கபீா் புரஸ்காா் விருது: விண்ணப்பம் வரவேற்பு
சமுதாய நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது ஒவ்வொரு ஆண்டும், முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவா்.
இந்த விருது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மூன்று பிரிவுகளில், தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் இதில் அடங்கும். 2025-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதுக்கென தகுதியானவா்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே டிச. 15 -அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவா்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதல்வரால் ஜன. 26-இல் குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.