'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!'...
'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?
ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிறகுதான் ஆர்.சி.பியின் 'ஈ சாலா கப் நம்தே' என்கிற நம்பிக்கை நிஜமானது. கோலி ஒரு கேப்டனாக சாதிக்கவில்லை என்றாலும், ஒரு பேட்டராக 38 வயதிலும் ஆர்.சி.பி அணிக்காக மேட்ச் வின்னிங் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்.

இந்த சீசனில் ஆர்.சி.பி அணிக்காக அதிக ரன்களை அடித்திருப்பது கோலிதான். இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதும் கோலிதான். 38 வயதில் இளம் வீரர்கள் கோலோச்சும் டி20 போட்டிகளில் கோலியால் எப்படி சாதிக்க முடிகிறது?
கிரிக்கெட் நாளுக்கு நாள் பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்டத்தின் வேகம் கூடிக் கொண்டே இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை பற்றி சொல்லவே வேண்டாம். ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்கிற வேகத்தில் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விரட்டிக் கொண்டே இருக்கின்றனர். இப்படியொரு காலத்திலும் நம்பிக்கைக்குரிய வீரராக வெற்றியை தேடித்தரக்கூடிய வீரராக இருக்க வேண்டுமெனில், ஒன்று இந்த தலைமுறையை சேர்ந்த நவீன சிந்தனையும் ஆட்ட நுணுக்கமும் அறிந்த வீரராக இருக்க வேண்டும்
இல்லையேல், இப்போதைய நடைமுறைகளுக்கு ஒரு வீரர் தன்னை முழுமையாக தகவமைத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலி இந்த தலைமுறை வீரர் கிடையாது. அவர் 2007 இல் U19 கிரிக்கெட் ஆடியவர். அந்த காலத்தில் விராட்டின் ஆட்டம் நவீனமாகப்பட்டது. அதே பாணியில் விராட் கோலி தொடர்ந்திருந்தால் அவரால் இத்தனை காலம் கிரிக்கெட் ஆடியிருக்கவே முடியாது. இதை விராட் கோலியே ஒத்துக்கொள்ளவும் செய்கிறார்.
'அதிசிறப்பான திறன் வாய்ந்த இளம் வீரர்கள் கிரிக்கெட் ஆட வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வருகைதான் என்னையும் மேம்படுத்திக் கொள்ள உந்தித் தள்ளுகிறது. ஆட்டத்தின் நுணுக்கங்களை சரி செய்து நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவையை இந்த இளம் வீரர்கள் உருவாக்கிவிட்டார்கள்' என்று விராட் கோலி நேற்று பேசியிருந்தார். அதாவது, வைபவ் சூர்யவன்ஷியின் தலைமுறையிலும் நாம் சர்வைவ் ஆக வேண்டுமெனில் அதற்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றே விராட் கோலி சொல்கிறார்.

டி20 யின் வீச்சுக்கு ஏற்ற வகையில் நவீனமாக தன்னை தகவமைத்துக் கொள்வதில் விராட் கோலிக்கு நிறைய சிக்கல்கள் இருந்திருக்கிறது. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் தன்னுடைய ஆட்டத்தை நவீனமாக மாற்றிக் கொள்ள கோலி வெகுவாக தடுமாறினார். 2020 ஐ.பி.எல் சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 121 மட்டுமே. ஆங்கர் இன்னிங்ஸ்களை மட்டுமே கோலியால் ஆட முடிந்தது. இன்னிங்ஸின் மையப்பகுதியில் கியரை மாற்றி ஆடுவதில் ரொம்பவே தடுமாறினார். நிறைய டாட்கள் ஆடினார். இந்த தேக்க நிலை அடுத்தடுத்த சீசன்களில் இன்னும் மோசமானது.
2021 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 119, 2022 சீசனில் அது இன்னமும் குறைந்து 115 ஆனது. 'ஸ்ட்ரைக்ரேட் என்பது ஓவர்ரேட்டட்' என ராகுல் இதே காலக்கட்டத்தில் பேசியிருப்பார். அந்த லீகில்தான் கோலியும் இருந்தார். விராட் கோலியின் ஆட்டத்தின் மீதும் எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது. இந்த சமயத்தில்தான் கோலி தன்னுடைய கேப்டன்சி பதவியிலிருந்தும் விலகினார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகியது கோலிக்கு பெரிய விடுதலையாக அமைந்தது. மேலும், ஆர்.சி.பி அணியும் கட்டமைப்பும் மாற தொடங்கியது. கோலியை தாண்டியும் சிறப்பாக ஆடக் கூடிய வீரர்களை அந்த அணியின் நிர்வாகம் வாங்கி போட்டது. இது கோலியின் மீதான அழுத்தத்தை குறைத்தது. அவருடைய ஆட்டத்தில் கூடுதல் கவனத்தை குவிக்கும் சௌகரியத்தை கொடுத்தது. விளைவு, விராட் தன்னுடைய ஆட்ட அணுகுமுறையை மாற்ற தொடங்கினார்.

ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுவதை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தன்னுடைய ஆட்டத்தை வேகப்படுத்தினார். ரிஸ்க் எடுத்து பௌலர்களை அட்டாக் செய்து ஆடினார். தான் அவுட் ஆகிவிட்டாலும் தனக்கு பின்னாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வீரர்கள் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை கோலிக்கு துணையாக இருந்தது. இந்த சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 165.
19 வருட ஐ.பி.எல் வரலாற்றில் கோலி எந்த சீசனிலும் இவ்வளவு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதில்லை. கோலியின் மிக மோசமான சீசனாக கருதப்படும் 2020 சீசனில் ஒவ்வொரு 11.29 பந்துக்கு மட்டுமே கோலி ஒரு பவுண்டரியையோ சிக்சரையோ அடித்திருந்தார். ஆனால், இந்த சீசனில் கோலி ஒவ்வொரு 4.15 பந்துக்கும் ஒரு பவுண்டரியையோ சிக்சரையோ அடித்திருக்கிறார்.
இந்த சீசனில் அதிக ரன்களை அடித்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி ஒவ்வொரு 2.4 பந்துகளுக்கு ஒரு பவுண்டரியையோ சிக்சரையோ அடித்திருக்கிறார். அதிக ரன்கள் அடித்திருக்கும் டாப் 5 வீரர்களில் சூர்யவன்ஷிக்கு பிறகு Balls/Boundary கணக்கில் முன்னிலையில் இருப்பது விராட் கோலியே.
'கோலி நெட்டில் எப்படி ஆடுகிறாரோ களத்திலும் அப்படியேத்தான் ஆடுவார். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது' என ரஜத் பட்டிதார் பேசியிருந்தார். ஆக, கோலி இப்போதைய இளம் வீரர்களை மனதில் வைத்து அவர்களுக்கு இணையான ரிசல்ட்டை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் பயிற்சியே மேற்கொண்டிருக்கிறார்.

எந்த தலைமுறை வீரராக வேண்டுமானாலும் இருக்கட்டும். விராட் கோலி அளவுக்கு நெட்டில் பயிற்சிக்காக அவர் அளவுக்கு அதிக நேரத்தை எந்த வீரரும் செலவிட மாட்டார். 38 வயதில் அதி தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக மட்டுமே இப்போதைய தலைமுறைக்கும் போட்டியளிக்கும் வகையில் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தை மாற்றியிருக்கிறார்.
'கோலி' என்கிற பிராண்ட் வேல்யூக்காகவே அவரால் ஆர்.சி.பி அணியில் இன்னும் பல சீசன்களுக்கு தொடர முடியும். ஆனால், கோலி அந்த நட்சத்திரத்தன்மைக்கு கிடைக்கும் சௌகரியத்தையெல்லாம் உடைத்து சாதிக்க நினைக்கிறார். இது கிரிக்கெட்டை கடந்துமே கூட பல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக அமையும்.!




















