`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விள...
"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.
இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், அதனைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி அப்பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம், அப்பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.
குழந்தை பிறந்த பிறகு அதனை யாருக்காவது தத்து கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பெண் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இம்மனு மீதான விசாரணையில் இறுதியில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்த நீதிபதிகள், பெண்ணின் வயிற்றில் உள்ள 30 வார கருவைக் கலைக்க அனுமதிகொடுத்ததனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ''குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்களுக்குச் சுதந்திரம் அவசியம். சம்பந்தப்பட்ட பெண் தனது நண்பருடன் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொண்டாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இதில் முக்கியப் பிரச்னை என்னவென்றால் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை சட்டப்பூர்வமற்றது மற்றும் தாய் அந்தக் குழந்தையைச் சுமக்க விரும்பவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபட்சத்தில், நீதிமன்றம் எந்தப் பெண்ணையும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது.
நாம் யாருடைய நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்? பிறக்காத குழந்தையினுடையதையா? அல்லது குழந்தை பெறப்போகும் தாயினுடையதையா? கருக்கலைப்பு செய்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க சில நேரங்களில் கால தாமதம் ஆகும்.

கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டதற்கு அப்பாற்பட்டு ஏராளமான கருக்கலைப்புகள் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்குகளும் உள்ளன. மேலும் மருத்துவர்கள் அதைச் செய்ய மாட்டோம் என்று கூறினால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் எங்கு செல்வார்கள்? போலி மருத்துவர்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத மருத்துவர்களிடம்தான் செல்வார்கள்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கு விசாரணையின்போது டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் பெண்ணின் கருவைக் கலைப்பதால் அப்பெண்ணிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறி அறிக்கை தாக்கல் செய்து இருந்தனர்.
சம்பந்தப்பட்ட பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையைப் பெற்றெடுப்பதால் ஏற்படும் சமூகக் களங்கத்தின் காரணமாக, கர்ப்பத்தை முழுமையாகத் தொடர வற்புறுத்துவது அந்தப் பெண்ணுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.
இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டாலும், மனுதாரரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
20 வார கருவை டாக்டர்களே கலைக்க முடியும். 24 வார கருவை மருத்துவக் குழுவின் ஒப்புதல் பெற்று கலைக்கலாம்.

















