யாசகம் கேட்ட கை, இன்று கம்பீரமாய் ஸ்டியரிங் பிடிக்குது... திருநங்கை ஸ்ரீதேவியின்...
குதப்பி: `அரசை விமர்சித்தால் அனுமதி மறுப்பதா?'- புத்தக வெளியீட்டில் ஆதங்கப்பட்ட அமீர்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய “குதப்பி” நாவல் வெளியீட்டு விழா நடந்தது.
திரைப் பிரபலங்கள், இலக்கிய ஆளுமைகள், அரசியல் பிரமுகர்கள், வாசகர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நாவலின், கதையைத் தழுவி “குக்கர்” எனும் திரைப்படத்தை இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டத்தின் சமையல்காரர் குழுவொன்றின் தொழில் வாழ்க்கையை சுவாரசியமான வட்டார மொழியில் விவரித்துச் செல்கிறது நாவல்.
இந்நிகழ்வில், வரவேற்புரை ஆற்றிய நாவலாசிரியர் ம.காமுத்துரை நாவலின் கதைச் சம்பவங்களையும் அதன் பின்னணியையும் பேசுகையில் நெகிழ்ந்துப் போனார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, நடிகர் காளிவெங்கட், இயக்குநர்கள் ஏ.வெங்கடேசு, சுப்பிரமணிய சிவா, அமீர் ஆகியோர் பேசினர். அத்துடன், பாடலாசிரியர் யுகபாரதி, பாடகர் அலெக்சாண்டர் பாபு, நடிகை சங்கீதா உள்ளிட்டவர்களும் “ குதப்பி”நாவல் வாசிப்பனுபவம் பற்றியும் கரு.பழனிப்பன் உடனான உறவையும் பகிர்ந்தனர்.
நடிகர் காளிவெங்கட்டும், நடிகை சங்கீதாவும் “குக்கர்” படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேசிய ஒவ்வொருவரும் ஒரே போல் “குக்கர்” திரைப்படம் மீதான தங்களது எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் பேசிய, இயக்குநர் அமீர், சில நாட்களுக்கு முன்பு, இதே, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தவெக அரசை விமர்சித்து தான் பேசியதற்காக, இனிவரும் நாட்களில் அமீர் விருந்தினராக அழைக்கப்பட்டால் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லையென அரசு தரப்பில் ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திரைப்படத்திலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் பொதுவெளியிலும் அரசியல் பேசி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் பேசக் கூடாது என அழுத்தம் தருவது நகைப்பு என தவெக அரசை குத்தலாக விமர்சித்தார்.

ஆகையால், அரசியல் பேசுவதை தவிர்ப்பதாகக் கூறி, இயக்குநர் கரு.பழனிப்பன் ஆளுமையையும் அவரது திறமையையும் முன்வைத்து தனது பேச்சை அமைத்துக்கொண்டார்.
இத்தனை காலமும் திரைத்துறையில் ஆர்வம் காட்டாமல், தான் நம்பிய அரசியலை ஆதாயமில்லாமல் பேசிவந்தார் கரு.பழனியப்பன். அதனால், அவர் பெற்றது எதுவுமில்லை இழந்தது ஏராளம் என்றும் கூறினார் இயக்குநர் அமீர்.
- இராகுல் லட்சுமி



















