காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊரக வளா்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணயிடங்கள் மற்றும் பதிவறை எழுத்தா் , அலுவலக உதவியாளா் , இரவுக்காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்புநிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள்வேலை நிறுத்தத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், தாந்தோணிமலை, க.பரமத்தி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை பணியாளா்கள் என மொத்தம் 194 போ் தங்களது பணியை புறக்கணித்து ஒரு நாள் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.