை காங்கிரஸூக்கு 41 இடங்கள். ஆனால், வென்றதோ 8 இடங்களில் மட்டுமே. காங்கிரஸூக்கு ஒதுக்கிய சீட்டுகளால்தான் தோல்வியை சந்தித்தோம் என உடன்பிறப்புகள் குறைபட்டுக் கொண்டனர். காங்கிரஸின் ஸ்ட்ரைக் ரேட் பரிதாபமாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

மத்தியில் பாஜக அரசு வலுப்பெற வலுப்பெற திமுக - காங்கிரஸ் கூட்டணியும் வலுப்பெற்றது. 2019 தேர்தலுக்கு முன்பாக அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தியை முதல் முதலாக பிரதமர் வேட்பாளராக அறிவித்தது திமுக தலைவர் ஸ்டாலின்தான். இவ்வளவு நெருக்கமான பிணைப்போடு இருந்தாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் ஸ்ட்ரைக் ரேட்டை மனதில் வைத்து சீட் ஒதுக்கீட்டில் கறார் காட்டியது அறிவாலயம். தேசிய கட்சினு கூட பார்க்காம நம்பர் பேசுறாங்க என கண்ணை கசக்கிக் கொண்டே வந்து சிரித்தபடி 25 தொகுதிகளுக்கான தொகுதி ஒப்பந்தத்தை அறிவித்தார் கே.எஸ்.அழகிரி. 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.

அழகிரி
கே.எஸ்.அழகிரி

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு எக்ஸ்ட்ரா சீட்டும் ரிஸ்க்கை இன்னும் அதிகப்படுத்தும். குறிப்பாக, காங்கிரஸூக்கு அதிகமாக சீட்டுகளை ஒதுக்கினால் சேதாரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அறிவாலயத்தின் எண்ணம். கூட்டணி இல்லாமல் திமுக வென்றதே இல்லை, அப்படியிருக்க தொடர்ந்து 5 வது முறையாக சட்டமன்றத் தேர்தலுக்கு நம்பகத்தன்மையோடு உடன் நிற்கும் எங்களுக்கு அதிக தொகுதிகளையும் அமைச்சர் பதவிகளையும் ஒதுக்கினால் என்ன? என்பது காங்கிரஸின் எண்ணம்.

திமுகவுக்கு காங்கிரஸ் பலம். காங்கிரஸூக்கு திமுக பலம். கூட்டணி உடைந்தால் இருதரப்புக்குமே பின்னடைவு உண்டு என்பதே யதார்த்தம். இது வேறு யாரையும் விட சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் நன்றாகவே தெரியும். அதனால் இருதரப்பின் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் ஒரு புள்ளியின் ஒத்துப்போய் கைகுலுக்கிவிடுவார்கள் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக இருக்கிறது.

ஸ்டாலின், ராகுல் காந்தி

'சீட்டுக்காக மூர்க்கமாக சண்டைப்போடும் காங்கிரஸ் தலைவர்கள், கட்சியை வளர்க்க என்ன செய்திருக்கிறார்கள்? அப்படி எதாவது செய்திருந்தால் உரிய மரியாதைக்காக இப்படி வீதியில் இறங்கி கூக்குரல் போட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்குமா? இன்றைக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் உண்மையான பற்றோடு ஒரு கதர் சட்டைக்காரனாவது இருக்கத்தான் செய்கிறான்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்கிற பெருமிதத்தில் கடைசி மூச்சு வரை கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கும் அவனின் எதிர்பார்ப்பெல்லாம் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டுமென்பதுதான். ஆளுக்கொரு கோஷ்டி பொழுதுக்கொரு கருத்தென சுற்றும் இந்த பகுமான தலைவர்களுக்கெல்லாம் எங்களுடைய குரல் கேட்குமா?' என்கின்றனர் உண்மையான கதர் சட்டையினர்.!

(தொடரும்)

திண்டிவனம்: பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் பெயர் நீக்கம் - அதிரடி அரசாணையின் பின்னணி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இடிக்கப்பட்டது. அதையடுத்து தீ... மேலும் பார்க்க

ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!

நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான். ‘Four S... மேலும் பார்க்க

"மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!"- ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப்.2) முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny' புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப... மேலும் பார்க்க

ஸ்டாலின் வருகையால், தள்ளிப்போன விஜய்யின் வேலூர் விசிட்! - வேகம் காட்டும் தவெக நிர்வாகிகள்

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்த சில சிக்கல்கள் இருந்ததால் வேறு தேதியையும் தவெக-வ... மேலும் பார்க்க

மக்களவையில் சீன ஆக்கிரமிப்பு விவகாரம்; மாணிக்கம் தாக்கூர், சு.வெ., உள்ளிட்ட எம்.பி-க்கள் சஸ்பெண்ட்!

நாடளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டி, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன்,... மேலும் பார்க்க