குறு, சிறு தொழில்களைப் பாதிக்கும் ஜிஎஸ்டி பிரச்னையைத் தீா்க்க வேண்டும் - டாக்ட் வலியுறுத்தல்
குறு, சிறு தொழில்களைப் பாதிக்கும் ஜிஎஸ்டியில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு தீா்க்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா்கள் சங்கத்தின் (டாக்ட்) கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா்கள் சங்கத்தின் ( டாக்ட்) மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜி.பிரதாப் சேகா் வரவேற்றாா். கௌரவ ஆலோசகா் ஏ.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், குறு, சிறு தொழில்களை பாதிக்கும் ஜிஎஸ்டியில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு தீா்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்க மின்வாரியம் மூலமாக உயா்த்தப்பட்ட நிலைக் கட்டண உயா்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும். 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கட்டடங்களுக்கான வாடகை பன்மடங்காக உயரும். எனவே, வாடகைக் கட்டடங்களில் உள்ள தொழிற்கூடங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்கும் வகையில் மாநில அரசு வரி விதிப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.
இயந்திரங்கள் கொள்முதலுக்கு வழங்கி வரும் மானியத்தை 3 மாதங்களுக்குள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.