TVK: விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் | Photo Album
கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அர்ஜுனன் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் புகுந்து அவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, `சார்... சார்... நான் அடிப்பட்டு வந்துருக்கேன் சார். என் பேரு மீனாட்சி. காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்...’ என சத்தமாக பேசினார்.
அதைத்தொடர்ந்து, ஜெகதேவி சாலைப் பகுதிக்குச் சென்றவர் அங்கு இருந்த ஆண் நபரிடம் பேசுவதை போன்ற காட்சிகளும் அர்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குரல் பதிவுடன் தெளிவாக பதிவாகியிருந்தன.

பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்து, அர்ஜுனனும், அவரின் மனைவியும் `கொள்ளையர்களாக இருப்பார்களோ...?’ என அச்சத்துக்குள்ளாகி, கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே தங்கள் மகனுக்குப் போன் செய்திருக்கின்றனர். அவரும் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு, `கதவைத் திறக்க வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களின் வழியாக வேகமாக பரவியதால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். உண்மைத்தன்மை அறியாமல், ஊடகங்களும் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பகிர்ந்து, மக்களை பயத்திலேயே வைத்திருந்தது.
இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``மேற்கண்ட பெண் மிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 20-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவரின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அடித்ததில் அந்தப் பெண் உள்காயம் அடைந்தார்.

பர்கூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால் எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவைத் தட்டி உதவி கேட்டிருக்கிறார். பின்னர் அவர் பர்கூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
மேற்கண்ட குற்றச் சம்பவம் தொடர்பாக, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். சமூக வலை தளங்களில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



















